Last Updated : 21 Jul, 2014 09:59 AM

 

Published : 21 Jul 2014 09:59 AM
Last Updated : 21 Jul 2014 09:59 AM

ஆர்வம், திறமை, தொழில்... - யாருக்கு எந்தத் தொழில் -2

யாருக்கு என்ன தொழில் என்பதற்கு போன வாரம் இரண்டு உதாரணங்களைப் பார்த்தோம். இப்போது மேலும் இரண்டு உதாரணங்களைப் பாருங்கள். இதை ஒரு விளையாட்டு போல செய்துபாருங்கள்.

சமையல் கலை

கமாலுதீனுக்குச் சமையல் செய்வது பிடிக்கும். சில சமயங்களில் அவன் அம்மாவை விடப் பிரமாதமாகச் சமைத்துவிடுவான். புதிய புதிய உணவு வகைகளை உருவாக்க விரும்புவான். பள்ளியில், அவன் வேதியியல் பாடத்தை விரும்புவான். பல்வேறு வேதியியல் பொருட்களின் விளைவுகளைப் புரிந்து வைத்திருக்கிறான்.

பின்வரும் தொழில்களில் எது கமாலுதீனுக்குப் பொருந்தும்?

அ. வேதியியல் ஆய்வாளர்

ஆ. உணவு தொழில்நுட்ப நிபுணர்

இ. நியூட்ரிஷியன் (சத்துணவு நிபுணர்)

ஈ. செஃப் (சமையல் பிரிவின் தலைமை)

கமாலுதீனுக்கு மிகவும் பொருத்தமான துறை எது?

கமாலுதீனுக்குச் சமையல், வேதியியல் இரண்டிலும் ஆர்வம், திறமை உண்டு. எனவே இந்த நான்குமே அவனுக்கு ஏதோ ஒரு விதத்தில் பொருந்தக்கூடியவைதான். ஆனால் எது மிகவும் பொருத்தமானது?

சமைக்கத் தெரியும். புதிய புதிய வகைகளைச் செய்துபார்க்கும் ஆர்வமும் திறமையும் உண்டு. எனவே உணவு சம்பந்தமான தொழில் அவனுக்குப் பொருந்தும் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் சத்துணவு, உணவு தொழில்நுட்பம், சமையல் பிரிவின் தலைமை ஆகியவற்றில் எது பொருத்தமானது?

சமையலில் ரசனையும் திறமையும் உள்ளவர்கள் சத்துணவு, ஊட்டச்சத்து போன்றவற்றுக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சொல்லப்போனால் சத்துணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் நாக்கு ருசியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்வார்கள். எனவே ரசனை, ருசி என்பது சத்துணவு நிபுணருக்கு நெருக்கமான குணங்கள் அல்ல. எனவே அதை விட்டுவிடலாம்.

அடுத்ததாக உணவு தொழில்நுட்பம். உணவு, சமையல் என்பதைத் தொழில்நுட்பரீதியாக அணுகும் இந்தத் தொழிலுக்கும் ரசனை என்பது பிரதானமான அம்சம் அல்ல. ரசனையும் திறமையும் உள்ள ஒருவருக்குத் தொழில்நுட்ப நிபுணரின் உதவி இருந்தால் அவரது வேலை மேலும் சிறப்பாகத் துலங்கும். எனவே கமாலுதீனுக்கு இதுவும் பொருத்தமல்ல.

எஞ்சி இருப்பது செஃப். அதாவது நேரடியாகச் சமைப்பது, சமையல் பிரிவுக்குத் தலைமை தாங்கிச் செயல்படுத்துவது. ஒரு விதத்தில் அணியின் கேப்டன் போல. ஒரு கேப்டன் தானே களத்தில் நின்று வழிநடத்த வேண்டும்? அந்த கேப்டனுக்கு விளையாடத் தெரிந்திருக்க வேண்டும். விளையாட்டைப் பற்றிச் சிந்திக்கத் தெரிந்திருக்க வேண்டும். பல்வேறு திறமைகளை ஒருங்கிணைத்துக் கொண்டுசெல்லும் திறமை இருக்க வேண்டும். இதன்படி பார்த்தால் சமையலில் நேரடியாக ஈடுபட்டுப் பிறரையும் வழிநடத்தும் பொறுப்புதான் கமாலுதீனுக்கு ஏற்றது. அவனுடைய ரசனை, புதுமைக்கான விருப்பம், ஆர்வம் எல்லாமே சமையல் அறையை எப்போதும் புதிதாகவும் புதுமை நிறைந்ததாகவும் வைத்திருக்க உதவும்.

வேதியியல் நிபுணராகவும் கமாலுதீன் ஆகலாம். ஆனால் அதற்கு ரசனையோ புதுமை ஆர்வமோ தேவையில்லை. அவை இரண்டும் இருப்பதால் சமையலே கமாலுதீனுக்குச் சிறந்த தேர்வு. அதிலும் சுவை, புதுமை ஆகியவற்றின் அடிப்படையில் புதிதுபுதிதாக உருவாக்கக்கூடிய பொறுப்பான செஃப் தொழிலே அவனுக்கு மிகவும் பொருத்தமானது.

தேடலில் ஈடுபாடு

ராகுலுக்குப் புத்தகம் வாசிப்பது மிகவும் பிடிக்கும். தான் படித்ததிலிருந்து கற்றுக்கொண்ட அறிவை வைத்துப் பரிசோதனைகள் செய்து பார்ப்பான். அவன் வீட்டருகே இருக்கும் தொழிற்சாலையிலிருந்து வரும் கழிவுகளால் ஏற்படும் மாசுக் கேட்டைப் பற்றி ஒரு சர்வேகூட எடுத்தான். புவியியல், வரலாறு பற்றிக்கூட ஆராய்வான். அவனுடைய தாத்தாவின் நிலத்தின் உண்மையான உரிமையாளர்கள் யார் என்றுகூட ஆராய்ந்தான்.

ராகுலுக்குப் பொருத்தமான வேலை எது?

அ. ஆசிரியர்

ஆ. சுற்றுச்சூழலியல் துறை

இ. வரலாற்று ஆய்வாளர்

ஈ. ஆராய்ச்சியாளர்

ராகுலுக்கு வாசிப்பு, ஆராய்ச்சி, களப்பணி ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளது. அறிவார்த்தமான ஆர்வம் கொண்டவர்களுக்கு ஆசிரியர் பணியில் ஈடுபட முடியும். ஆனால் ஆசிரியருக்கு அறிவு மட்டும் போதாது. சொல்லிக்கொடுக்கும் திறன் வேண்டும். அது ராகுலுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை.

ராகுலுக்கு ஒரு குறிப்பிட்ட துறையில் என்று இல்லாமல் பல துறைகளில் ஆராய்ச்சி ஆர்வம் இருக்கிறது. எனவே குறிப்பிட்ட துறை என்றில்லாமல் பொதுவாக ஆராய்ச்சியாளர் என்பது அவனுக்குப் பொருத்தம் என்று தோன்றலாம். ஆனால் ஆராய்ச்சி என்பது பொதுவாக அல்லாமல் ஒரு குறிப்பிட்ட துறையில் இருந்தால்தான் ஆய்வுத் திறன் சிறப்பாக வெளிப்படும்.

ராகுலுக்குச் சுற்றுச்சூழல், வரலாறு ஆகியவற்றில் எதில் அதிக ஆர்வம் என்று பார்க்க வேண்டும். அதைக் கண்டுபிடிப்பதற்கு இந்தக் குறிப்புகள் போதாது. அவனோடு உரையாடினால்தான் அதுபற்றித் தெரிந்துகொள்ள முடியும். அதன் பிறகே அவன் எந்தத் துறையில் ஆய்வுசெய்யலாம் என்பதைப் பற்றிய தீர்மானத்துக்கு வர முடியும்.

எந்தத் துறையிலும் ஆய்வுசெய்வதும் ஒரு முக்கியமான தொழில்தான். சில நிறுவனங்கள் பல்வேறு துறைகளின் நிபுணர்களை ஒருங்கிணைத்துப் பல்வேறு துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்கின்றன. ராகுலுக்கு ஒரு குறிப்பிட்ட துறை என்றில்லாமல் பொதுவாக ஆய்வில் ஆர்வம் உள்ளது என்றால் அவன் பொதுவான ஆய்வு முறைமைகள், அவற்றுக்கான உத்திகள் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டு அந்தத் துறையில் முன்னேறலாம்.

ராகுலுக்கு ஆராய்ச்சித் துறை பொருத்தமானது. ஆனால் குறிப்பிட்ட ஒரு துறையா அல்லது பொதுவான ஆராய்ச்சித் துறையா என்பதை ராகுலுடன் விரிவாகப் பேசிய பிறகே முடிவுக்கு வர முடியும்.

நீங்களே அலசிப்பாருங்கள்

இந்தக் கேள்விகளை யோசிக்கும்போதே உங்களுக்குச் சில விஷயங்கள் புரிந்திருக்கும். ஒருவரது தொழில், வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதில் அவரது இயல்பான ஆர்வங்கள், திறமைகள், சிறிய வயதிலேயே பெறும் அனுபவங்கள் ஆகியவற்றுக்கு முக்கியமான பங்கு உள்ளது. இவற்றை அடிப்படையாக வைத்து யோசித்தால் ஒவ்வொருவரும் தனக்கான துறையை இளம் வயதிலேயே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் அல்லவா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x