Published : 22 May 2023 06:11 PM
Last Updated : 22 May 2023 06:11 PM

ஐபிஎல் ப்ளேஆஃப் போட்டிக்கான டிக்கெட்டுகளை பயணச்சீட்டாக பயன்படுத்த இயலாது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு

கோப்புப்படம்

சென்னை: ஐபிஎல் ப்ளேஆஃப் சுற்று போட்டிக்கான பார் கோடுடன் கூடிய டிக்கெட்டுகளை மற்ற போட்டிக்கான டிக்கெட்டுகளை பயன்படுத்தியதுபோல் மெட்ரோ ரயில் பயணச்சீட்டாகப் பன்படுத்த முடியாது என்றும், வழக்கமான பயணச்சீட்டுகளை பெற வேண்டும் என்றும் மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், "நடப்பாண்டில் நடைபெற்று வரும் 16-வது ஐபிஎல் சீசன் தொடரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னை சூப்பர் கிங்கஸ் உடன் இணைந்து வழங்கி வந்தது. ஐபிஎல் போட்டிகளுக்கான பார்கோட் (Barcode) போடப்பட்ட கியூஆர் டிக்கெட்டுகளை பன்படுத்தி மெட்ரோ ரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் ரசிகர்கள் பயணித்து வந்தனர்.

இதனைத்தொடர்ந்து நடக்க இருக்கும் ஐபிஎல் ப்ளேஆஃப் சுற்றுகள் முற்றிலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஐபிஎல் டிக்கெட்டுகளை மெட்ரோ ரயில் பயணச்சீட்டாக பயன்படுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகையால் மே 23 மற்றும் 24ம் தேதிகளில் சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் ப்ளேஆஃப் போட்டிகளைக் கண்டுகளிக்க வருகைதரும் கிரிக்கெட் ரசிகர்கள், மெட்ரோ பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கு வழக்கமான மெட்ரோ ரயில் பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இடையூறு இல்லாத பயணத்திற்கு, பயணிகள் மெட்ரோ ரயில் பயணச்சீட்டுகளை வாஸ்அப் (91-8300086000), க்யூஆர் அல்லது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில் டிக்கெட் கவுன்டர்கள் இரவு 11 மணிக்குப் பிறகு செயல்படாது.

சென்னையில் போட்டி நடைபெறும் நாட்களில் கிரிக்கெட் ரசிகர்களுக்காக மே 23 மற்றும் 24 ஆகிய இரு தினங்களிலும் இரவு 1 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

நீல வழித்தடத்தில், அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பச்சை வழித்தடத்தில் பயணிப்பதற்கு பயணிகள் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மாறிக்கொள்ளலாம். ஏனெனில் நீல வழித்தடத்தில் இருந்து பச்சை வழித்தடத்திற்கு பயணிகள் மாறும் வசதி அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இரவு 11 மணிக்குப் பிறகு இருக்காது. ஆகையால் நீல வழித்தடத்திலிருந்து பச்சை வழித்தடத்திற்கு மாறும் பயணிகள் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மாறிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அதற்கேற்ப தங்கள் பயணங்களை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x