Published : 29 May 2023 02:08 PM
Last Updated : 29 May 2023 02:08 PM

‘இம்பாக்ட் பிளேயர் விதி உள்ள வரை தோனியும் விளையாடுவார்’ - பிராவோ கருத்தும் சாத்தியமும்

ஐபிஎல் 2023 தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘இம்பாக்ட் பிளேயர்’ என்னும் 12-வது வீரரும் ஆடக்கூடிய புதிய விதிமுறை நீடிக்கும் வரை தோனி விளையாடுவார் என்று முன்னாள் சிஎஸ்கே வீரரும், இப்போதைய பந்துவீச்சுப் பயிற்சியாளரும், மே.இ.தீவுகளின் ஆல்ரவுண்டருமான டிவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.

இம்பாக்ட் பிளேயர் என்பது சாதாரணமாக விளையாடும் 11 வீரர்கள் தவிர, மேலும் 5 வீரர்களை அணிகள் அறிவிக்கலாம். இவர்களில் யாரை வேண்டுமானாலும் இம்பாக்ட் பிளேயராக இறக்கிக் கொள்ளலாம். இதனை இந்த ஐபிஎல் தொடரில் பல அணிகள் திறம்பட பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளன, ஆர்சிபி அணி கேப்டன் டுபிளெசியையே இம்பாக்ட் பிளேயராகக் களமிறங்கியதையும் பார்த்தோம்.

“இம்பாக்ட் பிளேயர் என்னும் விதிமுறை எம்.எஸ்.தோனியை இன்னும் அதிக ஆண்டுகள் விளையாட வைக்க உதவும்” என்கிரார் டிவைன் பிராவோ. இதனையடுத்து 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி நூறு சதவீதம் விளையாடுவார் என்று கூறுகிறார் டிவைன் பிராவோ. "ரஹானேவும் ஷிவம் துபே, ஜடேஜா போன்றோர் அணிக்கு வலு சேர்ப்பதால் தோனியிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கவில்லை.

ஆனால், கடினமான சூழ்நிலைகளை எப்படி சமாளித்து மீண்டு வருவது என்பது தோனிக்குக் கைவந்த கலை. அணி என்ன நெருக்கடியிலிருந்தாலும் தோனி அமைதியாகவே இருப்பார். எனவே, அவரது கேப்டன்சி அணிக்கு முக்கியம்” என்கிறார் டிவைன் பிராவோ.

ஒருவேளை இம்பாக்ட் பிளேயர் விதிமுறையே வணிக பவர் ஹவுஸ்களான, வயதாகி வரும் தோனி, கோலி, ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ் உள்ளிட்டோரை தக்கவைக்கத்தானோ என்று தோன்றுகின்றது. ஏனெனில், புதிய வீரர்களினால் ஐபிஎல் அணிகளுக்கு ஸ்பான்சர் வருமானம் கிடைக்காது. அதை அவர்கள் ஈட்டுவதற்குள் அந்த வீரரின் மீது ஐபிஎல் அணி உரிமையாளர் முதலீடு செய்ய வேண்டும். எப்போதுமே புதிய முதலீடை விட பழைய முதலீடுகளினால் வருமானப் பெருக்கம் செய்வதையே வர்த்தகதாரர்கள், தொழிலதிபர்கள் விரும்புவார்கள்.

இதற்காகவேன்றே யோசித்து, திட்டமிட்டு இந்த இம்பாக்ட் பிளேயர் விதிமுறையைக் கொண்டு வந்துள்ளார்களோ என்று டிவைன் பிராவோ கூற்று நம்மை ஐயம் கொள்ளச் செய்கிறது.

நம் கேள்வி என்னவெனில், இவர்களே 45 வயது வரை ஆடிக்கொண்டிருந்தால், அதுவும் ஃபீல்டிங் செய்ய வேண்டாம், வெறுமனே மட்டையை சுற்றினால் போதும் என்று இருந்தால், புதிய வீரர்கள் எப்படி அணிக்குள் வருவார்கள்? அவர்கள் எப்போது இந்தியா அணிக்கு ஆடும் அளவுக்குத் தயாராவார்கள்? ஆகவே, வீரர்கள் ரிட்டையர்மென்ட் வயது வரம்பை ஐசிசி, பிசிசிஐ இறுதியும் உறுதியும் செய்து நிர்ணயிக்கும் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆனால், சேவாக் கூறுவருவதென்னவெனில், “எம்.எஸ். தோனிக்கு இம்பாக்ட் பிளேயர் விதி பொருந்தாது. ஏனென்றால், அவர் கேப்டன்சிக்காக மட்டுமே விளையாடுகிறார். அவர் கேப்டனாக களத்தில் இருக்க வேண்டும். பீல்டிங் செய்யாத ஒருவருக்கும், பேட்டிங் செய்யாத ஒருவருக்கும் அல்லது பந்துவீசாதவருக்கும்தான் இம்பாக்ட் பிளேயர் விதி. பேட்டிங் செய்ய வேண்டும். தோனி எங்கு பேட் செய்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 40-50 பந்துகளை அவர் ஆடியிருந்தால் பெரிது. அவர் கேப்டனாக இல்லை என்றால், அவர் இம்பாக்ட் ப்ளேயராக கூட விளையாட மாட்டார். பிறகு, நீங்கள் அவரை வழிகாட்டியாகவோ அல்லது பயிற்சியாளராகவோ அல்லது கிரிக்கெட் இயக்குநராகவோ பார்க்கலாம்” என்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x