Published : 18 May 2023 04:58 PM
Last Updated : 18 May 2023 04:58 PM
டெல்லி கேப்பிடல்ஸ் அணி நேற்று 214 ரன்களை எடுக்க பஞ்சாப் கிங்ஸ் 198/8 என்று நெருக்கமாக வந்து தோற்றனர். அதுவும் கடைசி ஓவரில் 33 ரன்கள் தேவை எனும்போது கடைசி 3 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்று ஆட்டம் பஞ்சாப் அணிக்கு ஒரு வாய்ப்பை அளித்தது. ஆனால், இஷாந்த் சர்மா இரண்டு டாட் பால்களோடு லிவிங்ஸ்டோன் விக்கெட்டையும் வீழ்த்த, டெல்லி கேப்பிடல்ஸ் தன் 5-வது வெற்றியைப் பூர்த்தி செய்தது. இந்தப் போட்டியின் ஃபீல்டிங் தரம், உள்ளிட்ட சில விஷயங்கள் ஐபிஎல் போட்டி உலகத் தரம் வாய்ந்த ஒரு தொடர்தானா என்ற கேள்விகளை எழுப்புபவை.
தென் ஆப்பிரிக்காவின் ஹிட்டர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஸ்டாரானார். 37 பந்துகளில் 82 ரன்களை விளாசினார். கடைசியில் பஞ்சாப் அணியில் இங்கிலாந்தின் அதிரடி ஆல்ரவுண்டர் லிவிங்ஸ்டோன் 48 பந்துகளில் 94 ரன்களை விளாசினார். இவர் மட்டுமே வெற்றிக்காகப் போராடினார். ஆனால், இவருக்கு கிடைத்த சில லைஃப்கள்தான் ஐபிஎல் கிரிக்கெட்டின் தரத்தின் மீது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
முன்னதாக, பஞ்சாப் வீரர் அதர்வா டெய்ட் என்பவர் செம அறு அறு என்று அறுத்ததோடு, அவருக்கு பாவம் அடித்து ஆட வரவில்லை என்பது தெரிந்தது. 214 ரன்கள் சேசிங்கில் 42 பந்துகளில் 55 ரன்களை மட்டுமே அவர் எடுத்தது பஞ்சாப் அணியின் வாய்ப்புகளைத் தட்டிப் பறித்தது. இவருக்குப் பதிலாக வேறு ஒருவரை அனுப்பியிருக்க வேண்டும், அவரை அவுட் ஆகச் சொல்லியிருக்க வேண்டும் அல்லது அடித்து ஆடு என்று நெருக்கடி கொடுத்தால் அவர் அவுட் ஆகிவிடப்போகிறார். ஆனால், அவரை தம்பி நீ ரிட்டையர்ட் அவுட் ஆகு என்று பெவிலியனுக்கு அழைத்தது ஐபிஎல் கிரிக்கெட்டில்தான் நடக்கும். சரி அப்படியே அவரை ரிட்டையர்ட் அவுட் ஆகச் சொன்னது நல்ல முடிவுதான் என்றாலும், அதை முன் கூட்டியே செய்திருக்க வேண்டும். இரண்டும் கெட்டானாக பஞ்சாப் செய்ய கடைசியில் தோல்வியில்தான் முடிந்தது.
இந்தப் போட்டியின் தரம் மட்டுமல்ல, பல ஐபிஎல் போட்டிகளின் தரமும் நம் கேள்விகளை ஈர்ப்பவையே. பல போட்டிகளைக் குறிப்பிடலாம். ஆர்சிபி அணிக்கு எதிராக 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன ராஜஸ்தான் ராயல்ஸ். அதுவும் இதற்கு முந்தைய போட்டியில் ஆதிக்கமாக வென்ற பிறகு 55 ஆல் அவுட். இதேபோல் குஜராத் டைட்டன்ஸ் தோற்ற ஒரு மேட்ச், லக்னோ தோற்ற ஒரு மேட்ச், சிஎஸ்கே அணி கேகேஆருக்கு எதிராக தோற்ற மேட்ச் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்த மாதிரியெல்லாம் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே நடைபெறும். பாகிஸ்தான் சூப்பர் லீக், பிக்பாஷ் லீக், இங்கிலாந்தின் டி20 லீகுகளிலோ, கரீபியன் பிரீமியர் லீகிலோ இத்தகைய கூத்துக்களைப் பார்க்க முடியாது. நிச்சயம் ஐபிஎல் என்னும் ‘பிக் பாஸ்’ போல் மற்ற தனியார் டி20 தொடர்கள் இருப்பதில்லை என்று தரம் என்ற அளவுகோலை முன் வைத்துக் கூற முடியும். இங்கு உருவாக்கி தக்கவைக்கப்பட்டுள்ள மெகா சீரியல் மற்றும் பிக்பாஸ் கலாச்சாரங்கள் ஐபிஎல் போட்டிகளையும் சீரியஸாகப் பார்க்கவே வைக்கின்றது.
கிங்ஸின் அறுவை வீரர் டெய்ட் நேற்று குல்தீப் யாதவ் பந்தை தூக்கி லாங் ஆனில் அடிக்க பதிலி வீரர் யாஷ் துல் கையில் வந்த கேட்சை விட்டார். குல்தீப் யாதவ் பந்தில் லிவிங்ஸ்டோனுக்கு முதலில் கேட்சை விட்டனர். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பல மோசமான பீல்டிங்கில் இது நேற்றைய போட்டியின் தொடக்கம். பிறகு இதே குல்தீப் யாதவ் ஓவரில் ரிட்டையர்டு ஸ்பெஷல் டெய்டுக்கு ஒரு லைஃப் கொடுத்தனர்.
பிறகு டெய்டும், லிவிங்ஸ்டோனும் ரன் ஓடுவதில் கபடி கபடி ஆட இருவரையுமே ரன் அவுட் ஆகியிருக்கலாம். முதலில் டேவிட் வார்னர் ரன்னர் முனையில் எளிதான ரன் அவுட் வாய்ப்பை கோட்டை விட்டார். சரி! இதிலிருந்து தப்பித்தாரா வார்னர்? த்ரோ ஓவர் த்ரோவாக ரன் ஓடலாம் என்று லிவிங்ஸ்டோன் ஓடி சொதப்ப த்ரோவும் சரியாக அமையாமல் விக்கெட் கீப்பர் ஃபில் சால்ட் சரியாக பந்தைச் சேகரிக்காமல் தப்பினார் லிவிங்ஸ்டோன். ஒரே பந்தில் இத்தனை அபத்தங்கள் ஐபிஎல் என்னும் தரமற்ற போட்டித் தொடரில் மட்டுமே சாத்தியம்.
டெல்லி இன்னிங்ஸில் வார்னருக்கு ஒரு லைஃப் கொடுத்தார் ராகுல் சஹார். டெல்லி இன்னிங்ஸில் கட்டக் கடைசியில் ரபாடா செய்த மிஸ் பீல்டிங் என்று இது ஒரு போட்டியாகவா இருந்தது. ஆனால், ரன் மழை பெய்து கடைசி பந்து வரை போட்டி வந்ததால் அது தரமான போட்டி என்று தரம் இப்போதெல்லாம் விறுவிறுப்பு, சென்சேஷன் என்று ஆகிவிட்டது. கிரிக்கெட்டின் அடிப்படைத் தரம் கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டு விட்டது. இனி கிரிக்கெட் இப்படித்தான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT