Published : 30 May 2023 03:26 PM Last Updated : 30 May 2023 03:26 PM
தோனியின் ஆனந்தக் கண்ணீர்... - ஐபிஎல் சாம்பியன் சிஎஸ்கே அணியினரின் உணர்ச்சி மிகு தருணங்கள்!
அகமதாபாத்: ஒவ்வொரு மெய்யான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிரிக்கெட் ரசிகராலும் மறக்க முடியாத நினைவாக அமைந்தது நடப்பு சீசனில் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி.
‘இதெல்லாம் ஒரு டீமா?, சொத்தையான ஃபேஸ் பவுலர்ஸ், டீமுக்குள்ள பாலிட்டிக்ஸ் நடக்குதாமே?’ என சிஎஸ்கேவை பலரும் விமர்சித்தனர். ஆனால், சிஎஸ்கே கைவசம் இருந்தது தோனி எனும் தலைவன், அவர் இடும் கட்டளையை நிறைவேற்றும் தளபதிகள் (அணி வீரர்கள்) மற்றும் அன்பான ரசிகர்கள். அதை வைத்தே முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதோ பட்டமும் வென்று விட்டது. நடப்பு சீசனின் இறுதிப் போட்டியின்போது களத்தில் நடைபெற்ற உணர்ச்சி மிகு தருணங்கள்...
வழக்கமாக வெற்றிக் கொண்டாட்டத்தில் தோனி பெரிதும் ஈடுபட மாட்டார். வெற்றியோ, தோல்வியோ ஒரு ஜென் துறவி நிலையில் இருப்பது போல அப்படியே கடந்து விடுவார். ஆனால், அப்படிப்பட்ட தோனி, கடைசி 2 பந்துகளில் ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி வெற்றி தேடி கொடுத்த ரவீந்திர ஜடேஜாவை அப்படியே தூக்கி சுமந்த அந்த தருணம் அற்புத ரகம். குறிப்பாக, ஜடேஜாவை தூக்கிக் கொண்டாடியபோது அவரது கண்களின் ஆனந்தக் கண்ணீர் எட்டிப் பார்த்ததையும் கவனிக்க முடிந்தது.
வெற்றிக்கு பிறகு தொலைக்காட்சி வர்ணனையில் பேசிய ஜடேஜா, ‘இந்த வெற்றி தோனிக்கு சமர்ப்பணம்’ என சொன்ன அந்தத் தருணம் மாஸ். இந்தப் போட்டிக்கு முன்னர் வரை தோனி - ஜடேஜா இடையே முரண்பாடு இருப்பதாக சொல்லப்பட்டது. ஜடேஜாவும் தனது சமூக வலைதளப் பதிவுகள் மூலம் இதை மறைமுகமாக தெரிவித்தது போல இருந்தது. ஆனால், அது அனைத்தும் தாமரை இலை மேல் பட்ட நீர் துளி போல ஆனது.
மோஹித் சர்மா கடைசி ஓவரை வீசியபோது சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்ஸி அணிந்திருந்த ரசிகை ஒருவர் இரு கரங்களையும் கூப்பியபடி கண் கலங்க போட்டியை பார்த்தார். அந்த வீடியோ பரவலாக கவனம் பெற்றது. சென்னையின் வெற்றிக்கு பிறகு அவரது கொண்டாட்டம் அமர்க்கள ரகம்.
அணியை வெற்றி பெற செய்ததும் தனது மனைவி ரிவாபா ஜடேஜாவை அணைத்து மகிழ்ச்சியை கொண்டாடினார் ஜடேஜா.
அதேபோல இறுதி ஓவரின் முதல் 4 பந்துகளை அபாரமாக வீசிய மோஹித் சர்மாவை வெற்றிக்கு பிறகு தோனி தேற்றி இருந்தார்.
அதிகாலை 3 மணி அளவில் தனி ஒருவராக மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் அருகே சென்று தோனி நன்றி தெரிவித்திருந்தார்.
இந்தப் போட்டி குஜராத் டைட்டன்ஸ் அணியின் சொந்த மைதானமான நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. மைதானத்தின் மொத்த எண்ணிக்கை சுமார் 1.32 லட்சம் இருக்கைகள். அதில் பெரும்பாலானவர்கள் சென்னை அணியின் ஆதரவாளர்கள். அதை சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெம்மிங் மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார். இதை அப்படியே மிரட்சியுடன் பார்த்திருந்தார் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா.
இந்த சீசனுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்த அம்பதி ராயுடுவும் இறுதிப் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணிக்கு வலு சேர்த்தார். அவர் கையில் கோப்பையை அளித்து அழகுபார்த்தார் தோனி.
WRITE A COMMENT