Published : 28 Oct 2017 03:11 PM
Last Updated : 28 Oct 2017 03:11 PM
மும்பையில் நடைபெற்ற குரூப் சி, ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி மும்பைக்கு எதிராக முதல் இன்னிங்சில் 450 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றதால் 3 புள்ளிகளைப் பெற்றாலும், இந்திய அணியின் முக்கிய வீச்சாளரான அஸ்வினை, மும்பை வளரும் நட்சத்திரம் ஷ்ரேயஸ் ஐயர் பதம் பார்த்த விதம் கிரிக்கெட் பண்டிதர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முதல் இன்னிங்ஸில் 62 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 57 ரன்கள் விளாசிய ஷ்ரேயஸ் ஐயர், 2-வது இன்னிங்சில் 124 பந்துகளில் 138 ரன்களை 11 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் விளாசியதில் மும்பை 371/5 என்று டிக்ளேர் செய்தது. மற்றொரு மும்பை வீரர் ஹெர்வாட்கர் 132 ரன்களை எடுத்தார். இருவரும் இணைந்து 187 ரன்களைச் சேர்த்தனர். ஆட்டம் டிராவில் முடிந்தாலும் தமிழக அணிக்கு 3 புள்ளிகள் கிடைத்தது.
அஸ்வின் சமீப காலங்களில் ஒருநாள், டி20 போட்டிகளில் சுழற்சி முறைத் தேர்வினால் அணியில் தேர்வாக முடிவதில்லை என்ற நிலையில் அவர் தன் பந்து வீச்சு ஆயுதங்களில் லெக் பிரேக், பிளிப்பர் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டு அதை அவ்வப்போது போட்டிகளில் வீசியும் வருகிறார். பலதரப்பட்டப் பந்துகளை, பலதரப்பட்ட லெந்த்களில் வீசி பரிசோதனைகளை நிறைய மேற்கொண்டு வருகிறார்.
ஆனால் மும்பைக்கு எதிரான ரஞ்சி போட்டியில் இந்தியாவின் வருங்கால நட்சத்திரம் என்று கருதப்படும் ஷ்ரேயஸ் ஐயர், அஸ்வினின் திட்டங்களை முறியடிக்கும் விதமாக ஆடி பலரையும் அசத்தியுள்ளார். அஸ்விணை ஐயர் எதிர்கொண்ட 40 பந்துகளில் 37 ரன்களை விளாசினார். இதில் 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் அடங்கும்.
ஷ்ரேயஸ் ஐயருக்கு ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய உத்தி பயனளிக்கவில்லை, ஐயர் 2 சிக்சர்களை விளாசினார், இதில் ஒன்று மைதானத்தை விட்டு வெளியே சென்றது.
ஷ்ரேயஸ் ஐயர் 84 ரன்களில் இருந்த போது அஸ்வின் அவரை கொஞ்சம் கட்டுப்படுத்தினார். ஆஃப் திசையில் 3 பீல்டர்கள், லெக் திசையில் 6 பீல்டர்கள், ஷ்ரேயஸ் ஐயர் தூக்கி அடித்து அவுட் ஆவார் என்று களவியூகம் அமைக்கப்பட்டது, ஆனால் அப்படி நடக்கவில்லை. மாறாக அஸ்வினுக்கு எதிராக சிங்கிள்கள், 2-கள் என்று ஐயர் ரன்களை எடுத்தார். லெக் ஸ்டம்புக்கு வெளியேயும் அஸ்வின் வீச நேரிட்டது. சதம் எடுத்து முடித்த பிறகு அஸ்வினை மீண்டும் லான் ஆனில் சிக்ஸ், பிறகு ஆஃப் திசையில் ஒரு பவுண்டரி என்று அடிக்கும் வழிக்குத் திரும்பினார். தொடர்ச்சியாக அஸ்வின் 11 ஓவர்கள் வீசினார், இதில் 50 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஷ்ரேயஸ் ஐயர் 124 பந்துகளில் 11 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 138 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
வெறும் சிக்சர்கள் பவுண்டரிகள் மட்டுமல்ல, அஸ்வினின் பல்வேறு பந்துகளை அபாரமாகக் கணித்து அவரது திட்டங்களை ஷ்ரேயஸ் ஐயர் முறியடித்தார்.
எனவே, சர்வதேச வீரர்கள் உள்நாட்டில் ஆடினால்தான் தங்கள் பந்து வீச்சு இங்கேயே எப்படிப் பதம் பார்க்கப்படுகிறது என்பது தெரியவரும்போது திருத்திக் கொள்ளவும் மேம்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. அப்போதுதான் அயல்நாடுகளில் போய் வீசும் போது இன்னும் சிறப்பாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்த முடியும், உள்நாட்டு கிரிக்கெட் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் அளப்பரியது.
சச்சின் டெண்டுல்கருக்கு அனில் கும்ப்ளே நிறைய வீசியுள்ளார், அதன் மூலமே அவர் அயல்நாடுகளில் சிறந்த பவுலராகவும் மாறினார், அது போல்தான் உள்நாட்டில் சிறந்த வீர்ர்களுக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் ஆடும் இந்திய வீரர்கள் ஆட வேண்டும், அப்போதுதான் ஒரு ‘ரியாலிட்டி செக்’ கிடைக்கும். அஸ்வின் நிச்சயம் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங் மூலம் நிறைய கற்றுக் கொண்டிருப்பார் என்று நம்ப இடமுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT