Published : 17 May 2023 08:45 AM
Last Updated : 17 May 2023 08:45 AM
அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கு குஜராத் டைட்டன்ஸ் அணி தகுதி வாய்ந்தது என அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி. ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த குஜராத் அணியானது ஷுப்மன் கில் விளாசிய 101 ரன்கள், சாய் சுதர்சன் சேர்த்த 47 ரன்கள் உதவியுடன் 188 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்திய ஹைதராபாத் அணியால் 9 விக்கெட்கள் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
13 ஆட்டங்களில் விளையாடி உள்ள குஜராத் அணிக்கு இது 9-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் 18 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்தது. இது குறித்து ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது:
தொடர்ச்சியாக 2-வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளோம். அணியில் உள்ள வீரர்களை நினைத்தால் பெருமையாக உள்ளது. சவாலான தருணங்களில் வீரர்கள் தங்களது கைகளை உயர்த்தி வெற்றி தேடிக்கொடுத்துள்ளனர். பிளே ஆஃப் சுற்றில் நுழைவதற்கு நாங்கள் தகுதியான அணிதான். எப்போதுமே எதிர்பார்ப்புகள் இருக்கும், என்னைப் பொறுத்தவரை குழுவிற்குள் கவனம் செலுத்துவது முக்கியம்.
நாங்கள் நிறைய தவறுகளைச் செய்தோம், ஆனால் எப்போதும் விளையாட்டில் இருந்தோம், சீராக இருக்க முயற்சித்தோம். பந்து வீச்சாளர்கள் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள். சிலநேரங்களில் பேட்டிங் செய்பவர்கள் அதிக மதிப்பைப் பெறுவார்கள், என்னைப் பொறுத்தவரை நான் எப்போதும் பந்துவீச்சாளர்களுக்கான கேப்டனாகவே இருப்பேன். மேலும் அவர்கள் மிகவும் தகுதியானதை பெறுவதை உறுதிசெய்வேன். இவ்வாறு ஹர்திக் பாண்டியா கூறினார்.
ஷுப்மன் கில்...
ஆட்ட நாயகன் விருது வென்ற ஷுப்மன் கில் கூறும்போது, “ஐபிஎல் தொடரில் எனது அறிமுக ஆட்டம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராகவே அமைந்திருந்தது. தற்போது அவர்களுக்கு எதிராக சதம் அடித்துள்ளேன். இது மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த ஆட்டம் குறித்து அதிகம் சிந்திக்கும் நபர் நான் இல்லை. இந்த தருணத்தில் என்ன தேவை என்பதிலேயே கவனம் செலுத்துவேன். அபிஷேக் சர்மா பந்தில் சிக்ஸர் விளாசிய தருணம் மிகவும் திருப்திகரமாக இருந்தது. ஏனெனில் அவர், எனது பால்ய நண்பர்” என்றார்.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT