Published : 02 Jan 2018 01:05 PM
Last Updated : 02 Jan 2018 01:05 PM
தன் காதை அறுத்துக் காதலிக்குப் பரிசளித்ததாகச் சொல்லப்படும் கதை மூலம் அறிமுகமானவர் ஓவியர் வான்கா. நவீன ஓவியத்தின் பிதாமகன் என்று போற்றப்படுபவர். ஓவியம் வேறு, வாழ்க்கை வேறு அல்ல என்று சொல்லும் விதமாக 37 வயதுக்குள் 900 ஓவியங்களையும் 1,100 வரைபடங்களையும் உயிரும் உதிரமும் தவிப்பும் கலந்து படைத்தார். 125 ஓவியக் கலைஞர்கள் சேர்ந்து ‘லவ்விங் வின்சென்ட்’ என்ற ஓவிய சினிமாவாக ஆக்கி அந்த அமரக் கலைஞனுக்குக் கூடுதல் புகழ் சேர்த்துள்ளனர். இரண்டு இந்தியப் பெண் ஓவியர்களும் ‘லவ்விங் வின்சென்ட்’-ல் பணியாற்றியுள்ளனர். அடிப்படையில் கணினி மென்பொருள் பொறியாளர்களான இவர்கள் ஓவியத்தின் மீதான காதலால் முழுநேர ஓவியர்களாகத் தற்போது திகழ்கிறார்கள்.
ஓவியங்கள் எப்படி சினிமா ஆயின?
‘லவ்விங் வின்சென்ட்’ உலகின் முதல் ஓவிய சினிமா (பெயிண்டட் சினிமா) என்றழைக்கப்படுகிறது. உலகிலேயே அதிக காலத்தை எடுத்துக்கொள்ளும் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த சினிமாவை எடுத்து முடிக்க இப்படத்தின் இயக்குநர்கள் டோராடோ கோபியலா, ஹக் வெல்ச்மென் தம்பதிக்கு ஆறு ஆண்டுகள் ஆகியுள்ளன. ஓவியர் வின்சென்ட் வான்காவின் இறுதி நாட்கள்தான் இப்படத்தின் கதை. வான்கா வரைந்த ஓவியங்கள், உருவச் சித்திரங்களின் பாணியிலேயே வான்காவை மறுபடைப்பு செய்வதற்காக உலகம் முழுவதுமிருந்து 5,000 ஓவியர்களிலிருந்து 125 ஓவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கனவைத் துரத்திய சுச்சி முலே
பெங்களூருவைச் சேர்ந்த சுச்சி முலே, கணினிப் பொறியாளராக இருந்து 2014-ம் ஆண்டு தனது லட்சியமான ஓவியத் துறைக்கு வந்தவர். ‘லவ்விங் வின்சென்ட்’ ட்ரெய்லரை ஃபேஸ்புக்கில் பார்த்து விண்ணப்பித்தவர். “பூக்கள் போன்ற சின்னச் சின்ன உருவங்கள் வரும் காட்சிகளை வரைவது மிகவும் சிரமமாக இருக்கும். அப்படியான நுட்பமான வேலையைச் செய்யும்போது ஒரு நாளைக்குப் பத்து ஃபிரேம்களை மட்டுமே உருவாக்க முடியும். கதாபாத்திரங்களின் முகபாவங்களைச் சொல்லும் ஃபிரேம்கள் இன்னும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று ஃபிரேம்களை மட்டுமே வரைய முடியும்” என்கிறார் சுச்சி.
ஓவியர் அணியில் ஹேமாலி வடாலியா
ஓவியர் வான்காவின் படைப்புகள் மீது ஆர்வம் கொண்டிருந்த ஓவியர் ஹேமாலியின் விண்ணப்பத்தை ஏற்று 2016-ம் ஆண்டு பிரேக்த்ரூ ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் போலந்திலுள்ள டான்ஸ்க் நகரத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. அங்கு நேர்முகத் தேர்வில் வென்ற பிறகு வான்காவின் ஓவியப் பாணி, அனிமேஷன் ஆகியவற்றில் மூன்று வாரங்கள் கடும் பயிற்சி தரப்பட்டது. “ஏழு முழு ஷாட்களுக்கு எனது ஓவியங்கள் பயன்பட்டன.
நான் 358 ஃபிரேம்களை வரைய வேண்டியிருந்தது. நாங்கள் வான்காவின் தூரிகைத் தீற்றல்கள், அவர் பயன்படுத்திய வண்ணக் கலவைகளையே பயன்படுத்த வேண்டியிருந்தது. ஒரு காட்சிக்குப் பல்வேறு ஓவியக் கலைஞர்கள் பணியாற்ற வேண்டியிருந்தது. ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருந்த ஷாட்களின் வண்ணங்களுடன் நாங்கள் புதிதாக உருவாக்கும் படங்களின் வண்ணங்கள் பொருத்தமாக இருக்க வேண்டியது அவசியம். நாம் பெயிண்ட் செய்யும் வண்ணங்கள் கம்ப்யூட்டர் திரையில் வித்தியாசமாகத் தெரியும்.
அதனால் அதையும் அனுசரித்தே வரைய வேண்டும். கதாபாத்திரங்களின் தோல் நிறம், உடைகள், ஒளி, இருள் ஆகியவற்றிலும் கவனத்தோடு இருக்க வேண்டும்” என்று சொல்லும் ஹேமாலி, தன் மீது பெரும் பாதிப்பை நிகழ்த்திய கலைஞனுக்கு மரியாதை செலுத்துவதற்கான அரிய வாய்ப்பாக இந்தப் பணியைக் கருதுகிறார்.
கவின்கலைஞருக்கான தேவை
இயக்குநர்கள் டோராடோ கோபியலா, ஹக் வெல்ச்மென் இருவரும் சேர்ந்து உருவாக்கிய இந்தக் கனவுப் படைப்புக்கான தொழில்நுட்பத்தை முடிவுசெய்வதற்கே நான்கு ஆண்டுகள் பிடித்தன. அதற்குப் பிறகு ஆறு ஆண்டுகள், நூற்றுக்கணக்கான கலைஞர்களின் பணிகளை உட்கொண்ட சினிமா 2017 ஜூன் மாதம் வெளியானது.
இன்றைய அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சியால் பல பாரம்பரியத் துறைகளும் அதைக் காலங்காலமாக செய்துவந்தவர்களும் நலிவடைந்துகொண்டிருக்கிறார்கள். குறிப்பாக கிராஃபிக்ஸ், விஷுவல் எஃபெக்ட்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் கோலோச்சும் காலகட்டத்தில் கவின்கலைஞர்களுக்கான தேவையும் முக்கியத்துவமும் அரிதாகிவிட்டன. இந்நிலையில் முழுக்க முழுக்க ஓவியங்களால் உருவாக்கப்பட்ட இப்படம் காலத்தை வென்ற ஓவியக் கலைஞனுக்கு மட்டுமான சமர்ப்பணம் அல்ல. வாழும் ஓவியக் கலைஞர்களுக்கு நல்ல பணிவாழ்க்கைக்கான புதிய திறப்பாகவும் அமைந்துள்ளது.
ஓவியம் டு தொழில்நுட்பம்
முதலில் புளூ மேட் பின்னணியில் அசலான நடிக, நடிகையரைக் கொண்டு மொத்தப் படத்தின் காட்சிகளும் படம்பிடிக்கப்பட்டிருந்தன. அந்தக் காட்சிகள் ஓவியர்களின் கேன்வாஸ் மீது புரொஜெக்ட்செய்யப்பட்டு நடிகர்களின் அசைவுகள் ஓவியர்களால் தைல வண்ணத்தில் வரையப்படும். ஒரு நொடிக்கு 12 ஃப்ரேம்கள் என்பதால் நொடிக்கு 12 ஓவியங்கள் தேவைப்படும். ஒரு கதாபாத்திரம் தலையைத் திருப்பும் தருணம்கூடச் சின்னச் சின்ன மாறுதல்களுடன் ஒரே ஓவியத்தில் 12 முறை நுட்பமாகத் திருத்தப்படும். இப்படியாக 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃபிரேம்கள் உருவாக்கப்பட்டன. ஆயிரம் தனித்தனி ஓவியங்கள் உருவாக்கப்பட்டன. பின்னர், இந்த ஓவியங்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு கேமராவில் கோத்து அனிமேட் செய்யப்பட்டதுதான் நாம் தற்போது காணும் முழு நீளப்படம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT