Published : 24 Oct 2017 12:24 PM
Last Updated : 24 Oct 2017 12:24 PM
ப
டிக்க வேண்டும் என்று கையில் புத்தகத்துடன் உட்கார்ந்த பின்பும், எண்ணங்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்து திரிவதை எத்தனை முறை நாம் உணர்ந்திருப்போம்? படிக்க வேண்டும் என்று அப்போது எவ்வளவுதான் உண்மையாக முயன்றாலும், நம்மால் கவனத்தை ஒருமுகப்படுத்த முடியாமல் போகும். நமது செயல்திறனை இந்தக் கவனச் சிதறல் குறைப்பதால் படிப்பு, வேலை ஆகியவை மிகவும் பாதிப்புக்குள்ளாகும். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாவோம். இந்தக் கவனச் சிதறலை எப்படித் தவிர்ப்பது, நமது கவனத்தை எப்படி மேம்படுத்துவது? நமது சூழல், உணவுப் பழக்கம், மனப்போக்கு ஆகியவற்றுக்கும் கவனச் சிதறலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கீழே உள்ள சில எளிய வழிமுறைகள் மூலம் அவற்றை மாற்றியமைத்து நமது கவனத்தை எளிதாக ஒருமுகப்படுத்தலாம்.
சூழல் செய்யும் மாயம்
படிப்பாக இருந்தாலும் வேலையாக இருந்தாலும் முழு கவனத்துடன் அவற்றில் ஈடுபடுவதற்குச் சாதகமான, அமைதியான சூழல் மிகவும் அவசியம். உங்களுடைய சூழலை மேம்படுத்த சில யோசனைகள்:
படிப்பதற்கும் வேலை செய்வதற்கும் சவுகரியமாக, சரியான உயரத்தில் மேஜையும் நாற்காலியும் இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பதன் மூலம், அசவுரியத்தைக் காரணமாக சொல்லி அடிக்கடி எழுந்து நடக்கும் ஆசையைத் தவிர்க்கலாம்.
இயற்கைக் காட்சிகள் கவனத்தை ஒருமுகப்படுத்த உதவும். இயற்கை எழில் கொஞ்சும் சூழல் இன்றைக்குக் கனவாக மாறிவிட்ட நிலையில் இயற்கைக் காட்சிகள் கொண்ட போஸ்டர்களை நாம் பார்க்கும்படி சுவரில் ஒட்டலாம். அதைப் பார்க்கும்போது மனம் அதில் லயித்துக் கவனம் மேம்படும்.
இசைக் குறிப்பாக வாத்திய இசை கேட்பது, கவன மேம்பாட்டுக்கு உதவும். ஒரே சீரான லயத்தில் ஒலிக்கும் அலையின் ஓசை அல்லது மழையின் ஓசையைப் பின்னணியில் ஒலிக்கச் செய்வதன் மூலம், தேவையற்ற சத்தங்களால் ஏற்படும் கவன ஈர்ப்பைத் தவிர்க்கலாம்.
உணவின் மகிமை
மன உற்சாகத்துக்கும் நம்முடைய உணவுப் பழக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. உற்சாகமான மனம் எண்ணங்களைச் செயலாக மாற்ற உதவும்; கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ளும்.
நீர்ச்சத்துக் குறைபாடு நம்மை எளிதில் களைப்படையச் செய்யும். மூளைக்குப் போதிய திரவம் கிடைக்கவில்லை என்றால், முழு வீச்சில் வேலை செய்ய முடியாது. எனவே, போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் கவனத்தை மேம்படுத்துவதற்கு உதவும் எளிய வழி.
காலையில் சத்தான உணவு வகைகளைச் சாப்பிடுவது, நாள் முழுவதும் உற்சாகமாகச் செயல்பட உதவும். உலர்ந்த பழங்கள், கடலை, பழ வகைகள், காய்கறிகள் போன்றவற்றைச் சரிவிகிதமாகச் சாப்பிடுவது நல்லது.
ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்காமல், அவ்வப்போது எழுந்து கொஞ்சம் உலாவுவது, சுறுசுறுப்பைக் கூட்டும்.
ஒரு நேரத்தில் ஒரு வேலை மட்டும்!
கவனச் சிதறல், படிப்புத் திறன் இழப்பு, வேலைத் திறன் பாதிப்பு ஆகியவற்றுக்கு நம்முடைய மனப்போக்கு ஒரு முக்கியக் காரணம். இது தனி நபரை மட்டுமல்ல; ஒரு நிறுவனத்தையே பாதிக்கக்கூடும்.
தேர்வு பற்றிய பயம், வேலையின் காலக்கெடு பற்றிய பதற்றம், மனதில் சூழ்ந்திருக்கும் கவலை, நாளை நடக்கப்போகும் கிரிக்கெட் போட்டி அல்லது அபிமான நடிகர் நடித்த படம் பற்றிய எண்ணம் இப்படி உங்களைப் பாதிக்கும் விஷயங்களைப் பட்டியலிடுங்கள். ஒரு தாளில் அவற்றை வரிசைப்படுத்தி எழுதிவைத்துக்கொண்டு, பின்னர் அவற்றைப் பற்றி யோசிக்கத் தனியாக நேரம் ஒதுக்கி, அந்த நேரத்தில் மட்டும் அவற்றைப் பற்றிச் சிந்தித்துப் பழகுங்கள்.
குறுஞ்செய்தி, மின்னஞ்சல், அல்லது தொலைபேசி அழைப்பு போன்றவை வெறும் 10 நொடிகள் மட்டும் எடுத்துக்கொண்டாலும், நம் மனம் மீண்டும் பழைய ஒருமுகப்படுத்தப்பட்ட நிலைக்குச் செல்லக் குறைந்தது 15 நிமிடங்கள் ஆகும். எனவே, ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்வது நல்லது.
கடினமான வேலைகளை மட்டும் செய்தால் மூளை சீக்கிரம் களைப்படைந்துவிடும். எனவே, கடினமான வேலைகளுக்கு நடுவே கோப்புகள் அடுக்குதல், மேஜையைச் சுத்தம் செய்தல், பென்சில் சீவுதல் போன்ற எளிய வேலைகள் செய்வது, மூளைக்குத் தகுந்த ஓய்வளித்து மீண்டும் உற்சாகம் அடையச் செய்யும்.
நிறைய வேலைகள் இருக்கும்போது கவனச் சிதறல் ஏற்படுவது சகஜம்தான். எனவே, எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று முடிவுசெய்து, அதன் அடிப்படையில் வரிசைப்படுத்தி எழுதிவைக்க வேண்டும். பின்பு அந்த வரிசையில் அவற்றைச் செய்வதன் மூலம் பதற்றத்தைத் தவிர்க்கலாம்.
இது போன்ற எளிய வழிமுறைகளைப் பழகிப் பின்பற்றுவதன் மூலம், நம் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி, கவனத்தை மேம்படுத்தி, செயல் திறனை அதிகரித்து, வெற்றிக் கொடியை எளிதாக நாட்டலாம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT