Published : 19 May 2023 05:50 PM
Last Updated : 19 May 2023 05:50 PM
ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2023 தொடரின் 65-வது போட்டியில் விராட் கோலி அற்புதமான அதிரடி சதத்தை சன் ரைசர்ஸ் அணிக்காக எடுத்து வெற்றி பெற்றுக் கொடுத்ததோடு ஆர்சிபியின் பிளே ஆஃப் வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியுள்ளார். மேலும், தான் தனது பிரதானமான பார்முக்கு திரும்பிவிட்டதாக கோலி அறிவித்துள்ளார். இதனையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ரிக்கி பாண்டிங் எச்சரித்துள்ளார்.
விராட் கோலி 63 பந்துகளில் 12 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 100 ரன்களை எடுத்து அபாரமாக விரட்டினார். விராட் கோலி பவர் ப்ளேவுக்குப் பிறகு மந்தமாக ஆடுகிறார் என்ற விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். இதைக் கூறும்போது நாம் இன்னொன்றையும் கூறி விடுவது நல்லது. ஹைதராபாத் பவுலிங் நல்ல தரமான ஸ்பின்னர்கள் இல்லாத அணியாகவும் வேகத்தில் ஒன்றுமில்லாமலும் இருந்தது. உம்ரன் மாலிக்கை ஏன் உட்கார வைக்கிறார்கள் என்பதும் புரியாத புதிர் என்றும் திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்றும் தெரியவில்லை என்று ஹைதராபாத் கேப்டன் மார்க்ரம் கூறியதும் பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில் எந்த வடிவத்திற்காகவும் தனது அடிப்படை பேட்டிங் உத்திகளை மாற்றிக் கொள்ளாமல் கோலி ஆடுவதுதான் டெஸ்ட் போட்டிகளில் இன்னமும் அவரை ஒரு அபாயகரமான வீரராக உலக அணிகளுக்கு நினைக்க வைக்கின்றது. இந்தச் சதத்தை வைத்து அவர் ஆஸ்திரேலியாவைப் புரட்டி எடுப்பார் என்று கூறுவதற்கில்லை. ஹைதராபாத்தின் தொசுக்குப் பவுலிங்கை வைத்து நாம் கோலியின் பார்ம் பற்றி கூறுவதற்கில்லை.
ஆனாலும், கோலி ஒரு அனுபவமிக்க வீரராக தன்னுடைய பேட்டிங் பழைய முழுமைச் சிறப்புக்குத் திரும்பி விட்டது என்று தன்னம்பிக்கையுடன் கூறியிருப்பதுதான் மிக மிக முக்கியமானது. கோலி போன்ற ஒரு ஜாம்பவான் இத்தகைய தன்னம்பிக்கைக்குத் திரும்பியுள்ளது, உலக கிரிக்கெட்டில் ரிட்டையர் ஆகும் முன் ஒரு பெரிய 2வது இன்னிங்ஸுக்கு அவர் தயார் என்பதையே காட்டுகின்றது.
இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், ஆஸ்திரேலியாவுக்கு பைனலை முன்னிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்: “பெங்களூரில் நாங்கள் விளையாடிய போது விராட் கோலியிடம் பேசினேன். அவரது பேட்டிங் குறித்தும் அவரது கரியரில் அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்றும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர் என்னிடம் கூறியது என்னவெனில், தான் தனது முழுமையான பார்முக்குத் திரும்பிவிட்டேன் என்றார். அதைத்தான் நேற்று சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான அவரது சதத்தில் நாம் பார்த்தோம். எனவே ஆஸ்திரேலியர்கள் எதிர்பார்க்கும் பரிசு விக்கெட் கோலியுடையதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்திய அணியின் டாப் ஆர்டருக்கும் ஆஸ்திரேலிய பந்து வீச்சுக்கும் எதிரான சுவாரஸ்யமான இறுதி போட்டியாக அது இருக்கும். பொதுவாக இந்திய ஸ்பின்னர்கள், ஆஸ்திரேலிய பேட்டர்கள் என்றுதான் போட்டி இருக்கும் இந்த முறை ஓவலில் பிட்ச் பேட்டிங்குக்குச் சாதகமாக இருக்கும், 4 அல்லது 5-ம் நாளில் ஸ்பின் எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார் பாண்டிங்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT