Published : 27 Jul 2014 03:43 PM
Last Updated : 27 Jul 2014 03:43 PM

3-வது டெஸ்ட்: இஷாந்த் சர்மா இல்லை; இங்கிலாந்து முதலில் பேட்டிங்

செளதாம்ப்டனில் தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், இந்திய வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா காயம் காரணமாக இடம்பெறவில்லை.

இரண்டாவது டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட இஷாந்த் இல்லாத நிலையில், அவருக்கு பதிலாக பங்கஜ் சிங் களமிறக்கப்பட்டுள்ளார். இது இவருக்கு முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.

இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் சௌதாம்ப்டனில் இன்று தொடங்குகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்து களமிறங்கியிருக்கிறது.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டு 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா, இந்த டெஸ்ட் போட்டியிலும் வெற்றி கண்டு 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் முனைப்பில் களமிறங்கி இருக்கிறது.

மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கு இந்த டெஸ்ட் போட்டி நல்ல வாய்ப்பாகும்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இந்திய அணி விவரம்: முரளி விஜய், தவாண், புஜாரா, கோலி, ரோஹித் சர்மா, ரஹானே, தோனி (கேப்டன்), ஜடேஜா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி மற்றும் பங்கஜ் சிங்.

ரோஹித்துக்கு வாய்ப்பு

இந்தப் போட்டியில் ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னிக்குப் பதிலாக ரோஹித் சர்மா 6-வது பேட்ஸ்மேனாக இடம்பெற்றுள்ளார். முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஸ்டூவர்ட் பின்னி, மொத்தத்தில் 20 ஓவர்களை மட்டுமே வீசினார். அதிலும் லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் அவர் பந்துவீச அழைக்கப்படவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மா இடம்பெற்றுள்ளதால் பேட்ஸ்மேனாக மட்டுமின்றி, பகுதி நேர பந்துவீச்சாளராகவும் அவரைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

கலக்கும் முரளி விஜய்

பேட்டிங்கைப் பொறுத்தவரையில் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய், கடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி ஒரு சதம், 2 அரைசதம் உள்பட மொத்தம் 317 ரன்கள் குவித்துள்ளார். விஜயைத் தவிர வேறு எந்த வீரரும் இந்தத் தொடரில் இதுவரை 300 ரன்களை எட்டவில்லை. அவரின் சிறப்பான ஆட்டம் 3-வது டெஸ்ட் போட்டியிலும் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

அதேநேரத்தில் மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவண் தடுமாறி வருகிறார். அவர் நன்றாக ஆடும் பட்சத்தில் இந்தியாவுக்கு வலுவான தொடக்கம் அமையும். இதேபோல் மிடில் ஆர்டரில் புஜாரா, விராட் கோலி ஆகியோர் சிறப்பாக ஆடுவது மிக முக்கியமானதாகும். கடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கோலி இதுவரை 34 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

புவனேஸ்வர் 209 ரன்கள்

லார்ட்ஸ் டெஸ்டில் சதமடித்த ரஹானே, இந்தப் போட்டியில் நன்றாக ஆடுவார் என நம்பலாம். 6-வது பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மா களமிறக்கப்படுவார் என தெரிகிறது. இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 சதங்களை அடித்துள்ள ரோஹித் சர்மாவுக்கு இந்த போட்டி நல்ல வாய்ப்பாகும். அவர் சிறப்பாக ஆடும்பட்சத்தில் எஞ்சிய போட்டிகளில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

7-வது பேட்ஸ்மேன் இடத்தில் கேப்டன் தோனி களமிறங்குவார். பின்வரிசை பேட்டிங்கில் ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் இந்தியாவுக்கு பலம் சேர்க்கின்றனர். புவனேஸ்வர் குமார் 3 அரைசதங்களுடன் 209 ரன்கள் குவித்து இந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் 3-வது இடத்தில் உள்ளார்.

பந்துவீச்சு...

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், முகமது சமி கூட்டணி இதுவரை கலக்கியது. இப்போது, இஷாந்த் இல்லாத நிலையில், பங்கஜ் சிங்குடன் புவனேஸ்வர் குமார், முகமது சமி இருவரும் பந்துவீச்சை கவனிப்பர்.

நெருக்கடியில் இங்கிலாந்து

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி கண்டதால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் இங்கிலாந்து அணி, தோல்வியிலிருந்து மீண்டு வர வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளது. அந்த அணியைப் பொறுத்தவரையில் காயம் காரணமாக விலகிய விக்கெட் கீப்பர் மட் பிரையருக்குப் பதிலாக ஜோஸ் பட்லர் சேர்க்கப்பட்டுள்ளார். ஜோஸ் பட்லருக்கு இது அறிமுக டெஸ்ட் போட்டியாகும்.

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களில் கேரி பேலன்ஸ், ஜோ ரூட் ஆகியோர் தவிரைத் தவிர வேறு யாரும் ஜொலிக்கவில்லை. கேப்டன் குக், இயான் பெல் போன்ற மூத்த வீரர்கள் தொடர்ந்து தடுமாறி வருவது அந்த அணியின் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.

இங்கிலாந்துக்கு ஆறுதலான ஒரே விஷயம் அதன் பந்துவீச்சு மட்டும்தான். ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x