Published : 22 May 2023 12:27 AM
Last Updated : 22 May 2023 12:27 AM
பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி உள்ளது குஜராத் டைட்டன்ஸ். 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றுள்ளது. இந்த தோல்வியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது. பெங்களூரு தோல்வி அடைந்த காரணத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்குள் நான்காவது அணியாக நுழைந்துள்ளது.
இந்தப் போட்டியில் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை குஜராத் அணி விரட்டியது. சாஹா மற்றும் சுப்மன் கில் இன்னிங்ஸை தொடங்கினர். சாஹா, 12 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த விஜய் சங்கர், கில் உடன் 123 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
இன்னிங்ஸை நிதானமாக தொடங்கிய விஜய் சங்கர், அப்படியே வேகம் கூட்டினார். 35 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவர் விக்கெட்டை இழந்தார். 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். ஷனகா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.
இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் இருந்த சுப்மன் கில், 52 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். 5 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் அவரது ஆட்டத்தில் அடங்கும். 19.1 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது குஜராத்.
முன்னதாக, பெங்களூரு முதலில் பேட் செய்த போது அந்த அணியின் கேப்டன் டூப்ளசி மற்றும் விராட் கோலி இன்னிங்ஸை தொடங்கினர். இருவரும் 67 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். டூப்ளசி, 28 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல் மற்றும் லோம்ரோர் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டை இழந்தனர். பின்னர் வந்த பிரேஸ்வெல் உடன் 47 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் கோலி.
பிரேஸ்வெல், 26 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே வெளியேறினார். மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய விராட் கோலி, 60 பந்துகளில் சதம் கடந்தார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக சதம் பதிவு செய்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். அடுத்தடுத்த போட்டிகளில் அவர் சதம் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் இடையிலான வித்தியாசம் என்னவென்றால் அது சிக்ஸர்கள் தான். பெங்களூரு அணி தனது இன்னிங்ஸில் மொத்தமாக 3 சிக்ஸர்களை விளாசி இருந்தது. குஜராத் அணி 10 சிக்ஸர்களை பதிவு செய்தது.
பிளே-ஆஃப்? சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு சீசனின் குவாலிபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் குவாலிபையர் 1 போட்டியில் விளையாடுகின்றன. எலிமினேட்டர் போட்டியில் லக்னோ மற்றும் மும்பை அணிகள் விளையாடுகின்றன.
Shubman Gill seals off the chase with a MAXIMUM @gujarat_titans finish the league stage on a high #TATAIPL | #RCBvGT pic.twitter.com/bZQJ0GmZC6
— IndianPremierLeague (@IPL) May 21, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT