Published : 22 May 2023 05:29 PM
Last Updated : 22 May 2023 05:29 PM

IPL 2023 Playoffs | சென்னை vs குஜராத்; மும்பை vs லக்னோ - கோப்பையை வெல்லும் அணி எது?

ஹர்திக் பாண்டியா, தோனி, க்ருணால் பாண்டியா மற்றும் ரோகித் சர்மா

நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இனி பிளே-ஆஃப் போட்டிகள் நடைபெற உள்ளன. இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்ல உள்ள அணிக்கான முதல் குவாலிபையர் போட்டி நாளையும், எலிமினேட்டர் போட்டி நாளை மறுதினமும் நடைபெற உள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. அதையடுத்து வெள்ளி அன்று இரண்டாவது குவாலிபையர் போட்டியும், ஞாயிறு அன்று இறுதிப் போட்டியும் குஜராத் - அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

வழக்கம் போல இல்லாமல் பிளே-ஆப் சுற்றுக்கு எந்த அணி முன்னேறும் என்ற பரபரப்பு இந்த முறை கடைசி லீக் போட்டி வரை இருந்தது. இறுதியில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் கடந்த சீசனில் வரவு கொடுத்த அணிகள் குஜராத் மற்றும் லக்னோ. குஜராத் அணி நடப்பு சாம்பியானகவும் உள்ளது. மறுபக்கம் காலம் காலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் சென்னையும், மும்பையும் உள்ளன. இந்தச் சூழலில் இந்த முறை எந்த அணி வாகை சூடும் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

மும்பை இந்தியன்ஸ்: நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்கம் சுமாரான செயல்பாட்டுக்கும் கீழாக தான் இருந்தது. காயம் காரணமாக பிரதான பந்து வீச்சாளர்கள் சீசனில் விளையாடவில்லை. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆர்ச்சர் பாதியிலேயே வெளியேறினார். முக்கியமான கட்டத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கு காயம் என்ற நிலையில் மும்பை அணி இருந்தது.

இப்படி பல பாதகங்கள் இருந்தாலும் நடப்பு சீசனில் 6 போட்டிகளில் 200+ ரன்களை குவித்துள்ளது. அதில் 4 முறை 200+ ரன்கள் இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளன. சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், டிம் டேவிட், இஷான் கிஷன், வதேரா ஆகியோர் பேட்டிங்கில் மும்பைக்கு நம்பிக்கை கொடுத்து வருகின்றனர். இவர்கள் களத்தில் நின்றாலே சர்வ சாதாரணமாக 200+ ரன்களை மும்பை எடுக்கும் என்ற நிலை உள்ளது. பவுலிங் சற்றே பலவீனம் என்றாலும் அதை அதிரடி பேட்டிங் மூலம் ஈடு செய்கிறது அந்த அணி. ஆகாஷ் மத்வால், பியூஷ் சாவ்லா போன்ற பவுலர்கள் விக்கெட் வீழ்த்தி அசத்துகின்றனர். அனைத்தும் நல்லபடியாக மும்பைக்கு கைகூடி வந்தால் எலிமினேட்டர், குவாலிபையர் 2 மற்றும் இறுதிப் போட்டி என சென்று ஆறாவது முறையாக கோப்பையை வெல்லலாம். சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை அணியின் செயல்பாடு சூப்பராகவே உள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கடந்த சீசனை போலவே நடப்பு சீசனிலும் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது லக்னோ. கடந்த சீசனில் எலிமினேட்டர் போட்டியில் தோல்வியை தழுவி இருந்தது. நடப்பு சீசனில் மும்பை அணிக்கு எதிராக எலிமினேட்டர் போட்டியில் லக்னோ களம் காண்கிறது.

காயம் காரணமாக அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் வெளியேறி உள்ளார். மாற்று கேப்டனாக க்ருணால் பாண்டியா அணியை வழிநடத்தி வருகிறார். டிகாக், ஸ்டாய்னிஸ், நிக்கோலஸ் பூரன், க்ருணால் பாண்டியா, ரவி பிஷ்னோய், பதோனி ஆகிய வீரர்கள் லக்னோ அணிக்கு நம்பிக்கை கொடுக்கின்றனர். நடப்பு சீசனில் மும்பைக்கு எதிராக 5 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றி கொடுத்த நம்பிக்கையுடன் லக்னோ எலிமினேட்டரில் விளையாட உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்: தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குவாலிபையர் 1 போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக விளையாடுகிறது. கான்வே, ருதுராஜ், ரஹானே, ஷிவம் துபே, தோனி ஆகியோர் சென்னை அணிக்காக ரன் குவிக்கின்றனர். இதில் தோனி, இறுதி ஓவர்களில் அதிரடி காட்டி வருகிறார். மொயின் அலி, ஜடேஜா, தீக்சனா சுழலும், பதிரனா, தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே வேகப்பந்து வீச்சிலும் நம்பிக்கை கொடுத்து வருகின்றனர். இதுவரை ஐபிஎல் கிரிக்கெட்டில் இரண்டு போட்டிகளில் குஜராத் அணிக்கு எதிராக சென்னை விளையாடி உள்ளது. இரண்டிலும் சென்னைக்கு வெற்றி வசமாக வில்லை. இந்த முறை சொந்த மைதானத்தில் சென்னை அணி, குஜராத்தை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு சிஎஸ்கே முன்னேறும்.

குஜராத் டைட்டன்ஸ்: பேட்டிங், பவுலிங் என கலவையான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது குஜராத். நடப்பு சீசனில் முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. சுப்மன் கில், சாஹா, விஜய் சங்கர், தெவாட்டியா, ரஷீத் கான், நூர் அகமது, ஷமி, மோகித் சர்மா, பாண்டியா என ஒரு அணியாக குஜராத் வீரர்கள் கலக்கி வருகின்றனர். ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி அருமையாக உள்ளது. அதனால் அந்த அணி இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே மீண்டும் பட்டத்தை தக்க வைக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x