Published : 23 May 2023 09:28 PM
Last Updated : 23 May 2023 09:28 PM
சென்னை: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்களை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 172 ரன்களைச் சேர்த்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் ப்ளே ஆஃப் ஆட்டத்தில் சென்னை அணியும் குஜராத் அணியும் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, சிஎஸ்கேவின் தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட், தர்ஷன் நல்கண்டே வீசிய இரண்டாவது ஓவரில் கேட்ச் கொடுக்க, ஆரம்பமே ஆட்டம் காண நேர்ந்தது. ஆனால் அது நோபால் ஆனதால் சிஎஸ்கே ரசிகர்கள் பெருமூச்சுவிட்டனர்.
அடுத்து வந்த ஃப்ரீ ஹிட்டில் சிக்சரை ஹிட் செய்து ஃபார்முக்கு திரும்பினார் ருதுராஜ். மறுபுறம் டெவோன் கான்வே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 6 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்களைச் சேர்ந்திருந்தது சிஎஸ்கே. 8 போர் 1 சிக்சர் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 36 பந்துகளில் 50 ரன்களை சேர்த்தார். கான்வே நிதானமான ஆடி துணை நின்றார். 10 ஓவர்கள் முடிவில் 85 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி சேர்த்த இந்த பாட்னர்ஷிப்பை மோஹித் ஷர்மா பிரித்தார். அதன்படி 44 பந்துகளில் 60 ரன்களை குவித்த ருதுராஜ் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த ஷிவம் துபே 1 ரன்னில் விக்கெட்டாக ரஹானே 17 ரன்கள் வரை சேர்த்துவிட்டு நடையைக் கட்டினார். அடுத்து கான்வேவும் 40 ரன்களில் பெவிலியன் திரும்ப 17 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 137 ரன்களை சேர்த்திருந்தது. ஆரம்பத்திலிருந்த வேகம் இறுதியில் அகப்படவில்லை. அம்பதி ராயுடு அடித்த சிக்ஸர் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தாலும் நீண்ட நேரம் அதை அவரால் தக்க வைக்க முடியவில்லை. ரஹானே எடுத்த அதே 17 ரன்களை ராயுடுவும் எடுத்து ஒற்றுமை காட்டிவிட்டு வெளியேறினார்.
தோனி களத்திற்கு வர ரவீந்திர ஜடேஜா உடனிருந்தார். ஆனால், மோஹித் ஷர்மா வீசிய பந்தை எதிர்கொண்ட தோனி, பந்தை தட்டிவிட அது நேராக ஹர்திக் பாண்டியா கைக்குள் ஐக்கியமானது; தோனி வந்த வேகத்தில் பெவிலியனைப் பார்த்து திரும்பினார். கடைசி ஓவரில் வந்த மொயின் அலியின் சிக்ஸர் பெரும் நம்பிக்கை. 180 ரன்களை சிஎஸ்கே எட்டுமா என எதிர்பார்த்த நிலையில் கடைசி பந்தில் ஜடேஜாவை அவுட்டாக்கி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார் முஹம்மது சமி. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 172 ரன்களைச் சேர்த்தது.
குஜராத் அணி தரப்பில் முஹம்மது சமி, மோஹித் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், நூர் அஹமது, ரஷீத் கான், தர்ஷன் நல்கண்டே ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT