Published : 17 Oct 2017 10:00 AM
Last Updated : 17 Oct 2017 10:00 AM

கேள்வி நேரம் 5: நாம் அறியாத தீபாவளி

1. சமண மதத்தினருக்குத் தீபாவளி கொண்டாட்டம் மிக முக்கியமானது. அன்றைக்கு அவர்கள் தீப வரிசை (தீப ஆவளி) ஏந்தி வழிபடுகிறார்கள். அதுவே தீபாவளி என்ற பெயர் உருவானதற்குக் காரணம். சமண மதத்தினர் தீபாவளியைக் கொண்டாடுவதற்குக் காரணம் என்ன?

14CH_QuizAmitabright

2. அமிதாப் பச்சன் நடித்து பிரகாஷ் மெஹ்ரா இயக்கிய பிரபல பாலிவுட் படம் ஸான்ஜீர் (1973). சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராகக் கொதித்து எழும் கோபக்கார இளைஞன் என்கிற புதிய அடையாளத்தை இந்தப் படமே அமிதாப்புக்கு வழங்கியது. இந்தப் படத்துக்கும் தீபாவளிக்கும் என்ன தொடர்பு?

3. தீபாவளிக்குத் தமிழகத்தில் அதிரசம் சுடும் வழக்கம் பரவலாக இருக்கிறது. அதேநேரம் வட மாநிலங்களில் அதிகம் செய்யப்படும் இனிப்பு ஒன்று உண்டு. பாகிஸ்தான், வங்க தேசத்திலும் இந்த இனிப்பு பிரபலம். சமோசாவைப் போன்ற வடிவத்திலிருக்கும் இந்த இனிப்பின் பெயர் என்ன?

4. ராமாயணத்துக்கும் தீபாவளிக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. தீபாவளி நாளில்தான் ராமாயணத்தின் முக்கியமான நிகழ்வு ஒன்று நடைபெறுகிறது. அது என்ன?

5. தீபாவளிப் பண்டிகையை அமெரிக்க வெள்ளை மாளிகையில் முதன்முறையாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கொண்டாடினார். அது கொண்டாடப்பட்ட ஆண்டு எது?

6. தீபாவளியைப் பல்வேறு வெளிநாடுகளும் கொண்டாடுகின்றன. இந்தியாவின் அண்டை நாடு ஒன்று திகார், ஸ்வந்தி என்ற வேறு பெயர்களில் தீபாவளியைக் கொண்டாடுகிறது. அந்த நாடு எது?

7. தீபாவளியை ஒட்டி சீக்கியர்கள் ‘பந்தி ச்சோர் திவாஸ்' எனும் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இது தீபாவளியைப் போலவே கொண்டாடப்பட்டாலும் சீக்கியர்கள் அந்த நாளைக் கொண்டாடுவதன் முக்கியத்துவம் என்ன?

14CH_QuizObama

8. தீபாவளியின்போது குஜராத்தில் ஆடப்படும் பிரபல நடனத்தின் பெயர் கர்பா. இந்த நடனத்தின் பெயர் எதைக் குறிக்கும் வகையில் வைக்கப்பட்டது. அந்தச் சொல்லுக்கான அர்த்தம் என்ன?

9. இந்தியாவின் தீபத் திருநாளாகத் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதைப் போலவே Lantern Festival எனப்படும் விளக்குத் திருவிழாவைக் கொண்டாடும் இந்தியாவின் அண்டை நாடு எது?

10. வட மாநிலங்களில் தீபாவளியை ஒட்டி சீட்டுக்கட்டு விளையாடுவது ஒரு சடங்குபோல நடைபெறுகிறது. தீபாவளி அன்று சீட்டு விளையாடாவிட்டால் அடுத்த பிறவியில் கழுதையாகப் பிறப்பார்கள் என்று வேடிக்கையான நம்பிக்கைகூட உண்டு. அந்த நாளில் சீட்டு விளையாடினால் ஆண்டு முழுவதும் செல்வச் செழிப்புடன் இருக்கலாம் என்றும், பணத்தின் முக்கியத்துவத்தை அது எடுத்துச் சொல்வதாகவும் நம்பிக்கைகள் நிலவுகின்றன. தற்போது இதையொட்டி சூதாட்டமும் பெருகிவிட்டது. தீபாவளியை ஒட்டி சீட்டு விளையாட்டு அதிகம் நடைபெறும் இந்திய நகரம் எது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x