Last Updated : 26 Sep, 2017 10:57 AM

 

Published : 26 Sep 2017 10:57 AM
Last Updated : 26 Sep 2017 10:57 AM

ஆங்கில​ம் அறிவோமே 179: போடா ‘டட்’-னு சொல்லிட்டார்!

கேட்டாரே ஒரு கேள்வி

“Biodegradable என்றால் காலத்தால் அழியாத என்று அர்த்தம். அப்படியானால் அமர காவியங்களை biodegradable literary works என்று கூறக் கூடாதா?”

நண்பரே, Biodegradable என்பதற்கான அர்த்தமே வேறு. Bio என்றால் உயிர். Biodegradable என்றால் உயிருள்ளவற்றால் அழிக்கக்கூடியது என்று அர்த்தம். அதாவது எறும்பு, பாக்டீரியா போன்ற ஜீவராசிகளால் அழியக் கூடியவை. இந்த அடிப்படையில்தான் பிளா​ஸ்டிக்கை non-biodegradable என்கிறார்கள்.

அந்தக் காலத்தில் இலக்கியப் பாடல்கள் சுவடிகளில் எழுதப்பட்டன என்பதும் அவற்றில் கணிசமானவற்றைக் கரையான்கள் அரித்துவிட்டதும் உண்மைதான். (இலக்கியப் பசி!). ஆனால், அவை அரித்தது சுவடிகளைத்தானே தவிர, (நேரடியாக) பாடல்களை அல்ல. எனவே, அந்த இலக்கியங்களை biodegradable என்று கூறுவது தவறு.

Posthumous என்றால் என்ன?

லத்தீனில் Post humus என்றால் பூமிக்குப் பிறகு என்று பொருள். அதாவது புதைத்த பிறகு என்று அர்த்தம்.

அதே மொழியில் postumus என்ற ஒரு வார்த்தை உண்டு. இது தந்தை இறந்த பிறகு பிறக்கும் குழந்தையைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது.

சில விருதுகள் சம்பந்தப்பட்டவர்கள் இறந்த பிறகு அவர்கள் அதற்குத் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படும். அப்போது அவை posthumous விருதுகள்.

My friend purchased this bicycle, which he presented to me. இந்த வாக்கியம் சரியானதுதானா?

Backronym என்றால் என்ன? Acronym என்பதற்கும் இதற்கும் உள்ள வேறுபாடு என்ன என்று இரண்டு வாசகர்கள் கேட்டிருக்கிறார்கள். North Atlantic Treaty Organization என்பதை NATO என்றால் அது acronym. Acquired Immuno Deficiency Syndrome என்பதன் acronym AIDS.

இப்போது backronym என்பதற்கு வருவோம். Backward, acronym ஆகிய இரண்டும் இணைந்ததுதான் Backronym. இதை ‘Reverse acronym’ என்றும் கூறுவதுண்டு.

பிறந்த பச்சிளம் குழந்தைகளின் உடல்நல ஆரோக்கியம் குறித்து மதிப்பிட Apgar Score என்ற ஒன்றைக் குறிப்பிடுவார்கள். இப்படி இது அழைக்கப்படுவதற்குக் காரணம் இதை உருவாக்கியது, அமெரிக்க டாக்டர் V​irginia Apgar. ஆனால், காலப்போக்கில் APGAR என்பதை ஒரு acronym ஆக ஆக்கி விட்டார்கள். அதாவது பிரசவமானவுடன் வெளியேறும் குழந்தையின் உடல்நலக் குறியீடுகள் ஐந்தை APGAR என்பதன் மூலம் குறிப்பிடத் தொடங்கினார்கள்.

குழந்தையின் தோலின் நிறம் (Appearance), இதயத் துடிப்பு (Pulse), தொடுதல், லேசாகக் கிள்ளுதல் போன்றவற்றுக்கு அந்தக் குழந்தையின் முகம் மற்றும் உடலில் உண்டாகும் மாறுதல் (Grimace), தசை செயல்பாடு (Activity), சுவாசம் (Respiration) என்பதாகும்.

இதில் acronym ஆக உருவாகாத ஒரு வார்த்தை பின்னர் acronym ஆக ஆக்கப்பட்டுவிட்டது. எனவே, APGAR என்பதை Backronym என்றும் கூறலாம்.

இன்னொரு எடுத்துக்காட்டு. ADIDAS என்பது ஒரு பிரபல ஷூ brand-ன் பெயர். இந்த நிறுவனத்தை நிறுவியவரின் பெயர் Adolf Adi Dassler. இந்தப் பெயரிலிருந்து உருவானதுதான் ADIDAS. ஆனால், பின்னர் யாரோ யோசித்து “All Day I Dream About Sports” என்பதன் சுருக்கம்தான் ADIDAS என்று அளந்துவிட, இந்த backronym-ஐயும் பலர் நம்புகிறார்கள்.

Wiki-pediaவின் சுருக்கம் Wiki. இது acronym அல்ல, abbreviation (வார்த்தைகளின் முதல் எழுத்து சேர்ந்தால்தான் அது acronym). (Examination என்பதை Exam. என்றால் அது abbreviation). Wiki என்றால் ஹவாய் மொழியில் வேகம். இதை அடிப்படையாகக் கொண்டு Wikipedia என்ற வார்த்தை உருவானது. ஆனால், “What I Know Is” என்பதன் சுருக்கம்தான் WIKI என்று யாரோ கூறினால் அது backromym ஆகிவிடுகிறது.

அதாவது ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் ஒரு வார்த்தையை acronym ஆக மாற்றினால் அது backronym.

My friend purchased this bicycle, which he presented to me என்ற வாக்கியத்தை ஒரு மாணவரின் நோட்டுப் புத்தகத்தில் படிக்க நேர்ந்தது. மேலோட்டமாகப் படிக்கும்போது அதில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை அல்லவா?

ஆனால், active voice, passive voice ஆகிய இரண்டும் கலந்ததாக அந்த வாக்கியம் உள்ளது. My friend purchased this bicycle எனும் பகுதி active voice-ல் உள்ளது. “Which he presented to me” என்பது passive voice. ஒரு வாக்கியம் active voice-ல் தொடங்கி passive voice-ல் முடியக் கூடாது.

ஒ​ன்று முழுமையாக active voice-ல் இருக்க வேண்டும், My friend purchased this bicycle and presented it to me.

அல்லது முழுமையாக passive voice-ல் இருக்க வேண்டும். This bicycle was purchased by my friend, which he presented to me.

போட்டியில் கேட்டுவிட்டால்?

Karuna is ___________ or perhaps faster than Ramiah.

a) as fast

b) almost as fast

c) faster

d) fastest

e) so fast

Faster என்ற வார்த்தை ஒப்பீட்டு முறையில் வந்தால் அதைத் தொடர்ந்து than என்ற வார்த்தை வர வேண்டும். எனவே, மூன்றாவது வார்த்தை சரியல்ல.

விடுபட்ட இடத்தில் fastest என்பது சரியான விடை என்றால், அதற்கு முன்னால் the என்ற வார்த்தை இடம் பெற்றிருக்க வேண்டும். எனவே, நான்காவது வார்த்தையும் பொருத்தமானதல்ல.

So fast எனும்போது that என்ற வார்த்தை இடம் பெறுவது இயல்பு. தவிர மற்றபடியும் அது சரியாகப்படவில்லை.

Perhaps faster என்பது தோராயமான ஒரு கணிப்பைக் குறிக்கிறது. அப்படி இருக்கும்போது almost as fast என்ற மற்றொரு தோராயமான கணிப்பு வாக்கியத்தில் பொருத்தமாக அமையவில்லை.

எனவே முதல் தேர்வான as fast என்பதுதான் இங்குச் சரியான விடையாகிறது.

Karuna is as fast or perhaps faster than Ramiah.

அதாவது ரா​மையாவின் வேகத்துக்கு ஈடாகவோ அல்லது ஒருவேளை அவனைவிட அதிக வேக​த்திலோ கருணா சென்று கொண்டிருக்கிறான்.

தொடர்புக்கு: - aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x