Published : 07 Nov 2017 10:48 AM
Last Updated : 07 Nov 2017 10:48 AM
குடியுரிமைப் பணித் (சிவில் சர்வீஸ்) தேர்வுகளுக்குப் படிக்கும் மாணவர்களுக்கு வரலாற்றுப் பாடம் என்றவுடன் சில பெயர்கள் நினைவுக்கு வரும். ஆர்.எஸ்.சர்மா, சதிஷ் சந்திரா, விபன் சந்திரா. இவர்கள் மூவரும் என்.சி.இ.ஆர்.டி.க்காக எழுதிய வரலாற்றுப் பாட நூல்கள், பாடத்திட்டம் மாறிய பிறகும்கூட மாணவர்களால் இன்றும் வாசிக்கப்பட்டுவருகின்றன. அப்புத்தகங்கள் சற்றே விரிவாக்கப்பட்ட பதிப்புகளாகத் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன.
பழங்கால இந்தியா பற்றி எழுதியவர்களில் ரொமிலா தாப்பர், டி.என்.ஜா, ஏ.எல்.பாஷம் போன்ற முக்கியமான வரலாற்றாசிரியர்கள் பலர் உண்டு. நவீன இந்திய வரலாற்றில் சுமித் சர்க்கார், ராமச்சந்திர குஹா போன்றவர்கள் இருக்கிறார்கள். மத்திய கால இந்திய வரலாற்றைப் பொறுத்தவரை சதிஷ் சந்திராவே தனித்து விளங்கிய பேராசிரியர். இர்பான் ஹபீப் போன்ற மதிப்புக்குரிய வரலாற்றாசிரியர்கள் பலர் சுல்தானியர்கள், முகலாயர்களின் ஆட்சிக்காலத்தைப் பற்றி எழுதி இருந்தாலும் மாணவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர் சதிஷ் சந்திரா.
அக்டோபர் 13 அன்று சதிஷ் சந்திரா காலமானது இந்திய வரலாற்றுத் துறைக்குப் பேரிழப்பு. புது டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மத்திய வரலாற்றுத் துறைப் பேராசிரியராகவும் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராகவும் யுனெஸ்கோ அமைப்பின் இந்தியக் கல்வித்துறைத் தூதராகவும் அவர் பணியாற்றினார்.
தென்னகத்துக்கு முக்கியத்துவம்
மத்திய காலம் எனப்படும் கி.பி.800 தொடங்கி 1800 வரையிலான ஆயிரம் ஆண்டு கால வரலாறு என்பது விந்திய சாத்பூரா மலைகளைத் தாண்டி தென்னகத்தைக் கண்டுகொள்வதில்லை. ஆனால் சதிஷ் சந்திரா, அதே காலகட்டத்தைச் சேர்ந்த தென்னிந்திய வரலாற்றுக்கும் தனது நூலில் உரிய முக்கியத்துவம் கொடுத்தார்.
மத்திய கால வரலாற்றைப் பலர் எழுதியிருந்தாலும் சதிஷ் சந்திரா, அதைப் பொருளாதார, சமூகவியல் ஆய்வுக் கண்ணோட்டத்தில் அணுகினார் என்பது அவரது சிறப்பம்சம். அக்காலகட்டத்தில் நிலவிய இஸ்லாமியக் கலை, பண்பாட்டு அம்சங்களையும் மருத்துவம், கணிதம் போன்ற துறைகளின் வளர்ச்சிப்போக்கையும் பைசாண்டிய பேரரசின் வழியாக ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே அரேபிய மொழி ஒரு பண்பாட்டுப் பாலமாக விளங்கியதையும் அவர் மிகத் தெளிவாகப் படம்பிடித்தார்.
முகலாயர்கள் ஆட்சிக்காலத்தின்போது உலகின் பிற நாடுகளில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள், அவற்றுக்கும் இந்தியத் துணைக்கண்ட அரசியலுக்கும் இடையிலான மாறுபாடுகள் ஆகியவற்றையும் அவர் சுட்டிக்காட்டினார். ஐரோப்பிய நாடுகளின் நிலமானிய முறைக்கும் இந்தியாவின் பண்ணையார் முறைக்கும் இடையில் இருந்த ஒப்புமைகளைப் பற்றியும் அவர் விரிவாக எழுதினார்.
முகலாய வீழ்ச்சிக்குக் காரணம்
மத்திய கால வரலாற்றைப் பேசும்போது மதரீதியான மனச்சாய்வுகளுக்கு ஆட்பட்டுவிடுவதே இந்திய வரலாற்றாசிரியர்களின் இயல்பு. ஆனால் சதிஷ் சந்திரா, மதச்சார்பற்ற தன்மையுடனேயே சுல்தானியர்கள், முகலாயர்களின் வரலாற்றை எழுதினார். முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கு அவுரங்கசீப் இஸ்லாமிய மதக்கோட்பாடுகளைத் தீவிரமாகக் கடைப்பிடித்ததே காரணம் என்று சொல்லப்பட்டபோது, உண்மையான காரணம் அதுவல்ல, அவர் ஜாகீர் முறையை அறிமுகப்படுத்தியதுதான் என்று நேர்மையான முறையில் பொருளாதார அடிப்படையிலான வரலாற்று விளக்கத்தை அளித்தவர் சதிஷ் சந்திரா.
முகலாயர்களின் ஆட்சிக் காலத்திலேயே இந்தியத் துணைக்கண்டத்தில் முற்போக்கானவகையில் அரசியல் ஒருங்கிணைவு தொடங்கிவிட்டது என்பதையும் ஆதாரங்களோடு அவர் எழுதினார். சதிஷ் சந்திராவின் மத்திய கால இந்திய வரலாறு, இன்றைய சூழலில், கல்வித் துறையைத் தாண்டி அரசியல் உலகுக்கும் பாடம் போதிக்கத்தக்கது.
# இந்தியாவின் மத்திய கால வரலாற்றைப் பொருளாதார, சமூகவியல் ஆய்வுக் கண்ணோட்டத்தில் அணுகிய வரலாற்றாசிரியர்.
# தென்னிந்திய வரலாற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்தவர்.
# புது டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மத்திய வரலாற்றுத் துறைப் பேராசிரியர்.
# யுனெஸ்கோவின் இந்தியக் கல்வித் துறைத் தூதர்.
தமிழில் முற்போக்கான வரலாறு
தமிழில் பழங்கால, நவீன இந்திய வரலாற்று நூல்கள் பலவும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஒப்பீட்டளவில் மத்திய கால வரலாற்றைப் பற்றிய நூல்கள் மிக அரிதாகவே வெளிவந்திருக்கின்றன. ஓரியண்ட் பிளாக்ஸ்வான் வெளியிட்ட சதிஷ் சந்திராவின் ‘மத்திய கால இந்திய வரலாறு’ என்ற நூலை, வேட்டை எஸ்.கண்ணன் மொழிபெயர்ப்பில் தமிழில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT