Published : 15 May 2023 08:40 AM
Last Updated : 15 May 2023 08:40 AM
சென்னையில் கடைசி லீக் போட்டியில் கொல்கத்தாவிடம் தோற்றதன் மூலம் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. கூடவே டாப் இரண்டு இடங்களில் சிஎஸ்கே முடிவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.
வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் இருவரும் சிஎஸ்கேவை ஆட்டிப்படைத்துவிட்டார்கள், இதனால் சிஎஸ்கே 144/6 என்று முடிந்தது. ஆனால் தீபக் சஹாரின் மோசமான பந்துகளுக்கு அதைவிட மோசமாக ஆடி ஜேசன் ராய், குர்பாஸ், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் சடுதியில் ஆட்டமிழக்க கொல்கத்தா ஏன் நாங்களும் இந்த இலக்கை எடுக்க முடியாமல் தோற்கக் கூடாதா என்ன என்பது போல் அவர் ப்ளேவுக்குள் 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
ஆனால் அதன் பிறகு நிதிஷ் ராணா, ரிங்கு சிங் ஆகியோர் இணைந்து 12 ஓவர்களில் 99 ரன்களை வெளுத்துக் கட்ட கொல்கத்தா அணி எளிதில் வெற்றி பெற்றது. மீண்டும் ரிங்கு சிங் ஒரு பினிஷராக எழுச்சி பெற்றார், நிதிஷ் ராணா ஒரு அருமையான கேப்டன் இன்னிங்ஸ் ஆடினார். நம் கேள்வியெல்லாம், நிதிஷ் ராணா ஒரு கேப்டனாக இறங்கி தன் தலைமைப் பண்புக்கு ஏற்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு 33/3 என்ற நிலையிலிருந்து கேப்டன் நிதிஷ் ராணா வெற்றிக்கு இட்டுச் சென்றார்.
ஆனால் தோனி களத்தில் முன்னிலையில் நிற்கும் கேப்டனாகச் செயல்பட்டு வருடங்கள் ஆகின்றன. 8ம் நிலையில் இறங்கி என்ன பயன்? கொஞ்சம் முன்னால் இறங்கி ஒருமுனையில் நின்று மற்றவர்களை வழிநடத்தியிருக்கலாமே. களத்தில் ஒரு மேலாளராக, மேற்பார்வையாளராகச் செயல்படுவது வேறு கேப்டன்சி என்பது வேறு. கேப்டன்சி அணியின் வேகத்துக்கு ஈடு கொடுத்து தானும் பங்கு பெறுவது, விக்கெட் கீப்பிங்கும் கூட அவரது ரிஃப்ளெக்ஸ் காலியாகிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. வெறும் வணிக காரணங்களுக்காக மட்டுமேதான் அவர் இன்னும் ஆடி வருகின்றார். அவர் ரிட்டையர் ஆவது அவர் கையிலேயே இல்லை என்றுதான் தோன்றுகின்றது.
பேட்டி கொடுக்கும் போது பனிப்பொழிவை வைத்துப் பார்க்கும் போது சிஎஸ்கேவுக்கு 180 ரன்கள் எடுத்திருந்தால்தான் வெற்றி சாத்தியம் என்று சொல்கிறார், இந்த சிந்தனை ஏன் தான் முன்னால் இறங்க வேண்டும் என்பதில் இல்லை? ஒரு துபே இறங்கி இந்த ட்ரிக்கி பிட்சில் பவுண்டரி அடிக்க முடியும் போது தோனி அங்கிருந்தால் அவரது அனுபவமும் அவரது இருப்பே கொல்கத்தா பவுலர்களுக்கும் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியிருக்குமல்லவா? இதெல்லாம் தோனிக்கே தெரியாதா என்ன? ஆனால் அவர் தன் பணியை ஒரு மேலாளராக, மேற்பார்வையாளராகச் சுருக்கிக் கொண்டு ரசிக சிகாமணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி கடைசியில் அவர்களுக்கு தரிசனம் கொடுக்க மட்டையைச் சுழற்றி கொண்டு வேண்டா வெறுப்பாக இறங்குவது போல்தான் தெரிகிறது.
பிளே ஆஃப் சுற்றிலாவது தோனி குறைந்தது ஒரு 5 ஓவர்களாவது களத்தில் நிற்குமாறு இறங்க வேண்டும் என்பதே தரிசன ரசிகர்களின் வேண்டுகோள் அல்ல, உண்மையான ரசிகர்களின் ஆவலாக இருக்கின்றது. இதை தோனி நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கொல்கத்தா வென்றதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு பிளே ஆஃப் கதவு லேசாகத் திறந்ததுதான் நடந்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கடைசி 2 போட்டிகளில் நல்ல ரன் ரேட்டில் வென்று விட்டால் சிஎஸ்கே முதல் இரண்டு இடங்களிலும் முடிவதே கூட கடினமாகி விடும். ஆகவே சிஎஸ்கே ரன் ரேட்டைத் தக்கவைக்க கேப்டன் தோனி தன் மட்டையை அனாயாசமாக மீதமுள்ள ஒரு போட்டியில் சுழற்றியே தீர வேண்டும். ஆகவே தோனி தன்னை முன்னால் இறக்கிக் கொள்வது பற்றி சிந்திக்க வேண்டும் என்பதே உண்மையான கிரிக்கெட் ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT