Published : 30 May 2023 11:20 PM
Last Updated : 30 May 2023 11:20 PM

டிஎன்பிஎல் 7வது சீசன் ஜூன் 12ல் தொடக்கம் - சேப்பாக்கத்தில் போட்டிகள் இல்லை

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் தமிழ்நாடு பிரீமியர் லீக் - 2023 (TNPL) தொடரின் 7வது சீசன் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள டி.என்.சி.ஏ கிளப்பில் (TNCA Club) நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பில் டி.என்.பி.எல் சேர்மன் ஆனந்த், தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஷாரூக்கான் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு பிரிமியர் லீக்கின் 7-வது சீசன் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 12 வரை நடைபெற உள்ளது. ஜூன் 12-ம் தேதி தொடங்கி ஜூலை 12 வரை நடைபெறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் ஏழாவது சீசனில் மொத்தம் 32 போட்டிகள் 25 நாட்களில் நடைபெற உள்ளது. இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் கோவை, திண்டுக்கல், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடத்தப்பட உள்ளது.

குவாலிஃபயர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் சேலம் மைதானத்திலும் குவாலிஃபயர் 2 மற்றும் இறுதிப் போட்டி திருநெல்வேலியிலும் நடைபெற உள்ளது. லீக் போட்டிக்கு பிறகு நடைபெறும் குவாலிஃபயர் 2 மற்றும் இறுதிப் போட்டிகள் மழையால் தடைபடும்பட்சத்தில் ரிசர்வ் டே முறையில் போட்டிகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எல்.இ.டி விளக்குகளை சீர்ப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால் இந்தாண்டு டி.என்.பி.எல் போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படவில்லை என்றும் இந்த ஆண்டு உலக கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக தயார்ப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணை செயலாளர் ஆர்.என்.பாபா தெரிவித்தார்.

டிஎன்பிஎல் போட்டியில் முதல் பரிசு 50 லட்சம், இரண்டாம் பரிசு 30 லட்சம், மூன்று மற்றும் நான்காம் பரிசு 20 லட்சம் என மொத்த பரிசு தொகை 1.7 கோடி ஆகும். குறிப்பாக இந்தாண்டு நடைபெறும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சர்வதேச போட்டிகளில் மட்டும் பயன்படுத்தப்பட்டுவந்த டி.ஆர்.எல் தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் போன்ற பல்வேறு வீரர்களை டிஎன்பிஎல் உருவாக்கி வருவதாக ஐ.பி.எல் பஞ்சாப் அணி வீரர் ஷாருக்கான் தெரிவித்தார். மேலும் அடுத்த ஆண்டு முதல் மகளிர் டிஎன்பிஎல் கிரிகெட் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணைச் செயலாளர் ஆர்.என்.பாபா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x