Published : 29 May 2023 05:38 PM
Last Updated : 29 May 2023 05:38 PM
புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளனர் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள். நேற்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி விவசாயிகளுடன் அவர்கள் பேரணி செல்ல முயன்றனர். அப்போது இந்தியாவுக்காக உலக அளவில் பதக்கம் வென்றுள்ள வினேஷ் போகத், சாக்சி மாலிக் மற்றும் பஜ்ரங் பூனியாவை தடுப்புக் காவலில் கைது செய்தனர் டெல்லி போலீஸார்.
இது தொடர்பாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா. அவர்களை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றி இருந்தனர். அந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டன.
“உறக்கமில்லா இரவாக இருந்தது நேற்றைய இரவு. எனது சக இந்திய மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மேற்கொண்ட போராட்டத்தில் நடந்த அதிர்ச்சியூட்டும் வகையிலான சம்பவத்தின் படங்களே அதற்குக் காரணம். விளையாட்டு அமைப்புகளில் சுதந்திரமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இப்போது நமக்கான தேவை. அவர்கள் மரியாதையான முறையில் கையாண்டிருக்க வேண்டும். நாட்டில் உள்ள ஒவ்வொரு விளையாட்டு வீரரும் பாதுகாப்பான சூழலை பெற தகுதியானவர்கள்” என அபினவ் பிந்த்ரா தெரிவித்துள்ளார்.
வினேஷ் போகத், சாக்சி மாலிக் மற்றும் பஜ்ரங் பூனியா உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் மற்றும் விவசாயிகள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர்கள் அங்கு போராடவும் டெல்லி போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர்.
முன்னதாக, மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, இந்திய ஆடவர் கால்பந்தாட்ட அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, தடகள வீரர் முரளி ஸ்ரீசங்கர் ஆகியோர் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்திருந்தனர்.
Last night was sleepless, haunted by the horrifying images of my fellow Indian wrestlers protesting. It's high time we establish independent safeguarding measures across sporting organizations. We must ensure that if such situations arise, they are dealt with utmost sensitivity…
— Abhinav A. Bindra OLY (@Abhinav_Bindra) May 29, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment