Last Updated : 21 Jul, 2014 09:54 AM

 

Published : 21 Jul 2014 09:54 AM
Last Updated : 21 Jul 2014 09:54 AM

லதா மங்கேஷ்கரைச் சுற்றி எறும்புப் பவுடரா?- ஆங்கிலம் அறிவோமே

சிலர் ‘‘GIVE HIM A BIG HAND’’ என்று சொல்வது அபத்தமாக இருக்கிறதே. இது தவறுதானே? என்று கேட்டிருக்கிறார் வாசகர் ஒருவர்.

பாடகர் ஒருவர் பிரமாதமாகப் பாடுகிறார். உடனே ‘’GIVE HIM A BIG HAND’’ என்று தொகுப்பாளர் கூறக்கூடும்.

கூட்டத்தில் யாருடைய கை மிகப் பெரியதோ அவர் வந்து கை குலுக்கப் போகிறாரோ என்று நீங்கள் யோசிக்கக் கூடாது. அப்படியானால் ஸ்டெனோக்கள் எல்லாம் சிறிய கை கொண்டவர்களா? (SHOR THAND-காரர்கள்!).

GIVE HIM A BIG HAND என்றால் ‘’எல்லோரும் பலமாகக் கைதட்டுங்கள்’’ என்றுதான் பொருள்.

இதெல்லாம் IDIOM என்கிற வகை. அதாவது இந்த வார்த்தைகளை அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது. அந்த வார்த்தைகளின் தனிப் பொருள் வேறு. அவற்றை சேர்த்துப் பயன்படுத்தும்போது அவை உணர்த்தும் அர்த்தம் வேறு.

‘அவனுக்குப் பால் வடியும் முகம்’ என்றால் நிஜமாகவா அவன் முகத்தில் பாலா வடியும்? லதா மங்கேஷ்கருக்கு தேன் குரல் என்பதற்காக அவர் பாடும்போது அவரைச் சுற்றி எறும்புப் பவுடர் போடுவீர்களா என்ன?

ஆங்கிலத்தில் சில இடியம்கள் வெளிப்படையானவை.

to call a spade a spade என்றால் மனதில் தோன்றியதை பட்டென்று போட்டு உடைத்துவிடுவது என்று பொருள்.

சில இடியம்கள் மறைபொருள் கொண்டவை அல்லது வார்த்தைப் பிரயோகங்களில் மிக வித்தியாசமானவை.

READ BETWEEN THE LINES என்றால் எழுதப்பட்ட வரிகளுக்கிடையே வெற்றிடம்தானே இருக்கிறது என்று

திகைக்கக் கூடாது. வாக்கியங்களின் மறைபொருளை கவனித்தல் என்று அதற்குப் பொருள். வஞ்சப்புகழ்ச்சியாக யாராவது பேசினால் WE SHOULD READ BETWEEN THE LINES தானே?

LETTING CAT OUT OF BAG என்றாலோ SPILLED THE BEANS என்றாலோ நம் மனதில் வேறு மாதிரி காட்சிகள் உருவாகலாம். ஆனால் அவை உணர்த்துவது ரகசியத்தை வெளிப்படுத்திவிடுவது என்பதைத்தான்.

மேற்படி IDIOMகளைக் கூட நம்மால் ஒரளவு தொடர்புபடுத்திப் பார்க்க முடியும். ஆனால் தொடர்பே இல்லாததாக நமக்குத் தோன்றக்கூடிய IDIOMகளும் உண்டு.

HE KICKED THE BUCKET என்றால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம்.

சில IDOMகளுக்கு வரலாற்றுத் தொடர்பு உண்டு. TO CROSS THE RUBICON என்பது அவற்றில் ஒன்று. இதற்குப் பொருள் தீர்மானமான ஒரு முடிவை எடுப்பது என்பதாகும். அதாவது வாபஸ் பெறமுடியாத ஒரு முடிவு. RUBICON என்பது அட்ரியாடிக் கடலில் சங்கமிக்கும் ஒரு சிறிய நதி. இது இத்தாலியின் எல்லையில் உள்ளது. பண்டைக் காலத்தில் இந்த எல்லையைத் தாண்டுவது என்பது போர் என்ற முடிவை எடுத்ததற்கு சமமாகக் கருதப்பட்டது. (ஜூலியஸ் சீஸர் RUBICONஐத் தாண்டினார்).

IT IS NOT ROCKET SCIENCE என்றால் அது ஒன்றும் கடினமானதல்ல என்று பொருள்.

I AM FEELING BLUE என்று யாராவது சொன்னால் கிண்டலாக அவரைப் பார்க்கக் கூடாது. FEELING BLUE என்றால் சோகமாக இருப்பது என்று பொருள்.

FACE THE MUSIC என்றால் ‘நீங்கள் செய்த தவறுக்கான பலனை நீங்கள் அனுபவித்துதான் ஆகவேண்டும்’ என்று பொருள்.

தொலைக்காட்சிக்கான பாட்டுப் போட்டியில் கொடூரமாக சிலர் பாடும்போது நீதிபதிகள் தங்கள் மனதில்‘‘ ஜட்ஜா இருக்க ஒத்துக்கிட்டமே! WE HAVE TO FACE THE MUSIC” என நினைத்துக் கொள்வார்களோ?

HISTORIC–HISTORICAL

இரண்டு வார்த்தைகளிலுமே சரித்திர நெடி அடிக்கிறது என்றாலும் இவற்றின் அர்த்தங்கள் மிகவும் வேறுபட்டவை.

முதலில் HISTORICAL என்ற வார்த்தையை எடுத்துக் கொள்வோம். இதற்கு வரலாறு தொடர்பான என்று அர்த்தம். அதாவது மிகத் தொன்மையான ஒரு கல் கண்டுபிடிக்கப்பட்டால் அதை HISTORICAL STONE எனலாம். காலத்தால் மிகவும் முந்தைய கல் அது. அவ்வளவுதான். மற்றபடி வேறு விசேஷம் எதுவும் அதற்கு இல்லாமல் இருக்கக்கூடும்.

ஆனால் HISTORIC என்றால் அதற்கு ‘சரித்திரத்தில் இடம்பெறத்தக்க’ என்ற பொருள் உண்டு. ஒரு சாதனை இப்போதுதான் செய்யப்பட்டிருக்கலாம். எனினும் அதை ‘HISTORIC ACHIEVEMENT’ என்று கூறக்கூடும். அதாவது வருங்காலத்தில் நினைவு கொள்ளத்தக்க சாதனை என்று இதற்கு அர்த்தம்.

சரித்திரத்தில் சில போர்கள்தான் HISTORIC WARS. மற்றவை வெறும் HISTORICAL WARSதான்!

ஜி.எஸ்.எஸ்- (தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x