Published : 23 May 2023 02:06 PM
Last Updated : 23 May 2023 02:06 PM
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசன் பிளே-ஆஃப் சுற்றை எட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் என நான்கு அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் பிளே-ஆஃப் சுற்றுக்கு அதிக முறை முன்னேறிய அணிகள் குறித்து பார்ப்போம்.
நடப்பு சீசனில் முதல் குவாலிபையர் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் இன்று மாலை விளையாடுகின்றன. எலிமினேட்டரில் லக்னோ மற்றும் மும்பை அணிகள் நாளை பலப்பரீட்சை செய்கின்றன. இந்த இரண்டு போட்டிகளும் சென்னை - சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது குவாலிபையர் மற்றும் இறுதிப் போட்டி அகமதாபாத் - நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
பிளே-ஆஃப் சுற்றுக்கு அதிக முறை முன்னேறிய அணிகள்
இன்று பலப்பரீட்சை:
கடந்த சீசனில் பட்டம் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி அந்த செயல்திறனை அப்படியே இந்த சீசனுக்கும் கடத்தி வந்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது. பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் தீப்பொறி போன்ற வகையிலான வலுவை கொண்டுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.
தொடக்க வீரரான ஷுப்மன் கில் 2 சதம் மற்றும் நான்கு அரை சதங்களுடன் 56.67 சராசரியுடன் 680 ரன்களை வேட்டையாடி உள்ளார். மேலும் அவர், இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். அதேவேளையில் பந்து வீச்சில் இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் மொகமது ஷமி, ரஷீத் கான் ஆகிய இருவரும் முதலிடத்தில் உள்ளனர். இந்த சீசனில் இருவரும் தலா 24 விக்கெட்டுகளை வேட்டையாடி உள்ளனர்.இதில் ஷமி, பவர்பிளேவில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவராகவும் உள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் எந்த அணியையும் விட அதிக முறை பிளே ஆஃப்களுக்கு தகுதி பெற்ற அணியாக சிஎஸ்கே உள்ளது. இந்த ஆண்டு அவர்கள் லீக் சுற்றில் 8 வெற்றிகளுடன் 2 -வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற ஓர் அணியாக அளப்பரிய பணியை செய்துள்ளனர். அவர்கள் நல்ல பேட்டிங் குழுவை கொண்டுள்ளனர். டேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் டேவன் கான்வே 5-வது இடத்திலும், ருதுராஜ் கெய்க்வாட் 8-வது இடத்திலும் உள்ளனர்.
தொடரின் தொடக்கத்தில் சிஎஸ்கேவின் பந்துவீச்சு அனுபவமற்றதாக இருந்தது. முதல் கட்ட போட்டியில் அவர்களுக்கு தீபக் சாஹர் இல்லை. ஆனால் துஷார் தேஷ்பாண்டே தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், மேலும் இந்த சீசனில் பதிரனாவும் சிறப்பாகப் பந்துவீசி 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சுழற்பந்து வீச்சில் ஜடேஜா இதுவரை 17 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், மட்டையால் கணிசமான ரன்களையும் சேர்த்துள்ளார். இந்த ஆண்டு 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் கர்ஜிக்க காத்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
சேப்பாக்கம் மைதானத்தின் ஆடுகளம் பாரம்பரியமாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. இந்த சீசனில் சேஸிங்கில் அணிகள் நான்கு முறை வெற்றி பெற்றாலும், வழக்கமாக முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் இங்கு அதிக போட்டிகளில்வெற்றி பெற்றுள்ளன. குஜராத் டைட்டன்ஸ்அணியில் ரஷித் கான், நூர் அகமது போன்ற நல்ல சுழற்பந்து வீச்சாளர்களும், சிஎஸ்கேயில் ஜடேஜா மற்றும் மொயீன் அலியும் உள்ளனர். இதனால் இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கு இடையே ஒரு சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும்.
ஐபிஎல் வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே அணிகள் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் ஒருமுறை கூட குஜராத் அணியை, சிஎஸ்கே வென்றது இல்லை. இந்த சீசனின் தொடக்க ஆட்டத்தில் சிஎஸ்கேவை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை குஜராத் டைட்டன்ஸ் தோற்கடித்திருந்தது. இந்த தோல்விகளுக்கு சிஎஸ்கே இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
என்ன சொல்கிறார் ஷுப்மன் கில்? - பெங்களூரு அணிக்கு எதிராக சதம் விளாசிய ஷுப்மன் கில் கூறும்போது, “சேப்பாக்கம் ஆடுகளத்துக்கு தகுந்தவாறு எங்களிடம் சிறந்த பந்துவீச்சு தாக்குதல் இருப்பதாக நான் நினைக்கிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சென்னையில் விளையாடுவது பரபரப்பான ஒன்றாக இருக்கும்” என்றார்.
இன்று எதிரணி - குஜராத் அணியின் மிதவேகப்பந்து வீச்சாளரான மோஹித் சர்மா இந்த சீசனில் 17 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். 35 வயதான அவர், நடு ஓவர்களில் வேகம் குறைந்த பந்துகளை வீசி திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடியவராக திகழ்கிறார். சிஎஸ்கே அணியில் அவர், 2019-ம் ஆண்டு இடம் பெற்றிருந்தார். இம்முறை அதே அணிக்கு எதிராக களம் காண்கிறார்.
ஷனகாவின் உள்ளீடு கைகொடுக்குமா? - சிஎஸ்கேவுக்கு விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா, சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்சனா ஆகிய இருவரையும் தேசிய அணிக்காக கையாண்டதால், இலங்கை கேப்டன் தசன் ஷனகாவின் உள்ளீடுகளை குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பயிற்சியாளர் ஆஷிஸ் நெஹ்ரா பயன்படுத்திக் கொள்ளக்கூடும். ஏனெனில் இவர்கள் இருவரும் சிஎஸ்கே அணியின் பந்து வீச்சில் பிரதான வீரர்களாக திகழ்கின்றனர். பதிரனா இறுதி ஓவர்களை வீசுவதில் சிறந்த வீரராக உள்ளார்.
சாய் கிஷோர் விளையாடுவாரா? - சேப்பாக்கம் ஆடுகளம் சுழலுக்கு கைகொடுக்கத் தொடங்கி உள்ளதால் தமிழகத்தைச் சேர்ந்த சாய் கிஷோர் அல்லது அயர்லாந்தை சேர்ந்த இடது கை மிதவேகப்பந்து வீச்சாளரான ஜோஷ்வா லிட்டிலை இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணி பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும். ஏற்கெனவே ரஷித் கான், நூர் அகமது சுழலில் அபாரமாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு உறுதுணையாக 3-வது சுழற்பந்து வீச்சாளராக சாய் கிஷோர் அல்லது ஜோஸ்வா லிட்டில் செயல்படக்கூடும்.
‘இன்னும் 3 தேவை’ - சிஎஸ்கேவின் ஷிவம் துபே 33 சிக்ஸர்களை விளாசி இந்த சீசனில் அதிக சிக்ஸர்களை விளாசியவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் உள்ள பிளெஸ்ஸிஸை எட்டிப்பிடிக்க 3 சிக்ஸர்களே தேவை.
பவர்பிளேவும் ஷமியும்... - சிஎஸ்கே இந்த சீசனில் லீக் சுற்றில் 14 ஆட்டங்களிலும் பவர்பிளேவில் 9 விக்கெட்களை மட்டுமே இழந்துள்ளது. இது பலமாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில் குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி இந்த சீசனில் பவர்பிளேவில் 15 விக்கெட்களை வேட்டையாடி உள்ளார். அதேவேளையில் ஓவருக்கு சராசரியாக 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார்.
‘ஸ்விங், ஸ்லிங்’ - குஜராத் அணியை பொறுத்த வரையில் வேகம் குறைந்த சேப்பாக்கம் ஆடுகளத்தை சமாளிப்பது சவாலாக இருக்கக்கூடும். பவர் பிளேவில் தீபக் சாஹரின் ஸ்விங், இறுதிப் பகுதியில் மதீஷா பதிரனாவின் ‘ஸ்லிங்கர்கள்’ குஜராத் அணியின் பேட்டிங் வரிசைக்கு அச்சுறுத்தல் அளிக்கக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT