Published : 07 Nov 2017 10:42 AM
Last Updated : 07 Nov 2017 10:42 AM
அக்கப்போர்களைப் பகிர்ந்துகொள்வதற்கு மட்டுமே சமூக வலைத்தளங்களைப் பலர் பயன்படுத்தும்போது, மருத்துவ உதவி, அப்பா இல்லாத குழந்தைகளின் கல்விக் கட்டண உதவி, தன்னார்வ அமைப்புகளுக்குத் தேவைப்படும் மளிகைப் பொருட்களை வாங்கித் தருவது, பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்விஅளிக்க முயல்வது ஆகியவற்றுக்கு வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர் தாம்பரத்தைச் சேர்ந்த சில கல்லூரி மாணவர்கள்.
கடந்த ஆண்டு 20 முதல் 30 மாணவர்கள் இணைந்து தொடங்கிய ‘MEBOC- உதவிடத்தான் பிறந்தோம்’ என்னும் வாட்ஸ்அப் குழுவில் தற்போது 300 பேர் இணைந்துள்ளார்கள். தந்தையை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்வது, இன்னும் அவர்களுக்குத் தேவைப்படும் மற்ற உதவிகளை அளிப்பதே இக்குழுவினரின் பிரதான நோக்கம்.
சுற்றுப்புறச் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வைப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்திவரும் இக்குழுவினர் தாம்பரம், தியாகராய நகர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளின் சுவர்களுக்கும் வெள்ளையடிக்கிறார்கள்.
தொடக்கப் பள்ளிகளுக்கு ஆத்திசூடி எழுதுவது, நடுநிலைப் பள்ளிகளுக்குக் கல்வி தொடர்பான ஓவியங்களைத் தீட்டுவது இவர்களுடைய வார இறுதித் திட்டம். அதோடு பள்ளியை ஒட்டி அமைந்திருக்கும் பேருந்து நிறுத்தத்தில் ஒட்டப்பட்டிருக்கும் தேவையற்ற விளம்பர போஸ்டர்களை அப்புறப்படுத்தி, பேருந்து நிறுத்தத்தையும் சுத்தப்படுத்துகின்றனர்.
விளிம்பு நிலை மக்களுக்கான மருத்துவ முகாம்களை ஒருங்கிணைப்பது, கொடையாளர்களிடமிருந்து ரத்தம் பெற்றுத் தருவது போன்ற பணிகளையும் செய்துவருகின்றனர்.
“உதவி தேவைப்படுபவர்கள் இந்த குரூப்பில் பதிவிடுவார்கள். அவர்களின் கோரிக்கை என்ன, உண்மையிலேயே அவர்களுடைய நிலை என்ன என்பதை அவர்களின் வீட்டுக்குச் சென்று பரிசோதித்தும், பள்ளி, கல்லூரிகளிலிருந்து குறிப்பிட்ட மாணவருக்கான கல்விக் கட்டணத்தை உறுதிசெய்யும் சான்றிதழைப் பெற்றும் அவர்களுக்கான உதவியைச் செய்கிறோம். இப்படி இந்த ஆண்டு மட்டும் பொறியியல் மற்றும் கலைப் படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்கும் பிளஸ் 1 படிக்கும் ஒரு மாணவிக்கும் கல்விக் கட்டணத்தை உதவியாக வழங்கியிருக்கிறோம். கல்பாக்கம் பகுதியில் வாழும் இருளர், பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்வி வழங்கும் சேவையைத் தொடங்கும் முயற்சியில் இருக்கியிருக்கிறோம்” என்கிறார் ‘உதவிடத்தான் பிறந்தோம்’ குழுவில் ஒருவரான விஜய்.
தொடர்புக்கு: வாட்ஸ்அப் எண் 9710972097
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT