Last Updated : 05 Dec, 2017 12:05 PM

 

Published : 05 Dec 2017 12:05 PM
Last Updated : 05 Dec 2017 12:05 PM

சேதி தெரியுமா? - ஆசிய மாரத்தானை வென்ற கோபி தொனாகல்

சீனாவின் டொங்குவான் நகரில் நவம்பர் 26 அன்று 2017-ம் ஆண்டுக்கான ஆசிய மாரத்தான் சேம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த ஆசிய மாரத்தான் போட்டியில் ஆடவர் பிரிவில் தங்கம் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் கோபி தொனாகல். 2 மணி நேரம், 15 நிமிடங்கள், 48 நொடிகளில் இந்த மாரத்தான் ஓட்டத்தைக் கடந்து இந்தப் பதக்கத்தை வென்றிருக்கிறார் கோபி.

உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரே பெட்ரோவ் வெள்ளி பதக்கமும் மங்கோலியாவைச் சேர்ந்த பியாம்பலேவ் வெண்கல பதக்கத்தையும் இந்த மாரத்தான் போட்டியில் வென்றிருக்கின்றனர். இதற்கு முன், ஆசிய மாரத்தானில் இந்தியாவைச் சேர்ந்த ஆஷா அகர்வாலும் (1985) சுனிதாவும் (1992) மகளிர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருக்கின்றனர்.

5CHGOW_SHAKTHIKANTA_DASright

 

இந்தியாவுக்கான ஜி-20 மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்

ஷக்திகந்தா தாஸ், இந்தியாவுக்கான ஜி-20 மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக (Sherpa) 31, டிசம்பர் 2018 வரை பதவிவகிப்பார் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்த ஜி-20 மாநாட்டில் நிதி தடம், வளர்ச்சி தடம் என இரண்டு தடங்கள் நிர்வகிக்கப்படுகின்றன.

இதில் வளர்ச்சி தடத்தை ‘ஷெர்பா’வும், நிதி தடத்தை பொருளாதார செயலரும் இந்தியாவின் சார்பில் ஜி-20 மாநாட்டில் ஒருங்கிணைக்கின்றனர். ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களின் தனிப்பட்ட பிரதிநிதியாக ‘ஷெர்பா’ இருப்பார். தலைவர்களின் சந்திப்புக்கு முன் தேவையான தகவல்களைத் தொகுத்து வழங்குவதும் ‘ஷெர்பா’ பொறுப்பு.

 

தேசிய நெருக்கடி நிர்வாக மையம்: இந்தியாவுக்கு ரஷ்யா உதவி

பேரிடர், அவசர சூழ்நிலைகள் போன்றவற்றைக் கையாள்வதற்கு தேசிய நெருக்கடி மேலாண்மை மையம் (National Crisis Management Centre) அமைக்க இந்தியாவுக்கு ரஷ்யா உதவிசெய்வதாக உறுதியளித்திருக்கிறது.

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நவம்பர் 28 அன்று இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்யாவின் அவசர சூழ்நிலைகள் துறை அமைச்சர் விளாதிமிர் புக்கோவ் இடையே நடந்த சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவின் ‘EMERCOM’ அமைச்சகம் இந்தியாவில் தேசிய நெருக்கடி மேலாண்மை மையம் உதவுவதற்கு இருதரப்பு நாடுகளும் ஒப்புதல் தெரிவித்திருக்கின்றன.

உலகளாவிய தொழில்முனைவு மாநாடு 2017

உலகளாவிய தொழில்முனைவு மாநாடு, ஹைதராபாத்தில் நவம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். அமெரிக்க அரசுடன் இணைந்து இந்தியாவின் ‘நிதி ஆயோக்’ மையம் இந்த மாநாட்டை ஒருங்கிணைத்திருக்கிறது. ‘முதலில் பெண்கள், அனைவருக்கும் செழிப்பு’ என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகளும், அதிபரின் ஆலோசகருமான இவாங்கா ட்ரம்ப் இந்த மாநாட்டில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் கலந்துகொண்டிருக்கிறார். 170 நாடுகளைச் சேர்ந்த 1500 தொழில்முனைவோர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றிருக்கின்றனர்.

 

5CHGOW_MIRABAI

தங்கம் வென்ற மீராபாய் சானு

கலிஃபோர்னியாவில் நவம்பர் 29 அன்று நடைபெற்ற உலகப் பளு தூக்குதல் சேம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார்.

இந்தியாவைச் சேர்ந்த கர்ணம் மல்லேஸ்வரி தங்கப் பதக்கம் வென்ற இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, மீராபாய் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இந்தப் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ பிரிவில் மொத்தம் 194 கிலோ (85 கிலோ, 109 கிலோ) எடையைத் தூக்கி வெற்றிபெற்றிருக்கிறார் மீராபாய்.

செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியிலும் இவர் தங்கம் வென்றிருந்தார்.

 

நகர்ப்புறப் போக்குவரத்து புதிய ஒப்பந்தம்

இந்தியா, பிரிட்டன் நாடுகளுக்கிடையே நகர்ப்புறப் போக்குவரத்துத் துறையில் ஒத்துழைப்பு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நவம்பர் 27 அன்று நடைபெற்றது. மத்தியப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, பிரிட்டன் போக்குவரத்துச் செயலர் கிரிஸ் கிரேலிங் இருவரும் லண்டனில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நகர்ப்புறப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான கொள்கைகள் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

இந்தியா - இத்தாலி புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியா, இத்தாலி இடையே சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் நவம்பர் 29 அன்று கையெழுத்தாகியிருக்கிறது. மத்திய சுகாதார, குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா, இத்தாலியின் சுகாதாரத் துறை அமைச்சர் பீட்ரைஸ் லோரன்ஸின் இருவரும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றனர். மருத்துவர்கள், மருத்துவ அலுவலகர்கள், சுகாதார நிபுணர்களுக்கான பயிற்சி, மருத்துவச் சாதனங்கள் பரிமாற்றம், மருந்துகள் தொடர்பான வர்த்தக வளர்ச்சி வாய்ப்புகள் போன்றவற்றை உள்ளடக்கி இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.

சூரியனை ஆய்வுசெய்யும் ஆதித்யா எல்-1

சூரியனை ஆய்வுசெய்யும் முதல் திட்டமான ‘ஆதித்யா எல்-1’ 2019-ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் 1,500 கிலோ எடையுடைய ‘ஆதித்யா எல்-1’ செயற்கைக்கோள் லாக்ராஞ்சியன் ‘எல்-1’ புள்ளி என்ற சுற்றுப்பாதையில் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்படுகிறது. இந்தத் திட்டத்தால், சூரியனின் ஒளிக்கோளம் (Photosphere), நிற மண்டலம் (Chromosphere) ஒளிர் மகுடம் (Corona) போன்றவை ஆய்வுசெய்யப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x