Published : 31 Oct 2017 05:41 PM
Last Updated : 31 Oct 2017 05:41 PM

அனில் கும்ப்ளே நீக்கப்பட்ட விதம் துரதிர்ஷ்டவசமானது: ராகுல் திராவிட் கருத்து

அனில் கும்ப்ளே இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து வெளியேறிய விதம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என ராகுல் திராவிட் கூறியுள்ளார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே பணியாற்றினார். சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்குப் பின், அவருக்கும், அணி வீரர்களுக்கும், குறிப்பாக விராட் கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதாகக் கூறப்படுகிறது.

கும்ப்ளேவின் அணுகுமுறை வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் வந்தன. இதைத் தொடர்ந்து கும்ப்ளே, தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அந்த சூழலில் இது தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் முன்னாள் வீரரும், அனில் கும்ப்ளேவுடன் விளையாடியவருமான ராகுல் திராவிட், தற்போது இது பற்றி கருத்து தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார்.

அவர் கூறுகையில், "அந்த சூழலில் குறிப்பிட்டு என்ன நடந்தது எனக்கு தெரியாது என்றாலும் கும்ப்ளே இதைப் போல நீக்கப்பட்டிருக்கக் கூடாது. மொத்த சர்ச்சையும் ஊடகங்களில் வெளியான விதம் கும்ப்ளேவைப் பொறுத்தவரை துரதிர்ஷ்டவசமானது. அவருக்கு அப்படி நிகழ்ந்திருக்கக் கூடாது.

அப்படி என்னதான் நிஜத்தில் நடந்தது, மூடிய கதவுகளுக்கு பின்னால் என்ன ஆனது என்பதைப் பற்றியெல்லாம் நான் அறியவில்லை. எனவே அதைப் பற்றி கருத்து கூறமுடியாது. ஆனால் அனில் கும்ப்ளேவைப் போன்ற ஒரு வீரருக்கு, அதிலும் இந்தியாவுக்காக பல டெஸ்ட் மேட்ச் வெற்றிகளை தேடித்தந்த மகத்தான வீரருக்கு பொது மக்கள் பார்வையில் இப்படி நிகழ்ந்திருக்கக் கூடாது. அவர் பயிற்சியாளராக இருந்த போதும் ஒரு வருடம் வெற்றிகரமாகத்தான் இருந்தார்.

பயிற்சியாளர்கள் நீக்கப்படுவார்கள். அது சகஜமே. விளையாடுவதை நிறுத்திய பின் பயிற்சியாளராக பொறுப்பேற்றாலே என்றோ ஒரு நாள் நாம் நீக்கப்படுவோம் என்பது தெரிந்ததுதான். அதுதான் யதார்த்தம். இந்தியா ஏ மற்றும் அண்டர் 19 அணிகளின் பயிற்சியாளரான நானும் ஒரு நாள் நீக்கப்படுவேன் என்பது எனக்குத் தெரியும். சில கால்பந்து அணி மேலாளர்கள் எல்லாம் 2 ஆட்டங்களில் நீக்கப்பட்டிருக்கிறார்கள். பயிற்சியாளர்களை விட வீரர்களுக்கே அதிகாரம் அதிகம் என்பதுதான் நிஜம். அது எங்களுக்கே தெரியும் ஏனென்றால் நாங்கள் விளையாடும் போதும் பயிற்சியாளரை விட எங்களுக்கே அதிகாரம் அதிகமாக இருந்தது.

பல கிரிக்கெட் வீரர்கள் எளிமையான நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களாகவே விளையாட ஆரம்பித்து பெரிய வீரர்களாக மாறுகிறார்கள். ஆழத்தில், சுற்றியிருக்கும் இந்த பரபரப்பு, ஊடக வெளிச்சத்தையெல்லாம் நீக்கிப் பார்த்தால் அவர்களும் சாதாரணமானவர்களாக இருந்து நாயகர்களானவர்களே. அவர்களின் ஆட்டம் அவர்களை நாயகர்களாக்கியது. அவர்களைப் பின் தொடர்ந்து, பேட்டிகள் கேட்டு, புத்தகங்கள் எழுதி அவர்களை இன்னும் பெரிய பிம்பங்களாக மாற்றியது ஊடகங்கள்தான். உங்களுக்கு நன்றி.

எப்படி கிரிக்கெட் வீரர்கள் பெரிய பிம்பமாக மாறினார்கள் என கேட்பதைப் பார்க்கிறேன். அதைச் சொல்வது எளிது. கிரிக்கெட் வீரர்கள் பணக்காரர்களாக ஆனதன் மூலம், அவர்களால் பணம் சேர்த்தவர்களும் அதிகம். அதுதான் இன்று யதார்த்தம். எப்படியிருந்தாலும் கிரிக்கெட் வீரர்கள் எளிமையானவர்களே. ஆனால் எல்லாம் அளவுக்கு மீறி சென்றுவிடுகிறது. அதனால் சில பிரச்சினைகளை வீரர்கள் கையாளும் முறை அதைச் சார்ந்தே இருக்கிறது".

இவ்வாறு திராவிட் பேசியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x