Published : 20 May 2023 05:12 AM
Last Updated : 20 May 2023 05:12 AM

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சிஎஸ்கே? - கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லியுடன் இன்று மோதல்

அஜிங்க்ய ரஹானே

புதுடெல்லி: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸுடன் மோதுகிறது.

4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சிஎஸ்கே 13 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழ்நிலையில் களமிறங்குகிறது சிஎஸ்கே அணி. ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே தோல்வியை சந்தித்தால் தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படக்கூடும்.

டெல்லி கேபிடல்ஸை வெல்லும் பட்சத்தில் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றில் நுழைவதை உறுதி செய்துவிடும். ஆனால் லீக் சுற்றை 2-வது இடத்துடன் நிறைவு செய்யுமா? அல்லது 3-வது இடத்துடன் நிறைவு செய்யுமா? என்பது இன்று இரவு கொல்கத்தாவில் நடைபெற உள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்மோதலின் முடிவில்தான் தெரிய வரும். ஏனெனில் லக்னோ அணியும் 15 புள்ளிகளுடன் உள்ளது. இருப்பினும் தற்போதைய நிலையில் சிஎஸ்கே ( 0.381)நிகர ரன் ரேட் அடிப்படையில் முன்னிலையில் உள்ளது. லக்னோவின் ரன் ரேட் 0.304 ஆக உள்ளது.

அருண் ஜேட்லி மைதானத்தின் மெதுவான தன்மை சிஎஸ்கேவின் கள திட்டங்களுக்கு பொருந்தக்கூடும். இதை தோனி சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்படக்கூடும். சிஎஸ்கேவின் பேட்டிங் வலுவாக உள்ளது. டாப் ஆர்டரில் டேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்ய ரஹானே ஆகியோர் திடமாக செயல்படுகின்றனர். நடு ஓவர்களில் ஷிவம் துபேவும் அசத்துகிறார்.

எனினும் அவருக்கு உறுதுணையாக அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி ஆகியோர் சிறந்த திறனை வெளிப்படுத்துவது அவசியம். ஏனெனில் இவர்களிடம் இருந்து இதுவரை பெரிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை. தோனி இன்னிங்ஸின் இறுதி நேரத்தில் சில கேமியோக்களை விளையாடி வருகிறார். பேட்டிங் வரிசையில் அவர், முன்னதாகவே களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றாலும் தோனி அதே பணியை தொடர்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பந்து வீச்சில் துஷார் தேஷ்பாண்டே அதிக ரன்களை விட்டுக்கொடுத்தாலும் தேவையான நேரத்தில் விக்கெட்டை வீழ்த்தி திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுப்பவராக திகழ்கிறார். இறுதி பகுதியில் சிறப்பாக செயல்படுவதில் மதீஷா பதிரனா சீராக முன்னேற்றம் அடைந்து வருகிறார். சுழற்பந்து வீச்சாளர்களான ஜடேஜா, மொயின் அலி, தீக்சனா ஆகியோர் டெல்லி அணியின் பேட்டிங் வரிசைக்கு நடு ஓவர்களில் அழுத்தம் கொடுக்க ஆயத்தமாக உள்ளனர்.

டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் இந்த சீசனில் கணிக்க முடியாத அணியாக உள்ளது.தொடரின் முதல் பாதியில் தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த டெல்லி அணியானது அடுத்த 8 ஆட்டங்களில் 5 வெற்றிகளை பதிவு செய்தது. 13 ஆட்டங்களில் 10 புள்ளிகளை பெற்றுள்ள அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்டது. இதனால் டெல்லி அணி அழுத்தம் இல்லாமல் விளையாடி வருகிறது.

பஞ்சாப் அணிக்கு எதிராக 213 ரன்களை விளாசி மிரளச்செய்திருந்தது. அந்த ஆட்டத்தில் ரீலி ரூசோவ் 37 பந்துகளில் 82 ரன்களை விளாசியிருந்தார். பிரித்வி ஷா அரை சதமும், டேவிட் வார்னர் 46 ரன்களும் சேர்த்து சிறந்த தொடக்கம் கொடுத்திருந்தனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். எனினும் இந்த சீசனில் அருண் ஜேட்லி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் 4 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. 2-ல் மட்டுமே வெற்றி கண்டது.

மெதுவான மற்றும் சீரற்ற ஆடுகளங்கள் காரணமாக இந்த சீசனில் சொந்த மைதானத்தில் எவ்வளவு ரன்கள் சேர்த்தால் போதுமானதாக இருக்கும், இலக்கை துரத்தும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய கணக்கீடுகளை டெல்லி கேபிடல்ஸ் சரியாக கணிக்க தவறியது. அக்சர் படேலின் சில கேமியோக்களைத் தவிர, டெல்லி கேபிடல்ஸ் அணியில் உள்ள மற்ற இந்திய வீரர்கள் பேட்டிங்கில் பங்களிப்பு செய்யவில்லை.

டெல்லி அணியின் பேட்டிங் பெரும்பாலும் வார்னர், மிட்செல் மார்ஷ், பில் சால்ட்,ரீலி ரூசோவ் ஆகியோரை சார்ந்தே இருந்து வந்துள்ளது. பிரித்வி ஷா 6 ஆட்டங்களில் விளையாடி 47 ரன்களே எடுத்திருந்தார். இதனால் தனது இடத்தை இழந்த அவர், தற்போது பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரை சதம் விளாசி மீண்டுள்ளார். அவரிடம் இருந்து மீண்டும் ஒரு உயர்மட்ட செயல்திறன் வெளிப்படக்கூடும். பந்து வீச்சில் இஷாந்த் சர்மா, கலீல் அகமது, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் நம்பிக்கை அளிக்கக் கூடியவர்களாக திகழ்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x