Last Updated : 21 Oct, 2017 08:34 AM

 

Published : 21 Oct 2017 08:34 AM
Last Updated : 21 Oct 2017 08:34 AM

உலக கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய முன்னேற்றம்

டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றுவதற்கான மிகப்பெரிய முடிவை தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எடுத்துள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டி லீக்கையும் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது. தொடரை நடத்துவதற்கான செயல் திட்டமும் தயாராக உள்ளது. இனி அவற்றை சரியான முறையில் நடைமுறைப்படுத்த மட்டுமே செய்ய வேண்டும்.

2019-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் முடிவடைந்தவுடன், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிகிறது. இந்தத் தொடரின் முதல் ஆட்டமாக இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் அமையக்கூடும் என கருதப்படுகிறது. திட்டமிட்டுள்ளபடி இந்த யோசனைகள் கையாளப்பட்டால், அது சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய தருணமாக இருக்கும். மேலும் நீண்ட வடிவிலான இந்த ஆட்டத்தை காண்பதற்கு அதிக அளவிலான ரசிகர்களை மைதானத்துக்கு தானாகவே இழுத்து வரவைக்கும்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் இதுபற்றி கூறும்போது, “டெஸ்ட் மற்றும் ஒருநாள் சாம்பியன்ஷிப் போட்டியின் வாயிலாக எதிர்காலத்தில் சர்வதேச இருதரப்பு கிரிக்கெட்டில் ஒரு பாதுகாப்பான நிலையை உருவாக்க முடியும்.” என்கிறார்.

ஆக்லாந்தில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 9 நாடுகள் விளையாட உள்ளன. இவை இரண்டு வருட காலங்களில் 6 தொடர்களை விளையாடும். இவற்றில் உள்நாட்டில் 3 தொடர்களையும், வெளிநாட்டில் 3 தொடர்களையும் ஒரு அணி விளையாட வேண்டும். ஒவ்வொரு தொடரிலும் குறைந்தபட்சம் 2 ஆட்டங்களும், அதிகபட்சமாக 5 ஆட்டங்களும் இடம் பெறலாம்.

அணியின் திறனை பொறுத்து ஒவ்வொரு ஆட்டம் மற்றும் தொடர் முடிவடைந்த பின்னர் புள்ளிகள் வழங்கப்படும். இதில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் மோதும். இந்த ஆட்டம்தான் உலக சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும்.

4 நாட்கள் டெஸ்ட் போட்டியை நடத்துவும் ஐசிசி அனுமதி வழங்கியுள்ளது. புதிதாக டெஸ்ட் போட்டியை விளையாடும் அணிகள் சர்வதேச கிரிக்கெட்டை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயே 4 நாட்கள் டெஸ்ட் போட்டி பரீட்சார்த்த முறையில் நடத்தப்பட உள்ளது.

அதேவேளையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் லீக்குக்காக ஐசிசி புதிதாக ஒன்றையும் செய்யப்போவதில்லை. 2020-ல்தான் இந்தத் தொடர் நடத்தப்பட உள்ளது.

மேலும் இந்தத் தொடரானது 2023-ம்ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறுவதற்கான வழியாக அமைய உள்ளதுதான் சிறப்பு. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் லீக்கில் ஐசிசி-யின் முழுநேர உறுப்பினர் அந்தஸ்து பெற்ற 12 நாடுகளும், ஒரு அசோசியேட் உறுப்பினர் நாடும் கலந்து கொண்டு உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறுவதற்காக போராடும்.

இதில் இருந்து 10 அணிகள் உலகக் கோப்பைக்கு தேர்வாகும். இந்த லீக்கில் கலந்து கொள்ளும் அசோசியேட் உறுப்பினர் நாடு, ஐசிசிஉலக கிரிக்கெட் லீக் சாம்பியன்ஷிப் தொடரில் பட்டம் வென்ற அணியாக இருக்கும். இந்த அணி, முழுநேர அந்தஸ்து கொண்ட நாடுகளுக்கு எதிராக வெற்றி பெற கடுமையாக போராடவேண்டியது இருக்கும்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆலோசனை முதலில் உதயமானது மேற்கிந்தியத் தீவுகளில்தான். அந்த அணி டெஸ்ட் உலகில் கொடிகட்டி பறந்தபோது, கேப்டன் கிளைவ் லாயிட் எண்ணத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆலோசனை உதித்தது. இதன் பின்னர் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் தங்களது ஆலோசனைகளை முன்மொழிந்தன. இதற்கு முன்னதாக நியூஸிலாந்து கிரிக்கெட்டின் மறைந்த ஜாம்பவான் மார்ட்டின் குரோவ் தனது வடிவத்தை முன்வைத்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புத்துயிர் பெற்றுள்ளது.

காலியான அரங்கங்களில் பல்வேறு டெஸ்ட் போட்டிகள் விளையாடப்பட்டு விட்டதால் சில ஒப்பனை மாற்றங்களை அறிமுகப்படுத்த ஐசிசிக்கு விருப்பமில்லை. தற்போது அறிமுகமாகவுள்ள சாம்பியன்ஷிப் தொடரானது புள்ளிகள் அடிப்படையில் சுவாரஸ்யமானதாக இருக்கும் என்பதால், ஒவ்வொரு போட்டியையும் நேரில் காண மக்கள் மைதானத்துக்கு திரும்புவார்கள் என ஐசிசி ஆழமாக நம்பிக்கை கொண்டுள்ளது.

பல ஆண்டுகளாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வடிவத்துக்கு உரத்த குரல்கள் ஒலித்தன. ஆனால் தற்போதுதான் அது வடிவம் பெற்றுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் போட்டி சாம்பியன்ஷிப் லீக் தொடர்கள் கொண்டுவரப்பட உள்ளதால் இனிமேல் மினி உலகக் கோப்பை என அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் கைவிடப்படக்கூடும் என தெரிகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஐசிசி நடத்துவதில் சில பிரச்சினைகளையும் எதிர்கொள்ளக்கூடும். டெஸ்ட் போட்டியின் பாரம்பரியம் சிதைந்துவிடக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருக்க புவிசார் அரசியல் மற்றும் தர்க்கரீதியிலான பிரச்சினைகளும் அச்சுறுத்த தயாராக உள்ளன. இவற்றில் முக்கியமானது இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம். இந்த இரு அணிகளும் தங்களுக்கு இடையிலான ஆட்டத்தை சொந்த மண்ணில் விளையாட முடியாத நிலையில் உள்ளன.

பொது இடத்தில் வைத்து இரு அணிகள் இடையிலான ஆட்டத்தை நடத்தினால் சாம்பியன்ஷிப் தொடரின் நோக்கத்தையே நீர்த்துபோகச் செய்துவிடும். இதனால் ஐசிசி அதிகாரிகள் பாகிஸ்தானை இந்தியாவுக்கு அனுப்பியோ அல்லது வெளி இடத்திலோ விளையாட அனுமதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

இரு அணிகளும் விளையாட ஆரம்பித்துவிட்டால் சாம்பியன்ஷிப் தொடரின் பயணம் அற்புதமாக இருக்கும் என ஐசிசி கருதுகிறது. எனினும் இதை சாதிக்க ஐசிசி பல தடைகளை கடக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x