Last Updated : 12 Dec, 2017 03:27 PM

 

Published : 12 Dec 2017 03:27 PM
Last Updated : 12 Dec 2017 03:27 PM

சுகாதாரத் தூதரான மாணவி!

 

சு

த்தமான காற்று, சுகாதாரமான சூழலைத் தேடி மக்கள் அலையும் நிலைவந்துவிட்டது. அதிலும், புறநகர்ப் பகுதிகளில் கழிப்பிட வசதிகளின் போதாமையால் அங்குள்ள மக்கள் இன்னும் மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர். சுத்தம், சுகாதாரம் பேணிக் காக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. முழுமையான மாற்றம் நிகழ அரசின் நடவடிக்கைகள் மட்டுமின்றி மக்களின் முயற்சியும் இன்றியமையாதது. இதைத் தக்க நேரத்தில் உணர்ந்து செயலில் இறங்கியிருக்கிறார் விருதுநகரைச் சேர்ந்த ராமதேவி.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வத்திராயிருப்பு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவருகிறார் ராமதேவி. இவர் தன் பெற்றோரைச் சம்மதிக்கவைத்துத் தனது வீட்டில் தனிநபர் இல்லக் கழிப்பறையைக் கட்டவைத்தது மட்டுமல்லாமல், கிராம மக்களிடமும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார். இதற்காக, விருதுநகர் மாவட்டச் சுகாதாரத்துக்கான முதல் தூதராகவும் நியமிக்கப்பட்டுக் கவுரவிக்கப்பட்டுள்ளார்.

Virudhunagar-Pen Indru story Photo-1right

“நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியர், ‘யாருடைய வீடுகளில் கழிப்பறைகள் உள்ளன?’ என்று கேட்டார். அப்போது சிலர் மட்டுமே எழுந்து நின்றனர். எங்கள் வீட்டில் இல்லாததால் நான் எழுந்து நிற்கவில்லை. அப்போது, நான் தலைகுனிந்தேன். இனியும் இப்படித் தலை குனியக் கூடாது என்று நினைத்துக்கொண்டேன். வீட்டில் தனிநபர் கழிப்பறை கட்டுவது குறித்து அம்மா, அப்பாவிடம் கலந்துபேசி சம்மதிக்கவைத்தேன்” என்கிறார் ராமதேவி.

அதையடுத்து, கூலித் தொழிலாளியான தன்னுடைய தந்தை ராமரையும் தாய் செல்வியையும் அழைத்துக்கொண்டு ஊராட்சி அலுவலகம் சென்று விசாரிதார் ராமதேவி. தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்ட ரூ.12 ஆயிரம் கொடுக்கப்படுவது அப்போதுதான் அவர்களுக்குத் தெரியவந்தது. அதைப் பெற்றுக்கொண்டு தங்களுடைய வீட்டில் கழிப்பறை கட்டினார்கள்.

“என் வீட்டில் மட்டும் கழிப்பறை இருந்தால் போதாது, இதுபோன்று ஒவ்வொரு வீட்டிலும் தனிநபர் கழிப்பறை கட்டப்பட வேண்டும். சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தால் மட்டுமே எந்தவொரு நோய்த்தொற்றுக்கும் ஆளாகாமல், நாம் படிப்பில் முழுக் கவனம் செலுத்த முடியும். ஆகையால், முதலில் சக மாணவிகளிடம் இது குறித்து எடுத்துச் சொன்னேன். பின்னர், எங்களுடைய கிராமத்தில் உள்ளவர்களிடமும் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். தற்போது எங்களுடைய ஊரில் ஏராளமானோர் தங்கள் வீடுகளில் தனிநபர் இல்லக் கழிப்பறைகளைக் கட்டத் தொடங்கிவிட்டனர். எங்கள் கிராமத்தில் மட்டுமின்றி, விருதுநகர் மாவட்டம் முழுவதும் அனைத்து வீடுகளிலும் தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டச் செய்யும் வகையில் எனது விழிப்புணர்வு பிரச்சாரம் தொடரும்” என்கிறார் மாணவி ராமதேவி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x