Published : 01 Jun 2023 07:33 AM
Last Updated : 01 Jun 2023 07:33 AM

WTC Final | புஜாராவின் உள்ளீடு பலன் கொடுக்கும்: முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து

கவாஸ்கர் மற்றும் புஜாரா

போர்ட்ஸ்மவுத்: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் 7-ம் தேதி லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த போட்டி குறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த பேட்டி:

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டி சுவாரஸ்யமானதாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் போட்டியின்போது இந்திய வீரர்களுக்கு, டெஸ்ட் வீரர் சேத்தேஷ்வர் புஜாரா உதவ முடியும். அவரது உள்ளீடுகள் இந்திய அணி வீரர்களுக்கு மிகவும் விலைமதிப்பற்றதாக இருக்கும்.

சேதேஷ்வர் புஜாரா இங்கிலிஷ் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளை நீண்ட காலமாக விளையாடி வருகிறார். எனவே இந்த மைதானங்களையும், இங்குள்ள கள நிலவரத்தையும் அவர் நன்கு அறிந்திருப்பார்.

சஸ்ஸெக்ஸ் அணிக்காக அவர் கேப்டன் பதவியையும் ஏற்று செயல்பட்டுள்ளார். மேலும் அந்த அணியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தும் விளையாடியுள்ளார். எனவே புஜாராவின் உள்ளீடுகள் இந்திய அணி வீரர்களுக்கு விலைமதிப்பற்றதாக இருக்கும்.

தி ஓவல் மைதானம் முழுவதையும் அவர் நன்கு அறிந்திருப்பார் என்று நினைக்கிறேன். அவர் ஓவல் மைதானத்தில் விளையாடாமல் இருந்திருக்கலாம். ஆனாலும் அவர் தரும் உள்ளீடுகள் விலைமதிப்பற்றவை.

அது அணி வீரர்களுக்கும், கேப்டனுக்கும் மிகவும் மிகவும் உதவும். இங்கிலாந்து வந்துள்ள இந்திய அணி வீரர்கள், தற்போதுதான் ஐபிஎல் போட்டியை முடித்துவிட்டு வந்துள்ளனர். எனவே அவர்கள் தங்களது பேட்டிங் வேகத்தை மாற்றிக் கொண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்றார் போல் விளையாட வேண்டும். டி20 போட்டிகளில் விளையாட வேண்டிய பேட்டிங் வேகத்தை இங்கு காட்டக்கூடாது. டெஸ்ட் போட்டிகளின் நிலைமை வேறு. எவ்வளவு வேகத்தைக் குறைத்து விளையாட முடியுமோ அவ்வளவு குறைத்து இங்கு ஆடவேண்டும்.

மேலும், இங்கிலாந்து ஆடுகளங்களின் நிலையை உணர்ந்து விளையாடுவதற்கு இந்திய வீரர்கள் தயாராக இருக்க வேண்டும். இங்குள்ள மைதானங்களில் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகும். அதை மனதில் கொண்டு வீரர்கள் பந்துகளைக் கையாள வேண்டும். அதேபோல் நமது இந்திய அணி வீரர்கள், ஃபுல்லர் லெந்த் பந்துகளை வீசப் பழகிக் கொள்ளவேண்டும்.

இந்தியாவில் உள்ள சீதோஷ்ண நிலை வேறு. இங்கிலாந்தில் உள்ள சீதோஷ்ண நிலை வேறு. இங்கு குளிர் சற்று அதிகமாக இருக்கும். அதற்கேற்ப வீரர்கள் தங்களை தயார் செய்து கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x