Published : 24 May 2023 01:21 PM Last Updated : 24 May 2023 01:21 PM
சிஎஸ்கே 10, மும்பை 6... - அதிக முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணிகள்!
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை இறுதிப் போட்டியில் விளையாடிய அணியாக உள்ளது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நடப்பு சீசனுக்கான போட்டியிலும் இறுதிப் போட்டிக்கு சிஎஸ்கே முன்னேறியுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை இறுதிப் போட்டியில் விளையாடி உள்ள அணிகள் குறித்து விரிவாக பார்ப்போம்.
கடந்த 2008 முதல் ஐபிஎல் கிரிக்கெட் விளையாடப்பட்டு வருகிறது. ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் வணிக ரீதியாக பல மைல் கற்களை ஐபிஎல் படைத்து வருகிறது. இதற்கு காரணம் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்பு தான். மொத்தம் 16 சீசன்கள். நடப்பு சீசனான 16-வது ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மற்றொரு அணி எது என்பது அடுத்த இரண்டு போட்டிகளில் உறுதியாகி விடும். அதற்கு குஜராத், மும்பை vs லக்னோ இடையே போட்டி நிலவி வருகிறது.
அதிக முறை இறுதிப் போட்டியில் விளையாடிய அணிகள்:
சென்னை சூப்பர் கிங்ஸ் - 14 சீசன்களில் 10 முறை இறுதிப் போட்டியில் விளையாடி உள்ளது. அதில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் - 15 சீசன்களில் 6 முறை இறுதிப் போட்டியில் விளையாடி உள்ளது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. நடப்பு சீசனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு மும்பைக்கு உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 16 சீசன்களில் 3 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. சாம்பியன் பட்டம் வென்றதில்லை.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 16 சீசன்களில் 3 முறை இறுதிப் போட்டியில் விளையாடி உள்ளது. இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 2 முறை இறுதிப் போட்டியில் விளையாடி ஒரே ஒரு முறை பட்டம் வென்றுள்ளது.
டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இறுதிப் போட்டியில் தலா ஒரு சீசனில் விளையாடி, முதல்முறையே சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. குஜராத் அணி நடப்பு சீசனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.
பஞ்சாப், புனே, டெல்லி போன்ற அணிகள் ஒரே ஒரு முறை மட்டுமே இறுதிப் போட்டியில் விளையாடி உள்ளன. டெக்கான் சார்ஜர்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் இல்லை. குஜராத் மற்றும் லக்னோ அணிகள் கடந்த சீசனில் புதிதாக ஐபிஎல் அரங்கில் இணைந்தன.
WRITE A COMMENT