Last Updated : 05 Dec, 2017 11:47 AM

 

Published : 05 Dec 2017 11:47 AM
Last Updated : 05 Dec 2017 11:47 AM

துறை அறிமுகம்: புவியோடு உறவாடி...

சிலர் அறிவியல் துறை வழங்கும் படிப்புகளை மட்டும் விரும்பலாம். இன்னும் சிலரோ தொழில்நுட்பத் துறை சார்ந்த படிப்புகளை மட்டும் விரும்பலாம். இந்த இரண்டும் கலந்த துறை என்றால், அங்கே சவாலுக்கும் பஞ்சம் இருக்காது. படிக்கிறபோது மட்டுமல்ல, அந்தப் படிப்பு தருகிற வேலையும் சவால் நிறைந்ததாகவே இருக்கும். அத்தகையதுதான் ‘ரிமோட் சென்சிங்’ என்றழைக்கப்படும் தொலையுணர்வு, ‘ஜியோ இன்ஃபர்மேடிக்ஸ் டெக்னாலஜி’ என்றழைக்கப்படும் புவித் தகவலியல் தொழில்நுட்பப் படிப்பு.

தொடக்கம்

ரிமோட் சென்சிங், ஜியோ இன்ஃபர்மேடிக்ஸ் தொழில்நுட்பப் படிப்புகள் இந்தியாவில் உருவானதன் பின்னணியில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு உள்ளது. இந்தியாவில் முதன்முதலாகத் தொலையுணர்வு கல்வி 1966-ல் டேராடூனில் அறிமுகம்செய்யப்பட்டது. சர்வே ஆஃப் இந்தியா துறையின் கீழ் செயல்பட்ட அந்தக் கல்வி நிறுவனம், ஆரம்ப காலத்தில் இந்திய போட்டோ-இன்டர்பிரடேஷன் (Photo Interpretation) கல்வி நிறுவனம் என்று அழைக்கப்பட்டது. 1972-ல் படிப்புகளை வழங்கத் தொடங்கிய அந்தக் கல்வி நிறுவனம் தொலையுணர்வு, புவித் தகவலியல் தொழில்நுட்பம் போன்ற படிப்புகளை வழங்கத் தொடங்கியது. இந்திய விண்வெளித் துறையின்கீழ் கொண்டுவரப்பட்ட, இந்தக் கல்வி நிறுவனம் ‘இந்திய ரிமோட் சென்சிங் நிறுவனம்’ என்று பெயர் மாற்றப்பட்டது.

தொலைதூரத்தை ஆராயலாம்

ரிமோட் சென்சிங், ஜியோ இன்ஃபர்மேடிக்ஸ் தொழில்நுட்பப் படிப்புகள் சற்றுச் சவாலானவை. இயற்கை வளத்தைக் கண்டறியும் சர்வே, கடல் ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, பேரிடர் மேலாண்மை, வான்வெளி அறிவியல், புவி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் போன்றவை இதன் கீழ்தான் வருகின்றன. இஸ்ரோவின் பல்வேறு ஆராய்ச்சி நடவடிக்கைகளில் பங்குகொள்வதும் அதுதொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதும் இந்தப் பிரிவின் வசம்தான் உள்ளன.

ரிமோட் சென்சிங், ஜியோ இன்ஃபர்மேடிக்ஸ் தொழில்நுட்பம் என்பது நேரடியாக நெருங்காமல் தொலை தூரத்தில் உள்ள ஒரு பொருள் அல்லது இடத்தைப் பற்றி ஆராயும் படிப்பு. இதில் அறிவியலும் இருக்கும்; தொழில்நுட்பமும் இருக்கும். ஆவலுக்குத் தீனி தரும் ரிமோட் சென்சிங், ஜியோ இன்ஃபர்மேடிக்ஸ் துறைகள் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் வழங்கப்படும் படிப்பு அல்ல. தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் மட்டுமே இப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

எதைப் படிக்கலாம்?

பெரும்பாலும் முதுகலை அளவில் மட்டுமே இப்படிப்புகள் வழங்கப்படுவது இத்துறையின் சிறப்பு. இப்படிப்பில் சேர ஏதாவது ஒரு இளங்கலை அறிவியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ரிமோட் சென்சிங், ஜியோ இன்ஃபர்மேடிக்ஸ், இயற்கைச் சீற்றங்கள், பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளில் எம்.எஸ்சி. படிப்புகள்.

ரிமோட் சென்சிங் மற்றும் ஜி.ஐ.எஸ். பயன்பாடு என்ற துறையில் எம்.டெக். படிப்பு.

ஜியோ இன்ஃபர்மேடிக்ஸ் தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகள் பி.எச்.டி. ஆய்வுக்கான பாடங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

சில பல்கலைக்கழகங்களில் ஜியோடெக்னாலஜி, ஜியோஇன்ஃபர்மேடிக்ஸ் என்ற 3 ஆண்டுகள் பி.டெக். விரைவுப் படிப்பும் வழங்கப்படுகிறது.

டிப்ளமோ படிப்பு

இந்தத் துறையின் கீழ் குறுகிய காலப் படிப்புகள்கூட உள்ளன. டேராடூனில் உள்ள இந்திய ரிமோட் சென்சிங் கல்வி நிறுவனத்தில் ரிமோட் சென்சிங் மற்றும் இமேஜ் இன்டர்பிரிடேஷன் என்ற பிரிவில் 8 வாரக் காலச் சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது. 3 மாதங்கள், 4 மாதங்கள், 10 மாதங்கள் என முதுநிலை டிப்ளமோவிலும் இங்குப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு

அதெல்லாம் சரி, இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தால், எங்கெங்கு வேலைக்குப் போகலாம்? வரைபடங்கள் (மேப்) தயாரித்தல், விண்வெளி ஆய்வு, வானிலை ஆய்வு, விவசாய நில ஆய்வு, வன ஆய்வு, வள ஆய்வுகள் என அரசுத் துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. ரிமோட் சென்சிங் படிப்புகளைப் படித்தவர்கள் இயற்கை வள ஆய்வுகள், புவி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல், கடல் பற்றிய ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுச்சூழல் மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளில் உலக அளவில் ஈடுபடுகின்றனர். எனவே, இதைப் படித்தவர்களுக்கு வெளிநாடுகளிலும் அதிகம் வரவேற்பு உள்ளது.

இதைப் படிப்பவர்கள் நிலநடுக்கம் தொடர்பாக மிகவும் நுணுக்கமான ஆய்வை மேற்கொள்ள முடியும். மலைப்பிரதேசங்களில் நிலச்சரிவைத் தடுப்பதற்கான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க முடியும். எந்தெந்தப் பகுதியில் என்னென்ன வளங்கள் மறைந்து கிடக்கின்றன என்பதையும் கண்டுபிடிக்கலாம். இப்போது சொல்லுங்கள், இது சவாலான படிப்புதானே!

நிலச்சரிவு அபாயம் கண்டுபிடிப்பு

புகழ்பெற்ற திருமலா திருப்பதி மலையில் எங்கெங்கு நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்பது ரிமோட் சென்சிங் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது. திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ரிமோட் சென்சிங் மையத்தின் உதவியுடன் 2007-ல் இது சாத்தியமானது. திருப்பதி மலையில் 42 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, அது பற்றிய ஆய்வறிக்கை ஆந்திர அரசுக்கும் திருப்பதி தேவஸ்தானத்துக்கும் வழங்கப்பட்டது. ரிமோட் சென்சிங் பற்றிய படிப்புக்கு இது ஒரு சிறு உதாரணம்தான். இதேபோல் பல பல்கலைக்கழகங்களில் உள்ள ரிமோட் சென்சிங் மற்றும் ஜியோ இன்ஃபர்மேடிக்ஸ் துறை சார்பாக பலவிதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ரிமோட் சென்சிங் தொடர்பாக மேலும் அறிய: http://www.iirs.gov.in/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x