Published : 18 May 2023 12:53 PM
Last Updated : 18 May 2023 12:53 PM
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடந்திருப்பதாக சொல்லி வழக்கறிஞரான அசோக் சக்கரவர்த்தி வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை நகர சிவில் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (மே 17), சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எதிராக இந்த வழக்கை அவர் தொடுத்துள்ளார். கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு சென்னை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சூழலில் அவர் இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளார்.
ஆன்லைன் மற்றும் கவுன்ட்டர் டிக்கெட் விற்பனையில் முறைகேடு தொடர்பாக பல தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. பெரும்பாலானவர்கள் டிக்கெட் கிடைக்கவில்லை என சொல்லி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
“சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனுக்கான டிக்கெட் விற்பனை சார்ந்த முறைகேடு, கள்ளச் சந்தையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது மற்றும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையிலான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளேன்.
சென்னையில் இதற்கு முன்பு நடந்த போட்டிகளின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு சார்ந்த விவரத்தை வழங்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது” என அசோக் சக்கரவர்த்தி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
மூத்த வழக்கறிஞர் கே.வெங்கடேசன் இந்த வழக்கு தொடர்பாக தனது தரப்பில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராவார் எனவும் அசோக் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். அதோடு சென்னையில் நடைபெற உள்ள பிளே ஆஃப் சுற்றின் குவாலிபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் பிளே ஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது. இன்று பகல் 12 மணி அளவில் டிக்கெட் விற்பனை தொடங்கியது. சில நிமிடங்களில் குவாலிபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. ரூ.2,000 தொடங்கி ரூ.5,000 வரையிலான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்யப்படுவதாக தகவல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT