Published : 30 May 2023 11:23 AM
Last Updated : 30 May 2023 11:23 AM
ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடைசி ஓவர் த்ரில் போட்டியாக அமைந்து ஜடேஜாவின் கைவண்ணத்தில் சிஎஸ்கே கோப்பையை வென்றதில் நிறைவுற்றது. மோஹித் சர்மா ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து சிஎஸ்கே ரசிகர்களின் ‘பக் பக்’ இதய அழுத்தத்தை விடுவித்தார் ஜடேஜா.
இந்தத் தொடர் பேட்டர்களின் தொடராக அமைந்தது. காரணம் 37 முறை அணிகளின் ஸ்கோர் 200 ரன்களைக் கடந்துள்ளது. மேலும் 1,116 சிக்சர்களுடன் இதுவரை இல்லாத சிக்சர் தொடரானது இந்த ஐபிஎல் தொடர்.
இதில் டாப் 5 மிகப்பெரிய சிக்சர்களைப் பார்ப்போம்
1. ஃபாப் டு பிளெசிஸ்: 115 மீட்டர் தூரம்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி மோதிய நடப்பு சீசனின் 15வது ஆட்டம் இது. சின்னசாமி ஸ்டேடியத்தில் அன்று சிக்சர் மழை பொழிந்தது. ஆர்சிபி கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ் 46 பந்துகளில் 79 ரன்களைப் பறக்க விட்ட தினமாகும் அது. ஆனால் அன்று ரவி பிஷ்னோய் எதிர்பார்த்திருக்கவே மாட்டார், டுபிளெசிஸும்தான்.
இந்தத் தொடரின் அதி தூர சிக்சர் நம்முடையதாக இருக்கும் என்று டுபிளெசிஸும் நினைத்திருக்க மாட்டார், அந்த சிக்சரை வழங்கிய பவுலர் தான் தான் என்று பிஷ்னோயும் நினைத்திருக்க மாட்டார். பிஷ்னோய் பொதுவாக கூக்ளி அதிகமாக வீசுபவர். ஆனால் டுபிளெசிஸ் இந்த முறை கூக்ளியைக் கணித்து விட்டார். பின்னால் சென்று சற்றே ஷார்ட் பிட்ச் பந்தை மிட்விக்கெட் மீது சின்னசாமி ஸ்டேடியத்தின் கூரைக்கு அனுப்பினார் 115 மீட்டர் சிக்ஸ். இதுதான் ஐபிஎல் 2023-யின் அதிக தூர சிக்ஸ். இதற்கு முந்தைய பந்தில் கவர் திசையில் பெரிய சிக்சரை அடித்தார் டுபிளெசிஸ்.
The biggest six of IPL 2023 - Faf Du Plessis with a gigantic 115M six. pic.twitter.com/GdrYeEsWKt
2. டிம் டேவிட் - 114 மீட்டர்
இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே நடந்த போட்டியில் அடிக்கப்பட்ட காட்டடி சிக்ஸ். நேதன் எல்லிஸ் வீசிய புல்டாஸ் பந்தை மிட்விக்கெட் மீது தூக்கி அடிக்க பந்து இறங்குமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்திருக்கலாம். இந்தப் போட்டியில்தான் அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரை அசத்தலாக வீசி மும்பையை தோற்கடித்ததும் நிகழ்ந்தது.
3. ஜாஸ் பட்லர் - 112 மீட்டர்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயித்த 155 ரன்கள் இலக்கை எதிர்கொண்டு ஆடியது ராஜஸ்தான் ராயல்ஸ். ஜாஸ் பட்லர் அன்று சரியாக ஆடவில்லை 14 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் திணறினார். அப்போதுதான் யுத்விர் சதக் என்ற பவுலர் பட்லரிடம் சிக்கினார். சதக் வீச முன் காலை விலக்கிக் கொண்டு மிட் விக்கெட் நோக்கி ஒரே அடி பந்து 112 மீ பறந்து சிக்சர் ஆனது.
4. ஷிவம் துபே - 111 மீட்டர்
சிஎஸ்கே இடது கை வீரர் ஷிவம் துபே, இந்தத் தொடர் முழுவதும் சில அதிரடி சிக்சர்களை விளாசியதை யாரும் மறக்க முடியாது. அன்று ஆர்சிபி அணிக்கு எதிராக ஸ்லோயர் ஒன் தாதா பவுலர் ஹர்ஷல் படேல் பந்தை லாங் ஆனுக்கு மேல் அடித்த சிக்ஸ் 111 மீட்டர்கள் தூரம் சென்றது. 27 பந்துகளில் 52 ரன்களை 2 பவுண்டரி 5 சிக்சர்களுடன் விளாசினார் துபே. ஒரு இந்திய வீரர் அடித்த நீளமான சிக்ஸ் இதுதான்.
5. ரிங்கு சிங் - 110 மீட்டர்
இந்தத் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பெரிய வெளிப்பாடு இடது கை பினிஷர் ரிங்கு சிங் என்றால் மிகையாகாது. ஒரே ஓவரில் 5 சிக்சர்களை விளாசி கொல்கத்தாவுக்கு ஒரு அரிய வெற்றியை அதிர்ச்சி வெற்றியை பெற்றுத் தந்தவர் ரிங்கு சிங், ஆனால் இந்த சிக்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக வந்தது. 41 ரன்களை 2 ஓவர்களில் எடுக்க வேண்டிய நிலை. இலக்கு 177 ரன்கள். அப்போதுதான் சர்ச்சை ஆப்கான் பவுலர் நவீன் உல் ஹக்கை ரிங்கு சிங் 3 பவுண்டரிகள் விளாசினார். அடுத்து மிட் விக்கெட்டின் மீது மிகப்பெரிய சிக்சரை விளாசினார். கொல்கத்தாவின் தூரமான பவுண்டரிக்கு மேல் பறக்க நீண்ட சிக்ஸ் ஆனது. ரிங்கு சிங் 33 பந்துகளில் 67 ரன்கள் எடுத்த போதும் ஒரு ரன்னில் கொல்கத்தா தோற்றது என்ன மாயம் என்பதுதான் இன்றும் புரியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT