Published : 24 May 2023 12:34 PM
Last Updated : 24 May 2023 12:34 PM

சிஎஸ்கே தலைமகன் தோனியின் சிலிர்ப்பூட்டும் 7 தருணங்கள் @ ஐபிஎல் 2023

தோனி

நடப்பு ஐபிஎல் சீசனுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுவாரா அல்லது ஓய்வு பெறுவாரா என்பது பில்லியன் கணக்கான ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இருந்தும் அதற்கான பதில் இதுவரை சஸ்பென்ஸாகவே உள்ளது. குஜராத் அணியுடனான முதல் குவாலிபையர் போட்டியில் வென்ற பிறகு "மைதானத்திலோ அல்லது மைதானத்துக்கு வெளியிலோ எதுவானாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன்தான் நான் இருப்பேன்" என தோனி தெரிவித்தார்.

நடப்பு சீசன் முழுவதும் தோனி குறித்து இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் சிலாகித்து பேசி வருகின்றனர். அதற்கு காரணம் ‘தோனி’ எனும் மாமனிதன் தன்னகத்தே வைத்துள்ள காந்த சக்திதான். அது உலக கிரிக்கெட் தொடங்கி உள்ளூர் கிரிக்கெட் வரை நீள்கிறது. அவர் பேட் செய்யும்போது பந்தை பறக்கவிட்டால் அதோடு சேர்ந்து ‘சிக்ஸ் போனோம்’ என ரசிகரின் மனதும் பறக்கிறது. நடப்பு சீசனில் இதுவரை தோனி களம் கண்ட பெரும்பாலான போட்டிகளில் அந்த மாயத்தை மெய்ப்பித்துள்ளார்.

மகேந்திர சிங் தோனி பராக்... - நடப்பு சீசனில் இதுவரை 15 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி உள்ளது. அதில் 11 இன்னிங்ஸில் பேட்ஸ்மேனாக களம் கண்டுள்ளார் தோனி. கடைசி 3 ஓவர்கள் தான் தோனியின் பேட்டிங் ஹாட் ஸ்பாட். அதை குறி வைத்தே அவரது பயிற்சியும் இருந்து வருகிறது. இந்த 11 இன்னிங்ஸிலும் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து களத்துக்கு அவர் பேட் செய்ய வரும் நேரத்தில் அரசனுக்கு கொடுக்கப்படும் வரவேற்பை பெற்று வருகிறார். அது சில நொடிகள் மட்டும் தான் என்றாலும் நிச்சயம் மறக்க முடியாத ஒன்றாகவே அமைந்துள்ளது. சென்னை - சேப்பாக்கத்தில் தோனி களம் காணும் போது அதோடு சேர்ந்து பின்னணியில் டிஜே ஒலிக்க செய்யும் அந்த பாடலும் மாஸ் ரகம்.

மாவீரன் தோனி: நடப்பு சீசனில் தோனி 11 இன்னிங்ஸில் மொத்தமாக 56 பந்துகளை எதிர்கொண்டு 104 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 10 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 185.71. இதில் கடந்த ஏப்ரலில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்தார். அந்தப் போட்டியில் ராஜஸ்தான் வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கும். ஆட்டத்தில் ராஜஸ்தான் வென்றிருந்தாலும் ரசிகர்களின் மனதை வென்றது தோனியின் அந்த இன்னிங்ஸ்.

முழங்காலில் காயம்: தோனிக்கு முழங்கால் பகுதியில் காயம் இருப்பதாகவும், அதனால் அவரால் ஆட்டத்தில் குறிப்பிட்ட சில நகர்வுகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் தெரிவித்திருந்தார். இதனை சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் அணியுடனான போட்டிக்கு பிறகு ஃபிளெமிங் சொல்லியிருந்தார். அவர் ரன் ஓடும்போது தடுமாறுவதை போட்டிகளில் பார்க்க முடிகிறது. இருந்தும் ‘காயம்பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமாக இருக்கும்’ என்பதற்கு ஏற்ப காயத்துடனே தனது ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வருகிறார்.

தோனி எனும் பிராண்ட்: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை அணி விளையாடும் போட்டியை நேரிலும், தொலைக்காட்சியிலும், ஓடிடி தளத்தில் பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு உதாரணமாக ஜியோ சினிம வியூவர்ஷிப்பை சொல்லலாம். சென்னை மற்றும் குஜராத் அணிகள் விளையாடிய முதல் குவாலிபையர் போட்டியை ஜியோ சினிமா தளத்தில் மட்டும் 2.5 கோடி பேர் ஒரே நேரத்தில் பார்த்துள்ளனர். அதே போல சிஎஸ்கே - ஆர்சிபி போட்டியை 2.3 கோடி பேரும், சிஎஸ்கே - ஆர்ஆர் போட்டியை தோனி மற்றும் ஜடேஜா பேட் செய்த போது 2.2 கோடி பேரும், சிஎஸ்கே - டெல்லி போட்டியை தோனி பேட் செய்த போது 1.8 கோடி பேரும் பார்த்துள்ளனர். இதற்கு காரணம் அவரது பிராண்ட் வேல்யூ தான். அதே நேரத்தில் உள்ளூர், வெளியூர் என எங்கு சென்றாலும் தோனிக்கு அமோக வரவேற்பை ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.

வழிகாட்டும் தோனி: தரமான விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக தோனி அறியப்படுகிறார். அதைக் காட்டிலும் அவரது கேப்டன்சி திறன் அசாத்தியமானது. இளம் வீரர்களை தட்டிக் கொடுத்து ஆதரிப்பது, அனுபவ வீரர்களுக்கு ஆதரவு கொடுத்து அவர்களின் அற்புத ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவது, தவறு செய்யும் போது விரக்தியில் சினம் கொள்வது என ஒரு கேப்டனாக நடப்பு சீசனிலும் தோனி எப்போதும் போலவே மிளிர்கிறார். சென்னை அணி கடந்த சீசனில் இதை தான் மிஸ் செய்தது என ஒவ்வொரு ரசிகரும் உணர செய்யும் வகையில் அவரது செயல்பாடு அமைந்துள்ளது. ஒவ்வொரு பந்திற்கும் ஃபீல்ட் செட்டிங்கை மாற்றுவது வரை அது நீள்கிறது.

‘ஆடுகளத்தின் தன்மை, ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப எங்கள் அணியின் ஃபீல்ட் செட்டை அவ்வப்போது நான் மாற்ற வேண்டியுள்ளது. அதனால் நான் எரிச்சலூட்டும் கேப்டனாக தெரியலாம். ஆனால், நான் என்ன செய்ய? என் உள்ளுணர்வு சொல்வதை கேட்டு நான் செயல்படுகிறேன். அதனால் தான் எங்கள் அணி வீரர்களை எப்போதும் என் மீது கண் வைக்கும்படி சொல்கிறேன்’ என இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிறகு தோனி சொல்லி இருந்தார்.

ஆக்டிவ் கேட்ச்: 41 வயதான நிலையில் விக்கெட் கீப்பர் தோனி நடப்பு சீசனில் மிகவும் கூலாக சூப்பர் கேட்ச் ஒன்றை எடுத்து அசத்தினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஸ்டம்புக்கு பின்னதாக நின்றபடி தோனி பற்றிய கேட்ச் அது. நடப்பு சீசனின் ‘ஆக்டிவ் கேட்ச்’ விருதை வெல்வதற்கான ரேஸில் ஒன்றாக அது இடம் பெற்றுள்ளது. முதல் குவாலிபையர் போட்டி வரையில் ஆக்டிவ் கேட்ச் விருதுக்கான ரேஸில் மொத்தம் 16 கேட்ச்கள் இடம் பெற்றுள்ளன. வாக்களிக்க..

ஆட்டோகிராஃப் வாங்கிய கவாஸ்கர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக விளையாடிய லீக் போட்டி முடிந்ததும் சிறு பிள்ளை போல ஓடி வந்து தோனி வசம் தனது சட்டையின் நெஞ்சுப் பகுதியில் ஆட்டோகிராஃப் போடும்படி கேட்டார். அவரது கோரிக்கையை ஏற்று தோனியும் அப்படியே அதை செய்தார். அதை ஒளிப்படக் கருவிகள் படம்பிடித்து நேரலையில் ஒளிபரப்பின. அந்த தருணம் நடப்பு சீசனின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

தோனி தனது மாயத்தை இறுதிப் போட்டியிலும் நிகழத்துவார் என எதிர்பார்ப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x