Published : 01 Jun 2023 01:52 PM Last Updated : 01 Jun 2023 01:52 PM
பன்முக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் | பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக். கடந்த 2022 ஐபிஎல் சீசனில் அபாரமாக விளையாடி இந்திய அணியில் கம்பேக் கொடுத்திருந்தார். அண்மையில் முடிந்த ஐபிஎல் சீசனில் எதிர்பார்த்த வகையில் அவரது கள செயல்பாடு அமையவில்லை.
கடந்த 2004 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் ‘இனி அவரது கேரியர் அவ்வளவு தான்’ என சொல்லும் போதெல்லாம் கம்பேக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். மீண்டும் ஒருமுறை அதுபோன்றதொரு கம்பேக்கை அவர் கொடுத்தாலும் அதில் ஆச்சரியம் கொள்ள வேண்டியதில்லை. இன்று அவருக்கு பிறந்தநாள்.
தனக்கு வாய்ப்பு மறுக்கப்படும் போதெல்லாம் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதன் ஊடாக உலக கிரிக்கெட்டில் என்ட்ரி கொடுப்பவர். அவரது கிரிக்கெட் கேரியரில் ஹைலைட்டான போட்டிகளை கொஞ்சம் ரீவைண்ட் செய்வோம்.
இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 60 டி20 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் விளையாடி உள்ளார். அதன் மூலம் மொத்தம் 3,463 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் விளையாடி இருந்தார். அவர் ‘டிகே’ என ரசிகர்கள் அன்போடு அழைப்பதுண்டு. கிரிக்கெட் வீரர், வர்ணனையாளர் என பன்முக திறன் கொண்டவர். அணியில் விக்கெட் கீப்பிங் ரோல் இல்லையென்றால் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாகவும் விளையாடுவார். அணியை வழிநடத்தும் தலைமைப் பண்பும் கொண்டவர். ஃபினிஷர் என்றும் அறியப்படுபவர்
இதே நாளில் சென்னையில் கடந்த 1985-ல் தினேஷ் கார்த்திக் பிறந்தார்
கடந்த 2004-ல் தனது முதல் சர்வதேச போட்டியில் (ஒருநாள் கிரிக்கெட்) இந்திய அணியின் வெற்றியை பறிக்கும் முனைப்புடன் விளையாடிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மைக்கேல் வான் விக்கெட்டை ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார். லார்ட்ஸ் மைதானத்தில் பந்தை பற்றியதும் பறந்து ஸ்டம்பை தகர்த்த அபார கீப்பிங் அது
அதே ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுக வீரராக விளையாடினார்.
2007-ல் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. அந்த தொடரில் 263 ரன்கள் குவித்து இந்திய அணி சார்பில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக ஜொலித்தார். முறையே 60, 77 மற்றும் 91 என 3 அரை சதங்கள் அதில் அடங்கும்.
அதே ஆண்டில் டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் விளையாடினார்
2018-ல் நிதாஹாஸ் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிராக 8 பந்துகளில் 29 ரன்கள் குவித்து அசத்தினார்.
2021-ல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வர்ணனையாளராக பணியாற்றினார். முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை வர்ணனை செய்தார்
2022 ஐபிஎல் தொடரில் 330 ரன்கள் குவித்து இந்திய அணியில் கம்பேக் கொடுத்தார்
WRITE A COMMENT