Published : 27 May 2023 12:03 AM
Last Updated : 27 May 2023 12:03 AM
அஹமதாபாத்: மும்பை இந்தியன்ஸ் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் அணி இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
234 ரன்கள் என்ற இலக்கை துரத்திய மும்பை அணிக்கு இஷான் கிஷன் காயம் காரணமாக களமிறங்கவில்லை. இது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. இஷான் இல்லாததால் இம்பேக்ட் ப்ளேயர் அடிப்படையில் நேஹல் வதேரா ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங் இறங்கினார். ஆனால், பெரிதாக எந்த இம்பேக்ட்டும் அவரால் செய்ய முடியவில்லை. ஷமியின் முதல் ஓவரிலேயே அவர் 4 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆகி நடையைக் கட்டினார்.
ரோகித் சர்மா வழக்கம்போல் சொற்ப ரன்களில் (8 ரன்கள்) நிலைக்காமல் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்தார். இதன்பின் திலக் வர்மா அதிரடியாக ஆடி ரன்களை குவித்துகொண்டிருந்தார். 14 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த அவரை தனது மேஜிக் சுழலால் ரஷீத் கான் வீழ்த்த, சூர்யகுமார் யாதவுடன் கூட்டணி அமைத்தார் கிரீன். இருவரும் நிதானமாக ஆடினர்.
இந்தக் கூட்டணியை ஜோஷ்வா லிட்டில் பிரித்தார். அவர், 30 ரன்கள் எடுத்திருந்த கிரீனை போல்டக்கினார். மறுபுறம் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடி கொண்டிருந்தார் சூர்யகுமார் யாதவ். 15வது ஓவரை வீசிய மோஹித் சர்மா, தனது முதல் விக்கெட்டாக சூர்யாவை வெளியேற்றினார். சூர்யகுமார் வித்தியாசமாக ஆட முயன்று 61 ரன்களில் போல்டானார்.
சூர்யகுமார் களத்தில் இருந்தால் வெற்றி என்ற நிலை இருந்த நிலையில், அவரை வீழ்த்திய மோஹித், அதே ஓவரின் கடைசி பந்தில் விஷ்ணு வினோத்தையும், தனது அடுத்த ஓவரில் ஜோர்டன், பியூஷ் சாவ்லா ஆகிய இருவரையும் மூன்றாவது ஓவரில் கார்த்திகேயா என 5 விக்கெட்களை வீழ்த்தினார். அவரின் சிறப்பான பவுலிங்கால் மும்பை அணி இலக்கை எட்ட முடியாமல் தவித்தது.
18.2 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியை தழுவியது. மும்பை அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இரண்டாவது முறையாக ஐபிஎல் பைனலுக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ் அணி. வரும் ஞாயிற்றுகிழமை பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
குஜராத் இன்னிங்ஸ்: அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, குஜராத்தின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விருத்திமான் சாஹா 18 ரன்களில் 6வது ஓவரில் அவுட்டானார்.
இதன்பின் தனியொரு ஆளாக நின்று மும்பையின் பந்துகளை பஞ்சுகளாக்கி பறக்கவிட்டுக்கொண்டிருந்தார் சுப்மன் கில். ஆறாவது ஓவரில் கில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை டிம் டேவிட் தவறவிட்டது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை பின்பு அவர் நிச்சயம் உணர்ந்திருப்பார். காரணம் 49 பந்துகளில் 100 ரன்களை வெளுத்த சுப்மன் கில் 10 சிக்ஸர்களால் மட்டுமே அந்த ரன்னை சாத்தியமாக்கினார். கட்டுப்படுத்த முடியாத கில்லை ‘யாராவது கட்டுப்படுத்துங்கள்’ என ரோஹித் ஷர்மாவின் குரல் ஆகாஷ் மத்வாலுக்கு கேட்க அவர் வீசிய 17வது ஓவரில் கேட்ச் கொடுத்து விக்கெட்டாகி தனது ருத்ரதாண்டவத்துக்கு தானே முற்றுப்புள்ளி வைத்துகொண்டார் கில். 60 பந்துகளில் 129 ரன்கள் என்பது நிச்சயம் மும்பைக்கு அவ்வளவு நல்ல செய்தியல்ல.
சாய் சுதர்சன் ஒருபுறம் தன் பங்குக்கு அடிக்க, அவருடன் பாட்னர்ஷிப் அமைத்த ஹர்திக் பாண்டியா கேப்டனுக்கான பொறுப்புடன் ஆடினார். ரிட்டையர்ட் அவுட் முறையில் சாய்சுதர்சன் 43 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த 233 ரன்களை குவித்தது. ஐபிஎல் ப்ளே ஆஃப் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை அணி தரப்பில் ஆகாஷ் மத்வால், பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT