Last Updated : 24 Oct, 2017 12:24 PM

 

Published : 24 Oct 2017 12:24 PM
Last Updated : 24 Oct 2017 12:24 PM

சேதி தெரியுமா? - சுற்றுச்சூழல் சீர்கேட்டால் இறப்பு: இந்தியாவுக்கு முதலிடம்

உலகில் மாசு காரணமாக ஏற்படும் இறப்புகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ‘லான்செட்’ (The LanceT) மருத்துவ இதழ். 2015-ம் ஆண்டில், இந்தியாவில் மாசினால் 25 லட்சத்து 10 ஆயிரம் பேர் இறந்திருப்பதாக அந்த இதழின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த ஆய்வின்படி சீனா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அங்கு, 2015-ம் ஆண்டில் மாசினால் ஏற்பட்ட நோய்கள் காரணமாக 18 லட்சம் பேர் இறந்துவிட்டனர். இந்த இதழ், சுற்றுச்சூழல் விஞ்ஞானி பிலிப் லாண்ட்ரிகன் தலைமையில் உடல்நலம், சுற்றுச்சூழல் சார்ந்த 40 சர்வதேச நிபுணர்களுடன் இரண்டாண்டு திட்டமாக ‘லான்செட் ஆணைய’த்தை அமைத்தது.

 

செயற்கை நுண்ணறிவு கொள்கைக் குழு

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொடர்பான கொள்கைகளை உருவாக்க, அரசுக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு ஒன்றை நியமித்திருக்கிறது மத்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம். இந்த நிபுணர் குழு, இந்தியாவுக்குப் பொருந்தக்கூடிய தொழில்நுட்பங்களைத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்குப் பரிந்துரை செய்யவிருக்கிறது. இதன்மூலம், நாட்டில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நடைபெறும் இணையத் தாக்குதல்களைக் குறைப்பதற்குத் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு. இந்த நிபுணர் குழு அளிக்கும் பரிந்துரைகளை வைத்து, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது தொடர்பான கொள்கைகள் வகுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது மத்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம். 2020-ம் ஆண்டுக்குள், உலகின் செயற்கை நுண்ணறிவு சந்தை 15 ஆயிரத்து 300 கோடி அமெரிக்க டாலராக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 

உலகின் ஆழமான ஏரிக்கு ஆபத்து

ரஷ்ய நாட்டின் சைபீரியாவில் அமைந்திருக்கும் உலகின் ஆழமான ஏரியான ‘பைகால்’ (Baikal) ஏரி, மிக மோசமான நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருப்பதாகச் சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலகின் ஐந்தில் ஒரு பங்கு நன்னீரைத் தேக்கிவைத்திருக்கும் இந்த ஏரி, உலகப் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 3,600 தாவர, விலங்கினங்களுடன் இந்த ஏரி சிறந்த உயிரினப் பன்மைக்கான இடமாக விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக, சர்வதேசச் சுற்றுலாப் பயணிகள் இந்த ஏரிக்கு வருவது அதிகரித்திருந்த நிலையில், தற்போது அழுகிய பாசியின் பெருக்கம் காரணமாக ‘ஒமுல்’ என்ற மீன் வகை மறையத்தொடங்கிவிட்டது. இதனால், ரஷ்ய அரசு இந்த ஏரியில் மீன் பிடிக்கத் தடைவிதித்திருக்கிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அழுத்தமும், கட்டுப்பாடில்லாத மீன் பிடித் தொழிலும்தான் இந்த நிலைக்குக் காரணம் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

சூரியக் குடும்பத்தில் 9-வது கோள்

சூரியக் குடும்பத்தில் ‘ஒன்பதாவது கோள்’ இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர் நாசா விஞ்ஞானிகள். இந்த ‘ஒன்பதாவது கோள்’ பூமியைவிட 10 மடங்கு அதிக அளவில் இருப்பதாகவும், நெப்டியூனைவிட சூரியனிலிருந்து 20 மடங்கு தள்ளியிருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த ‘ஒன்பதாவது கோள்’, சூரியக் குடும்பத்தின் ‘சூப்பர் எர்த்’ கோளாகவும் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள். பூமியின் பரப்பளவைவிட அதிகமான பரப்பளவையும், பனிக்கோள்களான யுரேனஸ், நெப்டியூனைவிட குறைவான பரப்பளவையும் இந்தக் கோள் கொண்டிருக்கலாம் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். ‘ஒன்பதாவது கோள்’ இருப்பதற்கு ஐந்து வெவ்வேறு ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக வானியற்பியலாளர் கோன்ஸ்டான்டின் பெடிகின் தெரிவித்திருக்கிறார்.

 

வரலாற்று ஆய்வாளர் சதீஷ் சந்திரா மறைந்தார்!

மத்திய கால இந்திய வரலாற்று ஆய்வாளரும் பிரபல கல்வியாளருமான சதீஷ் சந்திரா அக்டோபர் 13-ம் தேதி மறைந்தார். அவருக்கு வயது 95. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் இவர் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார். இவர் எழுதிய மத்திய கால இந்திய வரலாறு (History of Medieval India) புத்தகம்தான் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சிக் குழுவின் (NCERT) புத்தகமாகப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல ஆண்டுகளாகக் கற்பிக்கப்பட்டுவருகிறது. இந்தியாவின் முன்னணி வரலாற்று ஆய்வாளர்களான பிபின் சந்திரா, ரோமிலா தாபருடன் இணைந்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆய்வு மையத்தை உருவாக்கியவர் இவர்.

 

யுனேஸ்கோவின் புதிய இயக்குநர்: ஆதுரேஸோலே

ஐ.நாவின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவின் புதிய பொது இயக்குநராக முன்னாள் பிரஞ்சு கலாச்சார அமைச்சர் ஆதுரேஸோலே (Audrey Azoulay) அக்டோபர் 13-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கத்தார் நாட்டைச் சேர்ந்த ஹமத் பின் அப்துல்லாஸிஸ் அல் கவாரியை 30-28 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார் இவர். இவருக்கு முன், யுனெஸ்கோவின் பொது இயக்குநராக எட்டு ஆண்டுகள் பல்கேரியாவைச் சேர்ந்த இரினா போகோவாவின் பதவிகாலம் நிதி நெருக்கடிகளால் முடிவுக்கு வந்தது. யுனெஸ்கோவுக்கு நிதி அளித்துகொண்டிருந்த அமெரிக்கா அமைப்பிலிருந்து விலகியிருக்கும் இந்த இக்கட்டான் சூழ்நிலையில் ஆதுரேஸோலே பதவியேற்றிருக்கிறார்.

 

‘மேன் புக்கர்’ பரிசு வென்ற ஜார்ஜ் சாண்டர்ஸ்!

2017-ம் ஆண்டுக்கான ‘மேன் புக்கர்’ பரிசு, அமெரிக்க எழுத்தாளர் ஜார்ஜ் சாண்டர்ஸுக்கு அக்டோபர் 17-ம் தேதி வழங்கப்பட்டிருக்கிறது. இவர் எழுதிய முதல் நாவலான ‘லிங்கன் இன் த பார்டோ’ (Lincoln in the Bardo) நாவலுக்காக இந்த முக்கிய இலக்கிய விருதைப் பெற்றிருக்கிறார். இவர் சைராக்யுஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். 1862-ம் ஆண்டு, அமெரிக்காவின் உள்நாட்டு போரைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்டிருக்கும் இந்த நாவலில் லிங்கனின் மகன் வில்லி முக்கிய கதாபாத்திரமாக இடம்பெற்றிருக்கிறார். அமெரிக்க எழுத்தாளர் பால் பீட்டியைத் (The Sell Out novel) தொடர்ந்து இந்த ஆண்டும் இரண்டாவது முறையாக அமெரிக்க எழுத்தாளர் ‘மேன் புக்கர்’ பரிசை வென்றிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x