Published : 12 Dec 2017 04:04 PM
Last Updated : 12 Dec 2017 04:04 PM
மருத்துவத் துறையில் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக இந்தியா, கியூபா ஆகிய நாடுகளுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் டிசம்பர் 6 அன்று கையெழுத்தானது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா, கியூபாவின் பொது சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ரோபர்டோ இருவரும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மருத்துவத் துறையில் இரு நாடுகளின் அமைச்சகங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம். மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள், மருந்துகள், மருத்துவ சேவைகள் போன்றவற்றை இரு நாடுகளும் பகிர்ந்துகொள்ள இருக்கின்றன.
நேபாளத்தில் பருவநிலை மாற்ற மாநாடு
பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டை நேபாள ஜனாதிபதி வித்யா தேவி பண்டாரி டிசம்பர் 3 அன்று தொடங்கிவைத்தார். ‘இந்துகுஷ் இமயமலை: ஆசியாவின் நிலையான எதிர்கால வளர்ச்சிக்கான தீர்வுகள்’ என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நான்கு நாட்கள் நடைபெற்றது. புவி வெப்பமடைவதால் இந்துகுஷ் மலைத்தொடரில் ஏற்பட்டிருக்கும் பாதகமான விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம். நேபாளச் சுற்றுச்சூழல் அமைச்சகம், சர்வதேச ஒருங்கிணைந்த மலைகள் வளர்ச்சிக்கான மையத்துடன் (ICIMOD) இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. இந்தியா, வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 300 நிபுணர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா அங்கீகாரம்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அதிகாரபூர்வமாக டிசம்பர் 6 அன்று அங்கீகரித்தார். தற்போது, இஸ்ரேலின் தலைநகரமாக இருக்கும் டெல் அவிவ் நகரத்திலிருந்து அமெரிக்கத் தூதரகம் ஜெருசலேமுக்கு மாற்றப்படும் என்றும் ட்ரம்ப் அறிவித்தார். ட்ரம்பின் இந்தச் சர்ச்சைக்குரிய அறிவிப்பு, மத்திய கிழக்கு நாடுகளில் சீற்றத்தை உருவாக்கியிருக்கிறது.
பாலஸ்தீனியர்கள் ட்ரம்பின் இந்த அறிவிப்பை எதிர்த்து மேற்குக் கரையிலும், காஸா கரையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் 70 ஆண்டு வெளியுறவுக் கொள்கையில் மாற்றம்செய்திருக்கும் ட்ரம்பின் இந்த சர்ச்சைக்குரிய அறிவிப்பு பற்றி ஐ.நா. பாதுகாப்பு குழுவும் டிசம்பர் 8 அன்று விவாதித்தது.
மண்ணின் நலனுக்கொரு தினம்
உலக மண் தினம் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 5 அன்று ஐ.நா.வின் உணவு, விவசாய நிறுவனத்தால் (FAO) கொண்டாடப்படுகிறது. உணவுப் பாதுகாப்புக்கும் ஆரோக்கியமான சூழலுக்கும் மனிதர்களின் நலனுக்கும் மண்ணின் தரம் முக்கியம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது. ‘புவியைப் பாதுகாப்பது மண்ணிலிருந்து தொடங்குகிறது’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்த ஆண்டு மண் தினம் கொண்டாடப்பட்டிருக்கிறது. உலகின் 95 சதவீத உணவுகளுக்கு அடிப்படையாக மண் இருக்கிறது. தற்போது உலக அளவில் 33 சதவீத மண்ணின் தரம் சிதைந்திருப்பதாக ஐ.நா.வின் உணவு, விவசாய நிறுவனம் தெரிவித்துள்ளது.
சூரிய ஆற்றலுக்கான சர்வதேசக் கூட்டணி
இந்தியா கொண்டுவந்த சர்வதேசச் சூரியக் கூட்டணியை (International Solar Alliance) 19 நாடுகள் உறுதி செய்திருப்பதால், டிசம்பர் 6 அன்று உடன்படிக்கை சார்ந்த சர்வதேச அரசு அமைப்பாக உருவாகியிருக்கிறது. இந்தியாவை அடிப்படையாகவைத்து உருவாகியிருக்கும் முதல் உடன்படிக்கை சார்ந்த சர்வதேச அரசு அமைப்பு இந்தச் சூரியக் கூட்டணி. இதுவரை, இந்தக் கூட்டணியில் 42 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. 19 நாடுகள் இதன் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. சூரிய ஆற்றலின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக இந்த அமைப்பை பிரதமர் நரேந்திர மோடியும் பிரெஞ்சு முன்னாள் அதிபர் ஃபிரான்ஸுவா ஹோலாண்டேவும் இணைந்து 2015 நவம்பரில் பாரிஸ் பருவநிலை மாநாட்டில் தொடங்கிவைத்தனர். இந்த அமைப்பின் செயலகம் குருகிராமில் இருக்கும் தேசியச் சூரிய ஆற்றல் மைய வளாகத்தில் செயல்படுகிறது.
பணிபுரிவதற்கான சிறந்த நிறுவனம்
அமெரிக்காவில் பணிபுரிவதற்கான சிறந்த 100 இடங்களை ‘கிளாஸ்டோர்’ என்ற பிரபலமான வலைத்தளம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஃபேஸ்புக் நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. சர்வதேச மேலாண் நிறுவனமான ‘பேய்ன் அண்ட் கம்பெனி’ இரண்டாம் இடத்தையும் பாஸ்டன் கன்ஸல்டிங் குரூப், ‘இன்-என்-அவுட் பர்கர்’, கூகுள் போன்ற நிறுவனங்கள் அதற்கு அடுத்தடுத்த இடங்களையும் பிடித்திருக்கின்றன. கடந்த ஆண்டு, இந்தப் பட்டியலில் 36-வது இடத்தில் இருந்த பிரபல நிறுவனமான ‘ஆப்பிள்’, இந்த ஆண்டு 84-வது இடத்துக்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. ‘லிங்க்டு-இன்’ 21-வது இடத்தையும் ‘அடோப்’ 31-வது இடத்தையும் பிடித்திருக்கின்றன. 2016 நவம்பர் 1 முதல் 2017 அக்டோபர் 22 வரையிலான காலகட்டத்தில் இந்நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் விமர்சனங்கள் அடிப்படையில் இந்தத் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
நாகாலாந்தில் இருவாச்சித் திருவிழா
நாகாலாந்தில் மாநில அமைப்பு தினமான டிசம்பர் 1அன்று இருவாச்சித் திருவிழா கொண்டாட்டம் தொடங்கியது. நாகா பழங்குடியினர் தங்கள் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் இசை, நடனம், உணவு போன்ற அம்சங்களில் பாதுகாத்து வருவதை வெளிப்படுத்தும் விதமாக இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது. டிசம்பர் 1முதல் 10 வரை பத்து நாட்கள் இந்தத் திருவிழா நடைபெற்றது. நாகாலாந்து மாநிலப் பழங்குடியினரின் செறிவான கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் இது கொண்டாடப்படுகிறது. பழங்குடியினரின் நாட்டுப்புறக் கதைகள், பாடல்கள், நடனங்கள் ஆகியவற்றில் இருவாச்சி பறவைக்கு மதிப்புக்குரிய இடம் இருப்பதால், இந்தத் திருவிழா, ‘இருவாச்சித் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
காற்று மாசைப் பதிவு செய்யும் செயற்கைக்கோள்
உலகின் காற்று மாசு அளவைப் பின்தொடரும் ஐரோப்பிய செயற்கைக்கோளான ‘சென்டினல் - 5பி’ (Sentinal - 5P) பூமியின் வளிமண்டலத்தைப் பற்றிய புதிய காட்சிகளை அனுப்பியிருக்கிறது. இந்தச் செயற்கைக்கோள் காற்றை மாசு படுத்தும் வாயுக்களையும் துகள்களையும் தினசரி காட்சிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டிருக்கும் நகரங்களிலும், மின் உற்பத்தி நிலையங்கள் இருக்கும் நகரங்களிலும் நைட்ரஜன் டை ஆக்ஸைடு அதிகமாக இருப்பதாக இந்தச் செயற்கைக்கோள் அனுப்பிய படங்களைப் பார்த்த விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தியாவில் பாட்னா நகரத்தின் வடக்குப் பகுதியும் ராய்பூரின் தெற்குப் பகுதியும் அதிகமாகக் காற்று மாசால் பாதிக்கப்பட்டிருப்பது இந்தப் படங்களில் பதிவாகியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT