Published : 14 May 2023 06:06 AM
Last Updated : 14 May 2023 06:06 AM
சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.
தோனி தலைமையிலான சிஎஸ்கே 12 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்துவிடும். சிஎஸ்கே சொந்த மண்ணில் அடுத்தடுத்து இரு வெற்றிகளை பெற்ற நிலையில் இன்றைய போட்டியை அணுகுகிறது. பேட்டிங், பந்து வீச்சு என இரு துறையிலும் சிஎஸ்கே சிறந்து விளங்குகிறது. டேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான தொடக்கம் கொடுத்து வருகின்றனர். நடு ஓவர்களில் ஷிவம் துபே, அஜிங்க்ய ரஹானே ஆகியோர் தங்களது அதிரடியால் பலம் சேர்க்கின்றனர். மொயின் அலி, அம்பதி ராயுடு, ஜடேஜா ஆகியோரும் முடிந்த அளவுக்கு பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
இறுதி ஓவர்களில் தோனி மட்டையை சுழற்றுவது வலுவான இலக்கை கொடுக்கவும், துரத்தவும் ஏதுவாக உள்ளது. பந்து வீச்சில் தொடக்க ஓவர்களில் தீபக் ஷாகர், துஷார் தேஷ்பாண்டே சிறப்பாக செயல்படுகின்றனர். இதில் துஷார்தேஷ்பாண்டே அதிக ரன்களை விட்டுக்கொடுத்தாலும் விக்கெட் வீழ்த்தக்கூடியவராக திகழ்கிறார். சுழற்பந்து வீச்சில் ஜடேஜா, தீக்சனா,மொயின் அலி ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகின்றனர். இறுதிக்கட்ட ஓவர்களில் ‘பேபி மலிங்கா’ என அழைக்கப்படும் மதீஷா பதிரனா ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதுடன் விக்கெட் வேட்டையும் நிகழ்த்தி வருவது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. இவர்கள் கொல்கத்தா அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் அளிக்கக்கூடும்.
நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 12 ஆட்டங்களில் 10 புள்ளிகளுடன் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்க வேண்டுமென்றால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்குகிறது. எஞ்சியுள்ள இரு ஆட்டங்களிலும் கொல்கத்தா அணி வெற்றி பெற்றாலும் 14 புள்ளிகளையே அடைய முடியும். இது நிகழ்ந்தாலும் மற்ற ஆட்டங்களின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
சேப்பாக்கம் ஆடுகளம் சுழலுக்கு கைகொடுக்க தொடங்கி உள்ளதால் வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் சர்மா ஆகியோர் மீது எதிர்பார்ப்பு உள்ளது. அதேவேளையில் அனுபவம் வாய்ந்த சுனில் நரேன் மீண்டும் பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும். சிஎஸ்கே அணிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென்றால் மட்டை வீச்சில் கொல்கத்தா சிறப்பாக செயல்படுவது அவசியம். நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர் வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும். ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோரும் சீரான திறனை வெளிப்படுத்த வேண்டும். இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் கொல்கத்தா பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழக்கும்.
இந்த சீசனில் சிஎஸ்கே-கொல்கத்தா 2-வது முறையாக மோதுகின்றன. கடந்த 23-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே 49 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT