Published : 25 May 2023 01:39 PM
Last Updated : 25 May 2023 01:39 PM

ஆர்சிபி-யின் 2 முன்னாள் நெட் பவுலர்கள் இன்று ஐபிஎல் சூப்பர் ஸ்டார்கள் ஆன கதை!

ஆகாஷ் மற்றும் சக்காரியா | கோப்புப்படம்

ஐபிஎல் மூலம் கிரிக்கெட் வளர்கிறதோ இல்லையோ, ஐபிஎல் மூலம் பணமும் புகழும் எகிறுகிறது, இதனால் ஐபிஎல் தொடரில் ஆட உலக வீரர்கள் அனைவருமே அதிக விருப்பம் கொள்கின்றனர். இதில் கடந்த சில சீசன்களாக நடைபெற்று வரும் இன்னொரு நடைமுறை என்னவெனில் ஐபிஎல் ஏலத்தில் விற்காத பவுலர்களை சில அணிகள் தங்கள் அணிகளில் நெட்-பவுலர்களாக, (வலைப்பயிற்சி பந்து வீச்சாளர்கள்) சேர்த்துக் கொள்கின்றனர்.

முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் இவர்களை அணியில் எடுக்கும் விதமாக இவர்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இப்படி சில பவுலர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. மேலும் இவர்கள் உலகின் தலைசிறந்த பேட்டர்களுக்கு வீச வாய்ப்பும் கிடைக்கின்றது. கைதேர்ந்த பயிற்சியாளர்கள் இருப்பதால் இவர்கள் தங்கள் பவுலிங்கில் புதிய உத்திகளையும் கற்றுக் கொள்ள முடிகின்றது.

இதற்கு சிறந்த உதாரணம் இந்திய அணிக்காக 2015 உலகக் கோப்பையில் ஆடிய மோஹித் சர்மா. 2022-ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சப்போர்ட் பவுலராக இருந்தார். ஆனால், அதன் பிறகு கடுமையாக உழைத்து, நெட் பவுலராக அருமையாக வீசியதில் 2023-ல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஒப்பந்த வீரராக மாற்றப்பட்டார். இந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் மோஹித் சர்மாவும் ஒருவர். பிளே ஆஃப் சுற்றுக்கான அவர்களின் பயணத்தில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார், மேலும் அவர் இதே பாணியில் தொடர்ந்தால், அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர முடியும்.

அதே போல் ஆர்சிபி அணியில் 2 நெட் பவுலர்கள் இருந்தனர். இவர்கள் வேறொரு அணிக்கு ஆடி சூப்பர் ஸ்டார்களாகவே ஆகிவிட்டனர். மும்பை இந்தியன்ஸின் புதிய ஸ்டார், ஆகாஷ் மத்வால் 2021 சீசனில் ஆர்சிபி அணியின் நெட் பவுலராக இருந்தது எத்தனைப் பேருக்குத் தெரியும். இவர் விராட் கோலி, டிவில்லியர்ஸ் போன்றோருக்கு வலையில் பந்து வீசினார். மத்வால் 2021-ல் ஆர்சிபி அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெறவில்லை என்றாலும், அவர் 2022-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றாக சேர்ந்தார். நடப்பு சீசனின் அந்த அணியின் சிறந்த இந்திய வேகப்பந்து வீச்சாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். லக்னோ அணிக்கு எதிரான எலிமினேட்டரில், மத்வால் 5ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

மற்றொரு ஆர்சிபி நெட் பவுலர் சேத்தன் சக்காரியா. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2020 சீசனுக்கான துணைப் பந்துவீச்சாளராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் சேர்ந்தார். சக்காரியா வலைகளில் கடினமாக உழைத்தார். பின்னர் உள்நாட்டு கிரிக்கெட்டில் சவுராஷ்டிராவுக்காக விளையாடும்போது ஈர்க்கப்பட்டார். இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஒப்பந்தத்திற்கு வழிவகுத்தது.

சக்காரியா ராஜஸ்தான் ராயல்ஸுக்காக 14 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான சக்காரியா தேசிய அணிக்கான அழைப்பைப் பெற்று இலங்கைக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டியிலும் அறிமுகமானார். தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணியில் உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x