Published : 07 Nov 2017 10:43 AM
Last Updated : 07 Nov 2017 10:43 AM
1. மக்கள் நடத்திய புரட்சியால் முதன்முதலில் பொதுவுடைமை ஆட்சி எந்த ஆண்டில், எந்த நாட்டில் நிறுவப்பட்டது?
2. ரஷ்யப் புரட்சி உலகெங்கும் நவம்பர் புரட்சியாக அறியப்பட்டாலும், ரஷ்யாவில் மட்டும் அது ‘அக்டோபர் புரட்சி’ என்று அழைக்கப்படுவது ஏன்?
3. புரட்சி நடைபெற்ற காலத்தில் ரஷ்யாவை ஆண்ட ஜார் மன்னர் நிக்கோலஸின் மகனுக்கு ஹீமோஃபீலியா என்கிற ரத்த உறையாமை நோய் இருந்தது. நவீன மருத்துவம் வளர்ந்திராத அந்தக் காலத்தில், மந்திர வித்தைகள் மூலம் ரஸ்புடின் என்பவர் அதைக் குணமாக்கியதாகக் கூறப்படுகிறது. மந்திர வித்தைகள் தெரிந்த சாமியாரைப் போன்ற இவர் ரஷ்ய ஆட்சியில் குறிப்பிடத்தக்க அளவு ஆதிக்கம் செலுத்தினார். இதனால் ஏற்பட்ட பிரச்சினைகளும் புரட்சி உருவானதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ரஷ்ய மன்னர்கள் ஜார் (tsar) என்ற பட்டத்துடன் அழைக்கப்படுகிறார்கள். ஜார் என்றால் என்ன அர்த்தம்?
4. ரஷ்யப் புரட்சியை போல்ஷ்விக் கட்சி வழிநடத்தியதாகப் படித்திருப்போம். ரஷ்ய ஜார் மன்னருக்கு எதிராக விவசாயிகள், தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி ஆயுதம் தாங்கியப் புரட்சியை போல்ஷ்விக் கட்சி வழிநடத்தியது. இந்தக் கட்சியே பின்னர் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி எனப்பட்டது. அதற்குப் பின் ரஷ்யாவை ஆட்சி செய்தது. போல்ஷ்விக் என்றால் என்ன அர்த்தம்?
5. கம்யூனிசக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு மென்ஷ்விக் என்றொரு கட்சியும் செயல்பட்டது. போல்ஷ்விக் கட்சியினரின் கருத்துக்கு மாற்றுக் கருத்தைக் கொண்டிருந்த இந்தக் கட்சியினர், புரட்சியில் நடுத்தர வர்க்கத்தினரை மட்டும் ஈடுபடுத்த வேண்டும் என்றனர். மிதவாதிகளாகக் கருதப்பட்ட இவர்கள், சிறுபான்மையினர் எனும் அர்த்தத்தில் மென்ஷ்விக் எனப்பட்டனர். இந்தப் பிரிவினருக்குத் தலைவராகச் செயல்பட்டு, பின்னால் போல்ஷ்விக்குகளுடன் இணைந்த முக்கியத் தலைவரின் பெயர் என்ன?
6. ரஷ்யாவில் 1917-ல் இரண்டு புரட்சிகள் நடைபெற்றன. மார்ச் மாதம் நடைபெற்ற புரட்சியில் ஜார் மன்னர் வீழ்த்தப்பட்டார். இடைக்கால அரசாங்கத்துக்கு இளவரசர் ஜார்ஜ் ல்வோவ், பின்னர் அலெக்சாண்டர் கிரென்ஸ்கி ஆகியோர் தலைமை வகித்தனர்.
தொழிலாளர்கள், ராணுவ வீரர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இடைக்கால ஆட்சியில் இடம்பெற்றார்கள். பிற்காலத்தில் ரஷ்யாவின் பெயர் மாற்றப்படவும் இந்தப் பிரதிநிதிகள் குழுவுக்கு வழங்கப்பட்ட பெயரே காரணமாக இருந்தது. அப்படி மாற்றப்பட்ட பெயர் என்ன?
7. போல்ஷ்விக்குகளின் தலைவராக இருந்தவர் லெனின். தோல்வியுற்ற 1905 புரட்சிக்குப் பின் பல்வேறு நாடுகளில் லெனின் தலைமறைவாக வாழ்ந்தார். அப்போது பல்வேறு புனைபெயர்களில் இயங்கினார், எழுதினார், புரட்சிக்கு அடித்தளம் அமைத்தார். சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவந்த அவர் நாடு திரும்புவதற்கு 1917-ல் புதிய அரசு அனுமதித்தது. நாடு திரும்பிய லெனின் தலைமையில் அதே ஆண்டு நவம்பர் 6, 7 அன்று நடத்தப்பட்ட மக்கள் புரட்சி வென்றது. லெனினின் உண்மைப் பெயர் என்ன?
8. மென்ஷ்விக், நிலவுடைமையாளர்கள், முதலாளிகள், முன்னாள் ராணுவத்தினர் எனப் புரட்சி எதிர்ப்பாளர்கள் அனைவரும் 1918-ல் போல்ஷ்விக்குகளுக்கு எதிராக உள்நாட்டுப் போரைத் தொடங்கினர். பழைய முடியாட்சியே தொடர வேண்டும் என்று விரும்பிய இவர்களுக்கு ஐரோப்பிய உதவிகள் கிடைத்தன. புரட்சி எதிர்ப்பாளர்களைக் கட்டுப்படுத்துவதற்காக ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியும் தொழிலாளர்களும் இணைந்து அமைத்த படையே செஞ்சேனை (Red Army). 1920-களின் இறுதியில் போல்ஷ்விக் பிரிவினர் வெற்றி பெற்றார்கள். பிற்காலத்தில் செஞ்சேனை என்னவாக மாற்றப்பட்டது?
9. ரஷ்யப் புரட்சி நடைபெற்ற இடம் பெட்ரோகிராட். இன்றைக்கும் ரஷ்யாவின் இரண்டாவது மிகப் பெரிய நகராகத் திகழும் இந்த ஊர், பால்டிக் கடலை ஒட்டியுள்ள ஒரு துறைமுகம். 1914-ல்தான் இந்த ஊரின் பெயர் பெட்ரோகிராட் என மாற்றப்பட்டது. லெனின் மறைந்த பிறகு அவரது நினைவாக லெனின்கிராட் என மாற்றப்பட்டது. இந்த நகரத்தை உருவாக்கியது யார்? உருவாக்கியவரின் பெயராலேயே ஆரம்பத்திலும் தற்போதும் அழைக்கப்படும் இந்த நகரத்தின் பெயர் என்ன?
10. ரஷ்யப் புரட்சியை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டு உலகப் புகழ்பெற்ற, பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட, பின்னாளைய போராளிக் குழுக்கள் பலவற்றுக்கு உத்வேகமாகத் திகழ்ந்த ரஷ்ய மொழியில் 1932-ல் வெளியான நாவல் எது? இதை எழுதியவர் நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT