Published : 01 Jun 2023 08:00 AM
Last Updated : 01 Jun 2023 08:00 AM
லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் 7-ம் தேதி லண்டனில் தொடங்க உள்ள நிலையில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்களான விராட் கோலி மற்றும் மொகமது சிராஜ் ஆகியோரைப் பற்றி உயர்வாக பேசினார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக கடந்த 6 மாதங்களாக அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாகவே சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் அவரால் முழுமையாக பங்கேற்க முடியாமல் போனது. இருப்பினும் வரும் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான உடற்தகுதியை எட்டிவிட வேண்டும் என்பதில் ஹேசில்வுட் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய ஹேசில்வுட், விராட் கோலி, மொகமது சிராஜ் உடனான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
விராட் கோலி பயிற்சியின் போது கடினமாக உழைக்கக்கூடியவர். அதுதான் அவரை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. முதலில் அவரது உடற்தகுதி, அதன் பின்னர் பேட்டிங் திறன், பீல்டிங் ஆகியவை அபாரமானது. பயிற்சிக்கு முதல் ஆளாக வரும் அவர் எப்போதும் கடைசி ஆளாகத் தான் வெளியே செல்வார். எல்லா நேரங்களிலும் அவருடைய பயிற்சியின் தீவிரம் மிகவும் உயர்ந்த மட்டத்தில் உள்ளது, அது மற்ற அனைவரையும் இழுத்துச் செல்கிறது. அது மற்ற வீரர்களின் திறனையும் மேம்படுத்த உதவுகிறது” என்றார்.
இந்த சீசனில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அதிக விக்கெட்களை வேட்டையாடியவர்களின் பட்டியலில் மொகமது சிராஜ் முதலிடத்தில் இருந்தார். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சிராஜ் முக்கிய பங்குவகிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிராஜ் குறித்து ஹேசில்வுட் கூறும் போது, “பெங்களூரு அணியில் நான், இணைவதற்கு சற்று தாமதமானது. ஆனால் அதற்கு முன் அவர், அனல் பறக்கும் பந்து வீச்சை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு முறையும் சிராஜ், அதிக விக்கெட்களை வீழ்த்துபவராக இருக்கிறார். சின்னசாமி மைதானத்தில் சிக்கனமாகப் பந்து வீசுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனாலும் சில நேரங்களில் சிராஜ் ஓவருக்கு 6 அல்லது 6.5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். அவருடைய பந்துவீச்சில் உள்ள கட்டுப்பாடு சிறப்பானது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT