Published : 28 Aug 2023 09:44 AM
Last Updated : 28 Aug 2023 09:44 AM

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் வெற்றி பெற்றுள்ளதால் ஆசியக் கோப்பையில் உத்வேகம் கிடைக்கும்: பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம் பேட்டி

பாபர் அஸம்

கொழும்பு: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளதால் ஆசியக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு உத்வேகம் கிடைக்கும் என்று அந்த அணியின் கேப்டன் பாபர் அஸம் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒரு நாள்போட்டி கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வந்தது. முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில் நேற்று முன்தினம் இருஅணிகளிடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.

3-வது ஒரு நாள் போட்டியில் முதலில்விளையாடிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள்குவித்தது. கேப்டன் பாபர் அஸம் 60, விக்கெட் கீப்பர் ரிஸ்வான் 67, அகா சல்மான் 38 ரன்கள் குவித்தனர். பின்னர் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 48.4 ஓவர்களில் 209 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி கண்டது.

வெற்றிக்குப் பின்னர் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம் கூறியதாவது: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் நாங்கள் முழுமையாகக் கைப்பற்றியுள்ளோம். இது ஆசியக் கோப்பையில் விளையாடும் எங்களுக்கு நல்ல உத்வேகத்தைக் கொடுக்கும்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் வெற்றி பெற்றுள்ளதால் அணி வீரர்களுக்கு எதிர்பார்த்த உத்வேகம் கிடைத்துள்ளது. சமீப காலமாக ஒருநாள் போட்டிகளில் சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடி வருகிறோம்.

ஆசியக் கோப்பையில் விளையாடுவதற்காக நாங்கள் உற்சாகத்துடன் உள்ளோம். மற்றவர்கள் நினைப்பது போல ஆப்கானிஸ்தான் அணியை வெல்வது எளிதான காரியம் கிடையாது. சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற மைதானங்களில் அவர்கள் எவ்வளவு கடினமாக பந்துவீசுவார்கள் என்பது அனைவருக்குமே தெரியும்.

பாகிஸ்தான் நடத்தும் ஆசியக் கோப்பையில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம். இலங்கையில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் எங்கள் ரசிகர்களுக்கு நல்ல கிரிக்கெட்டைஅளித்ததாக நாங்கள் நம்புகிறோம்.

தற்போது ஐசிசி ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதலிடத்துக்கு வந்துள்ளோம். இது ஒட்டுமொத்த அணிக்கும் கிடைத்த வெற்றி. தரவரிசையில் முதலிடத்துக்கு வருவது நிச்சயம் திருப்திகரமான விஷயம்தான். சர்வதேச ஒரு நாள் போட்டித் தரவரிசையில் நாங்கள் ஏற்கெனவே முதலிடத்தில் இருந்தவர்கள்தான். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x