Published : 17 May 2023 09:52 AM
Last Updated : 17 May 2023 09:52 AM

IND vs PAK | ஐசிசி வருவாயில் பெரும்பகுதியை பிசிசிஐ கபளீகரம் செய்ய அனுமதிப்பதா?- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் காட்டம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் நஜிம் சேத்தி (வலது)

ஐசிசி வரும் ஜூன் மாதம் அங்கீகரிக்கவுள்ள வருவாய் பகிர்மான புதிய வரைவு பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. ஒரு கிரிக்கெட் வாரியம் வருவாயின் பெரும்பங்கினை கபளீகரம் செய்வதா? என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் நஜிம் சேத்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்போது ஐசிசி-யின் வருவாய் பகிர்மான மாதிரியை அதன் படிமுறையை ஒருக்காலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதிக்காது, கையெழுத்து இடமாட்டோம் என்கிறார் நஜீம் சேத்தி. அதாவது 2024-27 கிரிக்கெட் போட்டிகளின் சுழற்சி ஆண்டில் ஆண்டு ஒன்றுக்கு பிசிசிஐ-யின் வருவாய் 230 மில்லியன் டாலர்கள், அதாவத் மொத்த ஐசிசி வருவாயில் 38.5 % ஆகும். ஐசிசியின் மொத்த ஆண்டு வருவாய் 600 மில்லியன் டாலர்களாகும். இதில் பிசிசிஐ மட்டுமே 230 மில்லியன் டாலர்களை சுருட்டுவதா என்று பாகிஸ்தான் கேள்வி எழுப்பியுள்ளது.

2024-27-ம் ஆண்டுகளில் வருவாய்ப் பகிர்மான அட்டவணை:

1.இந்தியா அதாவது பிசிசிஐ 231 மில்லியன் டாலர்கள் - மொத்த வருவாயில் 38.5%

2. இங்கிலாந்து - அதாவது இசிபி - 41.33 மில்லியன் டாலர்கள் - 6.89%

3. ஆஸ்திரேலியா - அதாவது சிஏ - 37.53 மில்லியன் டாலர்கள்- 6.25%

4. பாகிஸ்தான் - அதாவது பிசிபி -34.51 மில்லியன் டாலர்கள் - 5.75%

5. நியூஸிலாந்து - அதாவது என்சிபி - 28.38 மில்லியன் டாலர்கள் - 4.73%

6. வெஸ்ட் இண்டீஸ் - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் - 27.50 மில்லியன் டலார்கள் - 458%

7. இலங்கை - அதாவது எஸ்.எல்.சி - 27.12 மில்லியன் டாலர்கள்- 4.52%

8. வங்கதேசம் - 26.74 மில்லியன் டாலர்கள் - 4.46%

9. தென் ஆப்பிரிக்கா - சிஎஸ்ஏ-26.24 மில்லியன் டாலர்கள் - 4.37%

10. அயர்லாந்து - 18.04 மில்லியன் டாலர்கள் - 3.01%

11. ஜிம்பாப்வே - 17.64 மில்லியன் டாலர்கள் - 2.94%

12. ஆப்கானிஸ்தான் - 16.82 மில்லியன் டாலர்கள் - 2.80%

ஆகவே இந்த 12 முழு உறுப்பினர்கள் போக மீதமுள்ள தொகைதான் அசோசியேட் அணிகளின் வளர்ச்சிக்குச் செல்லும் .

அதாவது முழு உறுப்பினர் நாடுகளின் வாரியங்கள் 532.84 மில்லியன் டாலர்களை கபளீகரம் செய்ய , அதாவது 88.81% வருவாயை பாத்தியதையாகப் பெற, அசோசியேட் அணிகள் பெறுவது 67.16 மில்லியன் டாலர்களே அதாவது 11.19% தான்.

ஏற்கெனவே பிக் 3 மாடல் என்று பிசிசிஐ, கிரிக்கெட் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் செய்த வருவாய் பகிர்மான மாடல் கடும் சர்ச்சைகளை எழுப்ப அப்போதைய ஐசிசி தலைவர் ஷஷாங்க் மனோகர் அதை ரத்து செய்து வேறு பகிர்மான மாதிரியைப் பரிந்துரைத்தார்.

ஆனால் இப்போது மீண்டும் அதே பிக் 3 வருவாய் பகிர்வு மாடல் வேறு வகையில் உட்புகுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் சாடுகிறது.

இந்த வருவாய் பகிர்மானத்தை தீர்மானம் செய்ய 4 அளவுகோல்களை கையாண்டுள்ளனர். ஒன்று, அந்தந்த நாட்டு கிரிக்கெட் வரலாறு,

2. கடந்த 16 ஆண்டுகளில் ஆடவர் மற்றும் மகளிர் ஐசிசி கிரிக்கெட் ஆட்டங்களில் வெளிப்படுத்திய திறமை, வென்ற போட்டிகள், ஆடும் விதம் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக ஐசிசி கிரிக்கெட் போட்டிகளில் சீரான முறையில் நாக் அவுட் சுற்று வரை வந்துள்ள அணிகள், இது பெர்பாமன்ஸ் வெயிட்டேஜ் அளவுகோல் என்று கூறப்படுகின்றது.

3. இது முக்கியமானது, உண்மையில் இதுதான் தீர்மானிக்கின்றது. - ஐசிசி வருவாயில் பங்களிப்பு செய்யும் வர்த்தக வருவாய், எந்த நாட்டிலிருந்து அதிக வருவாய் உற்பத்தியாகின்றதோ அதன்படி வருவாய் பகிர்மானம்.

4. முழு உறுப்பினராக இருப்பதற்கான சம வெயிட்டேஜ்

இந்த 4 அளவுகோல்களுமே தன்னிச்சையாக, தன்னெழுச்சியாக உருவாக்கப்பட்டவை, இதன் மீது பாகிஸ்தான் ஏற்கெனவே கேள்வி எழுப்பியுள்ளது, கிரிக்கெட் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பிற வாரியங்களும் இந்த அளவுகோல்களை கேள்விக்குட்படுத்தவுள்ளன. முதலில் எந்த அடிப்படையில் இந்த அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் வருவாய்ப் பகிர்மானம் தீர்மானிக்கப்படுகிறது? பிக் 3 அணிகளான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வாரியங்களுக்கு இடையேயான வருவாய்ப் பகிர்மானத்திலேயே பிசிசிஐ-க்கும் மற்ற வாரியங்களுக்கும் இத்தனை இடைவெளி உள்ளதே.

ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பையை 10 அணிகளுக்கான நிகழ்வாக சுருக்கி விட்ட போது சீரான முறையில் ஐசிசி நாக் அவுட் சுற்றுக்கு இந்த 10 அணிகளிலிருந்துதானே வர முடியும்? அப்போது முழு உறுப்பினர் அணிகளிலேயே 2 அணிகள் விடுபட்டு விட்டது. இப்போது அசோசியேட் அணிகள் எதற்கு ஒப்புக்கு சப்பாணியா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. வருவாய் பங்களிப்பை காரணம் காட்டி ஒரே வாரியம் சுருட்டுவதை உறுப்பினர்கள் அங்கீகரிக்கக் கூடாது என்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

மற்ற வாரியங்களின் வருவாய்ப் பங்களிப்பை அதிகரிக்க ஐசிசி என்ன செய்தது? என்ற கேள்வி இருக்கவே செய்கிறது.

ஜூன் மாதம் நடைபெறும் ஐசிசி கூட்டத்தில் பரபரப்பாக இந்தக் கேள்விகள் எழும் என்று எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x