Published : 08 Jul 2014 06:43 PM
Last Updated : 08 Jul 2014 06:43 PM
இங்கிலாந்துக்கு எதிராக நாளை முதல் டெஸ்ட் போட்டி டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்குகிறது. ஒரே மாதிரியான அணுகுமுறை கொண்ட தோனி, குக் ஆகியோருக்கு புதிய சவாலே இந்த 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்.
தோனியின் அயல்நாட்டுத் தொடர் டெஸ்ட் கேப்டன்சி அணுகுமுறைகள் பற்றி நிறைய விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக கடந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்களில் அவரது அணுகுமுறை மிகவும் எதிர்மறையாக இருந்தது.
தென் ஆப்பிரிக்காவிலும் அதே எதிர்மறை அணுகுமுறை தொடர்ந்தது, ஆனாலு முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு அரிதான வெற்றி வாய்ப்பை தோனி மீண்டும் தனது எதிர்மறை அணுகுமுறையினல் கோட்டை விட்டார்.
டேல் ஸ்டெய்ன் மற்றும் வெர்னன் பிலாண்டரை வீழ்த்த அவர் போதிய முயற்சிகளை எடுக்கவில்லை. வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டதால் என்னவாயிற்று தென் ஆப்பிரிக்கா எழுச்சியுற ஒரு வாய்ப்பை அவர் உருவாக்கிக் கொடுத்தார். அடுத்த டெஸ்ட் போட்டியில் அந்த அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. அதில் தோனி செய்த மிகப்பெரிய தவறு, இரண்டாவது புதிய பந்தை எடுக்காமல் பழைய பந்திலேயே 66 ஓவர்களை வீசியது. உலக அளவில் எந்த ஒரு கேப்டனும் இப்படிச் செய்யத்துணிய மாட்டார்கள். இது தைரியமல்ல, உத்தியும் அல்ல. மாறாக எதிர்மறை அணுகுமுறை, இது அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றினால் ஏற்றுக் கொள்ளலாம், நியாயப்படுத்தலாம். ஆனால் இதுவே அணியின் தோல்விக்குக் காரணமாகும்போது அதனை நாம் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.
அதேபோல்தான் நியூசிலாந்து தொடரிலும் நடந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் 400 ரன்களுக்கும் மேலான இலக்கை எட்டும் முயறியில் 366 ரன்கள் வரை வந்து தோல்வி தழுவியது இந்தியா. அப்போதும் கடைசி வரை போராடும் மனோபலத்தை இந்தியா வெளிப்படுத்தவில்லை.
மேலும் பிரெண்டன் மெக்கல்லம் போன்ற ஒரு பேட்ஸ்மென் 60 அல்லது 70 ரன்களை எடுக்கக் கூடியவர் அவ்வளவே. அவரை ஒரு இரட்டைச் சதம் ஒரு முச்சதம் என்று அடிக்க விட்டது தோனியின் கோளாறான அணுகுமுறையினால்தான்.
எப்போதும் பந்து வீசத் தொடங்கினால் 60 ஓவர்கள் வந்தவுடன் பார்ட் டைம் பவுலர்களை அழைத்து 10 ஓவர்களை வீசச் செய்வது, மேலும் எதிரணியினர் விக்கெட்டுகளை இழந்து வரும் சூழ்நிலையில் களத்தில் இருக்கும் ஒரே பேட்ஸ்மெனைக் குறிவைத்து காய்களை நகர்த்தாமல் எதிர் முனையில் இருக்கும் டெய்ல் எண்டர் விக்கெட்டை வீழ்த்த முயற்சி செய்து தோல்வி அடைவது என்பது தோனியின் வாடிக்கையான கேப்டன்சி அணுகுமுறையாக இருந்து வருகிறது.
கடந்த முறை இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி வாய்ப்புகளை இவர் தனது கேப்டன்சியினாலேயே கோட்டை விட்டார். 4-0 என்று மொத்த ரிசல்ட் காண்பித்தாலும் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி வாய்ப்பு இந்தியா பக்கம் இருக்கவே செய்தது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 188 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸில் இஷாந்த் சர்மாவின் எழுச்சிப் பந்து வீச்சினால் 62/5 என்று ஆனது. உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியபோது தோனியின் கேப்டன்சி அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. அவர் இஷாந்த் சர்மாவுக்குப் பதிலாக சுரேஷ் ரெய்னாவை பந்து வீச அழைத்தார். 10 ஓவர்களுக்குப் பிறகு இஷாந்த் சர்மா பந்து வீச வந்தபோது உடனடியாக மோர்கனை வீழ்த்தினார். 107/6 என்ற நிலையில் தோனி இன்னும் கொஞ்சம் கற்பனையுடன் ஆக்ரோஷமாக கள அமைப்பில் ஈடுபட்டிருந்தால் 130 ரன்களுக்குச் சுருட்டியிருக்கலாம். மேட் பிரையர், பிராட் எதிர் தாக்குதல் தொடுக்க உடனே ஃபீல்டர்களை பவுண்டரிக்கு அனுப்பினார் தோனி, இது இங்கிலாந்து பேட்ஸ்மென்களுக்கு பெரிய ஆறுதலாகப் போய் முடிந்தது.மேட் பிரையர் சதம் எடுக்க பிராட் அவருக்கு உறுதுணையாக ஆட வெற்றி இலக்கு அசாத்தியமான 458 ரன்களுக்குச் சென்றது. 300 ரன்கள் இலக்கு என்றால் இங்கிலாந்துக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும், ஆனால் தோனியின் வறட்டுத் தனமான கேப்டன்சியினால் அந்த டெஸ்ட்டில் கிடைத்த வாய்ப்பு பறிபோனது.
அடுத்த டெஸ்ட் போட்டி டிரெண்ட் பிரிட்ஜில் இந்தியா 319 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வி தழுவியது. அந்தத் தொடரே மறக்கப்பட வேண்டிய தொடரானது.
அதற்கு அடுத்த ஆஸ்திரேலியா தொடரிலும் பேட்ஸ்மென்கள் சொதப்ப பவுலர்கள் நன்றாக வீசினாலும் தோனியின் கேப்டன்சி பிழைகளினால் ஆஸ்திரேலியா சரிவு நிலையிலிருந்து மீண்டெழுந்ததைப் பார்க்க முடிந்தது. 39/4 என்ற நிலையில் மறு நாள் ஸ்லிப் இல்லாமல் வேகப்பந்து வீச்சாளர்களை வீசச் செய்தது. ஸ்பின்னர்களை விக்கெட் எடுக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தாமல் ஓவர்களை விரைவில் முடிக்கும் எந்திரமாக மாற்றியது என்று தோனி செய்த தவறுகள் ஏராளம்.
இந்தத் தொடரில் அதுபோன்ற தவறுகளை அவர் செய்யாமல் இருந்தாரேயானால் நிச்சயம் வாய்ப்பு இந்தியாவுக்கு இருக்கிறது.
ஏனெனில் இங்கிலாந்து அணி தற்போது மனதளவில் பலவீனமடைந்துள்ளது. இலங்கைக்கு எதிரான தோல்விக்குப் பிறகு அந்த அணி நிச்சயம் இந்தியாவுக்கு எதிராக எழுச்சியுறவே விரும்பும். அதனை தோனி எவ்வாறு பயன்படுத்தப்போகிறார் என்பதைப் பொறுத்து இந்தத் தொடர் அமையும்.
அலிஸ்டர் குக்...
இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக்கும் கிட்டத்தட்ட தோனி போலவே அணுகுமுறை கொண்டவர். அதாவது அணி வெற்றிப்பாதையில் இருக்கும்போது, தங்களுக்குச் சாதகமாக இருக்கும்போது பாசிடிவ் அணுகுமுறை வைத்துக்கொள்வது, எதிரணியினர் ஆதிக்கம் செலுத்தினால் மடிந்து விடுவது, அதாவது ஆட்டத்தை அதன் போக்கிற்கே விட்டுவிடுவது.
இதைத்தான் இயன் சாப்பல், ஷேன் வார்ன் போன்றவர்கள் குக் மீது விமர்சனமாக வைத்தனர். ஆகவே அவர் தனது அணுகுமுறையை மாற்ற விடாமல் இந்தியா ஆதிக்கம் செலுத்தியே ஆக வேண்டும். இந்தியா ஆதிக்கம் செலுத்தினால் குக் வித்தியாசமாக எதையும் யோசிக்க மாட்டார்.
எனவே ஒரு விதத்தில் தோனியும், குக்கும் ஒரே அணுகுமுறை கொண்டவர்களே. ஆனால் இங்கிலாந்து அணி இந்திய அணியை விட வலுவானது. காரணம் தொடக்க வீரர் ராப்சன், இயன் பெல், பாலன்ஸ் ஆகியோர் நன்றாக ஆடி வருகின்றனர். ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் வந்துள்ளார் எனவே இந்திய பந்து வீச்சுக்கு நெருக்கடி உண்டு.பவுலிங்கில் ஜேம்ஸ் ஆண்டர்சன் தலைமையில் பிராட், பிளன்கெட் நிச்சயம் இந்திய அணிக்கு பிரச்சினைகளைக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
பிட்ச்...
இந்தத் தொடரில் இந்தியாவைக் கவிழ்க்க பசுந்தரை ஆட்டக்களம் அமைக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்தாலும் இங்கிலாந்து அணிக்கும் அது மொகமட் ஷமி போன்ற பவுலர்கள் இருக்கும்போது சிக்கலைத் தோற்றுவிக்கும் என்பதால் பிட்ச்கள் பேட்டிங்கிற்குச் சாதகமாகவே அமையும் என்று கூறலாம்.
விறுவிறுப்பாக இருக்க வேண்டிய தொடர் மட்டையான பிட்ச்கள் மூலம் விறுவிறுப்பற்ற சொதப்பலான தொடராகக் கூட வாய்ப்பிருக்கிறது.
மைதான கியுரேட்டர்கள் டெஸ்ட் போட்டி 5 நாட்களுக்குச் செல்லவேண்டும் என்றும் அதிக கேட் கலெக்சன் ஆகவேண்டும் என்றும் நினைப்பதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சில மைதானங்கள் கடனில் இருப்பதால் கூட்டத்தை இழுக்க பேட்டிங் ஆட்டக்களமே அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளுக்கும் பெரிய சேதமில்லாமல் 1-1 என்று தொடர் டிரா ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அணித் தேர்வு:
இந்திய கேப்டனுக்கு உள்ள பெரும் சவால் 5 பவுலர்கள் 6 பேட்ஸ்மென்களைக் களமிறக்குவதா, அல்லது 7 பேட்ஸ்மென்கள் 4 பவுலர்களா என்பதில் பெரும் குழப்பம் ஏற்படும்.
5 பவுலர்கள் என்றால், ஷமி, புவனேஷ் குமார், இஷாந்த் சர்மா, ஜடேஜா, அஸ்வின் என்பது ஏற்கனவே முடிவெடுத்திருக்கப்படும். 6 பேட்ஸ்மென்கள் என்றால் விஜய் அல்லது கம்பீர், தவான், புஜாரா, கோலி, ரஹானே, தோனி. இப்படித்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
பங்கஜ் சிங் இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் நன்றாக வீசியுள்ளார். அதே போல் வருண் ஆரோனிடம் வேகம் உள்ளது. இவர்களில் யாராவது ஒருவரை அணியில் எடுத்து பரிசோதனை செய்து பார்க்கலாம். ஆனால் பெரும்பாலும் அணித் தேர்வில் தோனி பெரிதாக பரிசோதனை செய்ய மாட்டார் என்றே தோன்றுகிறது.
பங்கஜ் சிங், வருண் ஆரோன், ஈஷ்வர் பாண்டே ஆகியோருக்கு எந்த வேகப்பந்து விச்சாளருக்காவது காயம் ஏற்பட்டு ஆட முடியாமல் போனாலே வாய்ப்பு என்று தெரிகிறது.
அணி இவ்வாறு இருக்கலாம்:
விஜய், தவான், கம்பீர், புஜாரா, கோலி, ரஹானே, தோனி, ஜடேஜா அல்லது அஸ்வின் புவனேஷ் குமார், மொகமது ஷமி, இஷாந்த் சர்மா/ பங்கஜ் சிங்
இப்படி அணி அமைந்தால் பலமான பேட்டிங் அணியாக இருக்கும். அதாவது ஜடேஜா அல்லது அஸ்வின் உட்பட 8 பேர் பேட்டிங்கில் இருப்பார்கள். ஏனெனில் பலவீனமான பந்து வீச்சை வைத்துக் கொண்டு பேட்டிங்கில் வலு சேர்ப்பதுதான் நல்ல யோசனையாக இருக்க முடியும்.
5 டெஸ்ட் போட்டித் தொடரின் முதல் போட்டி நாளை 3.30 மணியளவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT