Published : 12 May 2023 02:35 PM
Last Updated : 12 May 2023 02:35 PM
மும்பை: யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அதிரடி பேட்டிங் திறன் மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களின் பார்வையை தன் பக்கமாக திருப்பியுள்ளார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணிக்கு எதிராக 13 பந்துகளில் அரைசதம் பதிவு செய்தார் ஜெய்ஸ்வால். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் எட்டிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
நடப்பு சீசன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மைதானங்களில் நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட மைதானம் என்று இல்லாமல் எங்கு சென்றாலும் சிறப்பாக ரன் குவித்து வருகிறார் அவர். நடப்பு சீசனில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் உள்ள டூப்ளசிக்கும், அவருக்கும் ஒரே ஒரு ரன் மட்டும் தான் வித்தியாசம்.
“ஜெய்ஸ்வால், இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கான வாய்ப்பிற்கான கதவை வெறுமனே தட்டவில்லை. தொடர்ச்சியாக ரன் குவித்து அதை தகர்த்துக் கொண்டுள்ளார். தனது அபார டொமஸ்டிக் கிரிக்கெட் ஃபார்மை அப்படியே ஐபிஎல் கிரிக்கெட்டிலும் தொடரச் செய்துள்ளார். என்ன ஒரு திறன் படைத்த வீரர். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் சிறப்பான வீரர்களின் கைகளில் இருக்கிறது. இதன் மூலம் தேர்வாளர்களின் பார்வையை தன் பக்கமாக திருப்பியுள்ளார்” என ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
ரவி சாஸ்திரி, விராட் கோலி என பலரும் இளம் வீரரான ஜெய்ஸ்வாலின் ஆட்டத்தை புகழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT