Published : 20 May 2023 05:28 PM
Last Updated : 20 May 2023 05:28 PM
டெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 223 ரன்களை குவித்தது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் - டெவோன் கான்வே பாட்னர்ஷிப் அமைத்து டெல்லியை பந்தாடினர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் விரைவில் நிறைவடைந்து, ப்ளே ஆஃப் சுற்றுகள் தொடங்க உள்ளன. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்வாட்டும், டெவோன் கான்வேவும் இணைந்து டெல்லியைப் பந்தாடினர். 12-வது ஓவரில் மட்டும் தொடர்ந்து 3 சிக்சர்களை விளாசி ருதுராஜ் அதிரடி காட்டினார்.
14 ஓவர்கள் வரை விக்கெட் இழப்பின்றி பார்த்துக்கொண்ட இந்த இணையை 15-ஆவது ஓவரில் சேதன் சகாரியா பிரித்தார். 7 சிக்சர்களை விளாசி வெளுத்து வாங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில் 79 ரன்களுடன் வெளியேறினார். அடுத்து வந்த சிவம் தூபே வந்த வேகத்தில் 3 சிக்ஸ்களை பறக்க விட்டு 22 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவோன் கான்வே 52 பந்துகளில் 87 ரன்களை குவித்து சென்சூரி அடிக்காமல் போனது ஏமாற்றம்.
தொடர்ந்து வந்த ஜடேஜா அடித்த சிக்ஸ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. இறுதி பந்தில் ஸ்ட்ரைக்கிலிருந்த தோனி தூக்கி அடிக்க சிக்ஸ் மிஸ்ஸானது. அத்துடன் அது ஃப்ரீ ஹிட்டானதால் ரசிகர்கள் தோனியின் சிக்ஸுக்காக காத்திருந்த நிலையில், சிங்கிளுடன் முடிந்த இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 223 ரன்களை குவித்து 224 என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. டெல்லி அணி தரப்பில் சேதன் சகாரியா, கலீல் அஹமத், அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சிஎஸ்கே 13 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழ்நிலையில், அந்த வாய்ப்பு பிரகாசமாகவே இருப்பது தெரிகிறது. ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே தோல்வியைச் சந்தித்தால் தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment