Published : 25 May 2023 06:46 AM
Last Updated : 25 May 2023 06:46 AM
சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி. இதன் மூலம் அந்த அணி 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் விளையாட தகுதி பெற்றது. அகமதாபாத்தில் நாளை நடைபெறும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியானது, நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா 11, இஷான் கிஷன் 15 ரன்களில் வெளியேறினர்.
3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீனுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார். இதனால் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் கிடைத்து வந்தது. 10.1-வது ஓவரில் மும்பை அணி 100 ரன்களை எட்டியது. ரன் வேட்டையாடிய இந்த ஜோடியை நவீன் உல் ஹக் பிரித்தார். கேமரூன் கிரீன் 23 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் சேர்த்த நிலையில் நவீன் உல்ஹக் பந்தில் போல்டானார். சூர்யகுமார் யாதவ் 20 பந்துகளில், 2சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் லாங் ஆஃப் திசையில் கவுதம் கிருஷ்ணப்பாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதன் பின்னர் திலக் வர்மா 26, டிம் டேவிட் 13 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். முன்னணி பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்ததால் இம்பேக்ட் பிளேயர் விதியின் கீழ் களமிறக்கப்பட்ட நேஹல் வதேரா 12 பந்து களில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் விளாசினார். இதனால் இறுதி பகுதியில் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. கிறிஸ் ஜோர்டான் 4 ரன்களில் மோஹ்சின் கான் பந்தில் நடையை கட்டினார். லக்னோ அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்களான நவீன் உல் ஹக் 4, யாஷ் தாக்குர் 3, மோஹ்சின் கான் ஒரு விக்கெட் கைப்பற்றினர். சுழற்பந்து வீச்சாளர்களான கிருணல் பாண்டியா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 4 ஓவர்களை வீசி கூட்டாக 68 ரன்களை தாரை வார்த்த நிலையில் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. கிருஷ்ணப்பா கவுதம் ஒரு ஓவர் வீசி 8 ரன்களை வழங்கினார்.
183 ரன்கள் இலக்குடன் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. பிரேரக் மன்கட் 3, கைல் மேயர்ஸ் 18, கிருணல் பாண்டியா 8, ஆயுஷ் பதோனி 1, நிக்கோலஸ் பூரன் 0 ரன்களில் நடையை கட்டினர். 10 ஓவர்களில் லக்னோ அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்தது. சீராக ரன்கள் சேர்த்த மார்கஸ் ஸ்டோயினிஸ் 27 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் டிம் டேவிட், இஷான் கிஷன் கூட்டணியால் ரன் அவுட் செய்யப்பட்டார். இது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
தொடர்ந்து கிருஷ்ணப்பா கவுதம் 2, தீபக் ஹூடா 15 ரன்களில் ரன் அவுட் ஆனார்கள். ரவி பிஷ்னோய் 1 ரன்னில் ஆகாஷ் மத்வால் பந்தில் போல்டானார். கடைசி வீரராக மோஹ்சின் கான் ரன் ஏதும் எடுக்காமல் மத்வால் பந்தில் ஸ்டெம்புகள் சிதற வெளியேற லக்னோ அணி 16.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. மும்பை அணி தரப்பில் ஆகாஷ் மத்வால் 3.2 ஓவர்களை வீசி வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வேட்டையாடினார். கிறிஸ் ஜோர்டான், பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி நாளை (26-ம் தேதி) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் தகுதி சுற்று 2-ல் விளையாட தகுதி பெற்றது. இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸுடன் மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் வெற்றி பெறும் அணி 28-ம் தேதி இதே மைதானத்தில் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடும். சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றில் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டியில் கால் பதித்து இருந்தது.
மத்வாலின் 17 டாட் பந்துகள்: ஆகாஷ் மத்வால் 17 பந்துகளை டாட் பந்துகளாக வீசியிருந்தார். 3.3 ஓவர்களை வீசிய மத்வால் 5 ரன்களை மட்டுமே வழங்கி 5 விக்கெட்களை சாய்த்தார்.
அறிமுக சீசனில் 400: ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் 41 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அறிமுக சீசனில் 400 ரன்களுக்கு மேல் சேர்த்த 4-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றார் கேமரூன் கிரீன். அவர், இதுவரை 422 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த வகையில் ஷான் மார்ஷ் கடந்த 2008-ம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கி 616 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.
50: லக்னோ அணிக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட அரை சதத்தை அடிக்காத போதிலும் அந்த அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் எந்த ஒரு வீரரும் அரை சதம் அடிக்காமல் இவ்வளவு அதிக ரன்கள் குவிக்கப்படுவது இதுவே முதன் முறை. இதற்கு முன்னர் 2018ம் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிராக ஹைதராபாத் 7 விக்கெட்கள் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்திருந்தது.
8: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று மும்பை அணிக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கூட்டாக 8 விக்கெட்களை வீழ்த்தினர். ஐபிஎல் வரலாற்றில் சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் 8 விக்கெட்களை வீழ்த்துவது 5-வது முறையாகும். இதில் 3 முறை சிஎஸ்கே இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தது. ஒரு முறை கொல்கத்தா அணி வீரர்கள் 8 விக்கெட்கள் கைப்பற்றி இருந்தனர்.
தப்பித்த இஷான்: சேப்பாக்கத்தில் நேற்று நடை பெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக இஷான் கிஷன் 2-வது பந்திலேயே கொடுத்த கேட்ச்சை கிருணல் பாண்டியா தவறவிட்டார். எனினும் இந்த வாய்ப்பை இஷான் கிஷன் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை. 15 ரன்கள் எடுத்த நிலையில் யாஷ் தாக்குர் பந்தில் ஆட்டமிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT