Published : 16 May 2023 05:05 PM
Last Updated : 16 May 2023 05:05 PM
மும்பை: இந்திய டி20 கிரிக்கெட் அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுலுக்கு இடம் இல்லாத சூழல் அடுத்த 90 நாட்களில் நிகழலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரோகித், கோலி மற்றும் ராகுல் என மூவரும் கடந்த ஆண்டு நவம்பரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் விளையாடி இருந்தனர். அதன் பின்னர் மூவரும் சர்வதேச டி20 போட்டியில் விளையாடவில்லை. யஷஸ்வி ஜெயஸ்வால் மற்றும் ரிங்கு சிங் போன்ற வீரர்கள் ‘அட்டாக்கிங் பிராண்ட் ஆஃப் கிரிக்கெட்’ விளையாட்டை விளையாடுவதாகவும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
“அடுத்த தலைமுறையை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் டி20 ஃபார்மெட்டில் விளையாட தயாராகி விட்டனர் என நான் நினைக்கிறேன். அதனால் மூத்த வீரர்கள் இந்த புதிய டெம்ப்ளேட்டில் தங்களை பொருத்திக் கொள்வது சவாலான காரியம். இது ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான ஆண்டு. அதனால் இந்திய அணி குறைவான டி20 போட்டிகளில் தான் விளையாடும்.
அது மிக குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் அதில் ரோகித், கோலி மற்றும் ராகுலுக்கு இடம் இருக்க வாய்ப்பில்லை. இது அடுத்த 90 நாட்களில் நடக்கலாம். ஏனெனில், அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள ராகுல் எப்போது களம் திரும்புவார் என்பது இப்போதைக்கு தெரியவில்லை.
அதே நேரத்தில் அதிசயத்தக்க வகையில் யஷஸ்வி மற்றும் ரிங்குவின் ஆட்டம் நடப்பு ஐபிஎல் சீசனில் அமைந்துள்ளது. இவர்கள் இருவரும் ஐபிஎல் மட்டுமல்லாது டொமஸ்டிக் கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ரிங்குவின் சராசரி 60. குறைந்த எண்ணிக்கையிலான போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும் 1000+ ரன்களை குவித்துள்ளார் யஷஸ்வி” என அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT