Published : 30 May 2023 04:17 AM
Last Updated : 30 May 2023 04:17 AM
அகமதாபாத்: ஐந்தாம் முறையாக ஐபிஎல் கோப்பை வென்று அசத்தியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். பரபரப்பான இறுதி ஆட்டத்தில் கடைசி ஓவரில் கடைசி பந்தில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
வெற்றிக்கு பின் பேசிய சென்னை கேப்டன் தோனி, "சொல்லப்போனால், ஓய்வை அறிவிக்க இதுவே சிறந்த நேரம். இப்போதே ஓய்வை அறிவிப்பது எளிதான விஷயம், ஆனால் 9 மாதங்கள் கடினமாக உழைத்து மேலும் ஒரு சீசனில் விளையாட முயற்சிப்பது பெரிய சவாலாக இருக்கும். அதற்கு எனது உடல் தாங்க வேண்டும். எல்லாம் உடல் ஒத்துழைப்பை பொறுத்து உள்ளது. அதை முடிவு செய்ய இன்னும் 6-7 மாதங்கள் உள்ளன. நான் பெற்ற அன்பின் அளவுக்கு என்னால் அவர்களுக்குத் திருப்பி தரக்கூடிய பரிசு என்பது இன்னும் ஒரு சீசன் அவர்களுக்காக விளையாடுவதுதான்" என்று பேச்சை தொடங்கினார்.
அப்போது வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, "வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் உங்களிடம் இருந்து சாதாரணமாக எந்தவிதமான உணர்ச்சியும் வெளிப்படாது. இதற்கு முன் சென்னையில் ஒருமுறை உங்களிடம் பேசும்போது முதல்முறையாக ரசிகர்களை பார்த்து நீங்கள் உணர்ச்சிவசப்பட்டதை பார்த்தேன்" எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த தோனி, "ஒரு உண்மை, இது எனது கரியரின் கடைசி கட்டம். இந்த சீஸனின் முதல் போட்டி இங்குதான் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் விளையாடும்போது மொத்த மைதானமும் எனது பெயரை உச்சரிக்கும் போது என் கண்களில் நீர் நிறைந்தது. என்னை அமைதிப்படுத்திக்கொள்ள டக் அவுட்டில் சிறிது நேரம் உட்கார்ந்துபோது இதை அழுத்தமாக இல்லாமல், இதை நான் அனுபவிக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். இதேதான் சென்னையிலும் கடைசி போட்டியில் நடந்தது. இதெல்லாம் மீண்டும் நடக்கும், மீண்டும் போட்டிகளில் விளையாடலாம் என நினைக்கிறேன். எதுவானாலும் நடக்கலாம்.
நான் என்னவாக இருக்கிறேனோ அதற்காக மக்கள் என்னை நேசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஐபிஎல் மாதிரியான ஒரு கிரிக்கெட் விளையாட்டை பார்க்கும் ஒவ்வொருவரும் தாங்களே மைதானத்தில் விளையாடுவதை போல் உணர்கிறார்கள். அதனால் ஒவ்வொருவரும் மற்றவர்களைவிட தங்களை என்னுள் தொடர்புபடுத்தி பார்க்கிறார்கள் என்பதே இத்தனை அன்புக்கான காரணம் என நான் நினைக்கிறேன். நான் யாருக்காகவும் என்னை மாற்றிக்கொள்ளவில்லை. நான் இப்படி இல்லை என்பதை இல்லாத ஒன்றை சித்தரிக்கவும் முயற்சிக்கவில்லை. அனைத்தும் எளிமையாக வைத்திருக்க பார்க்கிறேன்.
நாங்கள் வென்ற ஒவ்வொரு கோப்பையும் சிறப்பு மிகுந்ததே. ஆனால் ஐபிஎல்லின் சிறப்பு என்னவென்றால், நெருக்கடியான அனைத்து ஆட்டங்களுக்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதே. இன்றைய ஆட்டத்தில் சறுக்கல்கள் இருந்தன. எங்களின் பவுலிங் எடுபடவில்லை. பேட்டிங் சிறப்பாக அமைந்து, பவுலர்களின் அழுத்தத்தை குறைத்தது.
சில நேரங்களில் நானும் எரிச்சல், விரக்தி அடைவது உண்டு. அது மனிதத்துக்கான உணர்வு. ஆனால், மற்றவர்கள் நிலையிலிருந்து என்ன மாதிரியான அழுத்தங்கள் அவர்களுக்கு இருந்தது என யோசிக்க முயற்சிப்பேன். அதனால், பல நேரங்களில் அமைதியாக கடந்துவிடுவதுண்டு. ஒவ்வொரு தனிமனிதனும் அழுத்தத்தை வித்தியாசமாக கையாள்கின்றனர். ரஹானே போன்ற அனுபவமிக்க வீரர்கள் பலரும் அணியில் இருப்பதால் இளம் வீரர்கள் அவர்களிடம் எப்போதும் மனம் விட்டுப் பேச முடியும்" என்று உணர்ச்சி மிகுதி, ரசிகர்கள் அன்பு, அழுத்தம் தொடர்பாக விரிவாக பேசினார் தோனி.
The interaction you were waiting for
MS Dhoni has got everyone delighted with his response #TATAIPL | #Final | #CSKvGT | @msdhoni pic.twitter.com/vEX5I88PGK
அம்பதி ராயுடு ஓய்வு குறித்தும் தோனி பேசினார். அதில், "ராயுடுவின் சிறப்பு என்னவென்றால், அவர் களத்தில் இருக்கும்போது எப்போதும் 100% உழைப்பை கொடுக்க நினைப்பவர். அதே சமயம் அவர் இருக்கும் வரை எங்களால் ஃபேர் பிளே விருதை வெல்லவே முடியாது. இந்தியா ஏ அணிக்காக ஆடும் போதிலிருந்து நீண்ட காலமாக அவருடன் விளையாடி வருகிறேன்.
வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு இரண்டையும் சமமாக விளையாடக்கூடிய வீரர் ராயுடு. இது உண்மையிலேயே ஸ்பெஷலான ஒன்று. இன்று ஸ்பெஷலாக எதாவது செய்வார் என எதிர்பார்த்தேன். ராயுடுவும் என்னைப் போல மொபைல் போனை பெரிதாகப் பயன்படுத்தாதவர். அவர் தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை அனுபவிப்பார் என்று நம்புகிறேன்" என்று பேசி முடித்தார்.
கோப்பையை வாங்கும் தருணத்தில் ஜடேஜாவையும், அம்பதி ராயுடுவையும் அழைத்துச் சென்ற தோனி, ராயுடுவை கோப்பையை வாங்க வைத்து ரசித்தார். இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT